cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 2 விமர்சனம்

வேதநாயக்கின் “தேவதா உன் கோப்பை வழிகிறது” நூல் மதிப்புரை

அகராதி
Written by அகராதி

த்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள் நேரமும் சூழலும் கோரும் கவிதைகள்‌. மனவழிப் பிறந்த கவிதைகளில்

செவிவழி, நூல்வழி நம்முள் பயணித்துக் கொண்டிருக்கும் புராண இதிகாசவுருக்கள், நிகழ்வுகள் காட்சிகளாகவும் வருகின்றன.

இத்தொகுப்பினுள்,

  1. நேயத்திற்குரிய ஒரு சிறுமி அவளின் தன்மை மாறாமல் பகல்நேர ரயில் பெட்டியில் ஜன்னலோர இருக்கைவாசியின் பார்வையில் ஆங்காங்கே படும் சிறார் கூட்டம் போல் வருகிறாள்.
  1. கபடமற்ற சிறுவனொருவன் ஊர் எல்லையில் இருக்கின்ற குன்றுகள், மலைகள், வயல்கள், காடுகளில் திரிகிறான்.
  1. ஜென் குரு ஒருவர் அவ்வப்போது காலத்தை உணர்ந்த விழிகளுடன் வருகிறார்.

 

இருப்பென்னும் நாய் தாயத்து கவிதையில் இருத்தலின் காத்திரம் கூறி ‘அந்தரங்கத் துயரின் அடர்வை’ உள்ளுக்குள்ளேயே வைத்து விகசித்தலை தன்னைத் தானே காணும் மூன்றாம் மனிதராயும் பங்காற்றி, இறுகி மறைத்துக் கொள்ளும் பாங்கை

“கண்ணசைவிலும் கையசைவிலும் சேராமல் சுழித்தோடும் உதட்டசைவின் சமிக்ஞை வலைப்பின்னலின் விவரம் யாருங் காணாதிருக்கட்டும்” என்று “அரக்கு பூசிய ரகசியங்களின் அதரக் கதவுகளை” இறுக அடைத்துக் கொள்வதை ஆழ்ந்து சொல்கிறார்.

யாருமற்றத் தீவின் இருட்டறைக்குள் தனித்து விடப்பட்ட உணர்வு வந்து போக, நகுலனின்

யாருமில்லாத பிரதேசத்தில்

என்ன நடந்து கொண்டிருக்கிறது

எல்லாம்.” என்னும் வரிகள் நினைவிற்கு வருகிறது.

சொற்கள் நம்மைக் காட்டுகிறது. சொற்களினால் நாம் காட்டப்படுகிறோம். அச்சொற்களை உதிர்க்காமல் கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்ட தாயத்து இது.


சர்வ அலங்கார பூஷிதே

கவிதையில் உள்ள வரிகள் தன் வாயிலிருந்து தவறி விழுந்து விடும் தடிமனான ஒரு சொல்லின் வீரியம் மனம் பிசைந்து நிற்கச் செய்தலை விவரிக்கிறது. இறுதி வரிகளில் பலவீனனாய் தன்னுணர்ந்து பெண்ணின் பிரும்மாண்டம் முன் நின்று வணங்கிக் கொள்வதை காட்சிகளால் விரிக்கிறது கவிதை. சிலபோழ்து சொல் அரக்கன்.

உரூபிணி போதையேற்றும் விதமாய் நின்றிருந்தாள்

நெகிழாடைகள் மிக சுமாரான முன் தயாரிப்போடு துருத்தாமல் தளர்வடைந்திருக்கிறது

..

உக்கிரமான காதல் வெறியில்தான் தன் நடையை பயில்கிறாள் உள்ளறையில் 

என் செய இறைவா..

 

நேற்றைய பொழுதின் இடை சம்பாஷணையில்

ஒரு சொல்லால் தைத்து முடித்ததும் விலகிய எனது அகங்காரம்.

 

அவளது வாயிலில் செருகப் பெற்றிருந்த

சிறுமலர் கொத்தை

நகர்த்தி

உள் நுழைய பலந்தருமோ..?”

மகிஷாசுரனை வதம் செய்த பிறகு உக்கிரம் குறையா தேவியினை சாந்தப்படுத்த பாடப்பெற்ற பாடலாகக் கூறப்படும்

“அயிகிரி நந்தினி நந்தித மேதினி

விச்வ வினோதினி நந்தநுதே

கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி

விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே

பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி

பூரிகுடும்பினி பூரிக்ருதே….

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே…” அனிச்சையாய் நினைவிற்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.

தீ மிளிரும் குகையின் உட்புறம்

ஆதிமனித பழக்கதோஷப் புழக்கங்கள் இன்றும் தொடர்ந்து சோபிப்பதை ரசனையுடன் கூறுகிறது. குகையிலிருந்து இன்று வரையிலான பயணக்கதையை சுவைபடக் கூறியதை வாசிக்கையில் மென்சிரிப்பொன்று தவழ்கிறது.

ஆதியில் நிலமிருந்தது:

சதா நீர் வாங்கி சொத சொதத்திருந்தது

 

பெயரிடப்படா

தாது ஜீவ வகைகள் உயிர்த்திருந்தன

 

பன்னெடுங்காலத்திற்கு பின்

ஷக்தி தோன்றினள்

அவளை பூர்த்தி செய்ய அவனும்

முகிழ்ந்தான்

 

இடைவெட்டி தாயைப் புணர்தல்

இன்செஸ்ட் வகைமையில் வருமென்பவர்

வரிகளைக் கருக்கும் உரிமை

பெற்றவர் ஆவர்

 

கனத்த தோலணிகளுக்குள் குளிரையும்

குகைகளில் நெருப்பையும்

ஒருவாறு வைத்திருந்தனர்

 

மகப்பேறு சிசு காத்தலெனும் பல்வகைகளால்

அவள் வேட்டைக்கு வெளி வராமலாகி

சூல் காத்தலெனும் பெரு யாகம்

வளர்க்க ஆரம்பித்தனள்

 

வெளிப் போனவன்

எருமையிலிருந்து முயல் வரை அனைத்தையும்

உண்ணக் கொண்டு வருகிறான்

 

கிடத்தி பரப்பி கூர் கல்லால்

உடலகழ்ந்து தசைகளை அறுக்கையில்

வடியும் வியர்வையை

அவள் ஒற்றி எடுக்கிறாள்

 

குருதி தோய் கரங்களை

அப்படியே பிருஷ்டபாக

தோலாடையில்

துடைப்பதையும்

 

நிகழ்பொழுதின் நாட்களில்

வெளிர் நீல பார்க் அவென்யூ

(நீண்ட நாட்கள் சோபைக்கு உத்திரவாதம்)

ஜீன்ஸின் பின்புறத்தில்

 

கைகளை மீறி வழியும்

கேட்பரி சில்க்ன் கூழ்மத்தை

யதேச்சையாய்

தடவுவதையும் உற்று கவனித்து

 

இணைத்துக் கொண்டால்

போதும்.


சிறுசிறு குழந்தைமைச் செயல்பாடுகளைப் பிடித்து வைத்திருப்பதே பிழைப்பு வாத உலகிற்குள் பெரும் பொறாமையாய் வெடிக்கிறது. வெடித்துச் சிதறும் எருக்கன் விதைகளின் அலைக்கழிப்பு தேவதா உன் கோப்பை வழிகிறது என்ற நூலின் தலைப்புக் கவிதையில் விரவிக் கிடக்கிறது‌.

 

“…குழந்தைமைக்கு திரும்பாமல் இருப்பதெலாம்

ஒன்றுமில்லை

பேரறிவாண்மையின்

வார்த்தெடுக்கப்பட்ட கயமைதானே..” மறுப்பதற்கில்லை.


தலையற்ற இடத்தில் நாவின் பல்கிளைகள்

ஆறாம் அறிவு பெற்ற ஜீவராசிகள் தலைக்குள் இருக்கும் மூளை என்னும் வஸ்தினை மறந்து நடந்து கொள்ளுதலும் அதனால் ஒருவருக்கொருவர் பாதிக்கப்படுதலையும் சந்திக்காதவர் உண்டோ.. இங்கு இரவின் நாவுகள் சுழன்று எழுப்பி விடுகிறது இறைஞ்சலை….

யாரும் விழித்திடவே கூடாதென

இவ்விரவின் காதில்

மிக பரிதாபமாய் கெஞ்சுகிறேன் 

அல்லது மீளாத் துயிலுக்குச் செல்ல விரும்புகிறேன் எனும் இறைஞ்சுதல் கண்ணீர் கெட்டித்துப் போய் இருக்கும் தன்மையாய் ஒலிக்கிறது.

இறக்குமுன் எப்படியேனும் கண்டுபிடித்து விடுவேன் “ஆழ்ந்துறங்கச் செய்யும் உயிருடன் இருக்கும்” ஒருத்தியை. நம்பிக்கை ஒளி .


ஆதி நினைவில் தேங்கும் கசடு

தேங்கிய தேவையற்றக் கசடுகள்தான் மனதின் நோய்மைக்கும் உடலத்தின் நோய்மைக்கும் காரணமாகிறது.

திருகலான மொழியை

இப்படி அப்படி நகர்த்தி

ஆம்..

நேர்கோட்டில் செல்லாத

அரவின் அசைவோடுதான்

மாலையிலிருந்து நகர்த்தி பேச்சை வளர்க்கிறான்…”

அவன் வருவதற்கு

இரண்டு மணி நேரத்திற்கு முன் தான்

கைவிலக்கம் அடைந்தேன் என

யாராவது குறிப்பால் உணர்த்துங்களேன்

மெளனித்துக் கிடக்கும் பெண் நிமிடங்கள் சில வேளைகளில் சொற்களாக பிரவாகமெடுக்க விரும்பியதில்லை. அது அவளுக்கும் அவளுக்குமான நெருக்கம், வலி, சுகம். அத்தகையப் பொழுதுகளில் ஒன்றாகத்தான் இதுவும் அமைந்திருக்கிறது. நீட்டி நெளித்து தூபம் போடும் வேட்கை கொண்டவனிடத்தில் மாதவிடாய் நாளென்று கூற ஒரு சேதிப் பரிமாற்றக் குரல் தேவைப்படுதலை நயமாக உரைக்கிறது.


நிலம் இசைக்கும் பறவையின் முனகல் அழகு. நிலத்தினை உவமையாக வைத்து வள்ளுவர் கூறியவை சில. அவற்றினின்று நகர்ந்து பறவையின் முனகலை மொழி பெயர்க்கும் நிலம் வேறு வகை.  

துருப்புச் சீட்டென

மறைத்து மறைத்து

ஆட்ட இறுதியில் பயன்படுமென்று

வகைக்கு காத்திருத்தலில் பரமசுகம்…”

தலைப்பின் வழி நின்று யோசித்து ரசித்துப் பிறகு கவிதையை வாசிக்க வைத்தது. தனக்கான நேரம் வருமென்று காத்திருக்கும் மனதின் சுகத்தைப் பகிர்கிறது கவிதை.


உவர் நிலத்தின் வாடை

விளையத் தகுதியற்ற நிலமும் வேண்டும் என்பதுதானே இயற்கை.

 

இருப்பதாக இருத்திக் கொண்ட

ஊற்றின்மேல் அழுந்தியபடி

கல் பொதி

 

கசிவதின் தாத்பர்யத்தில்

அது அதனுடைய தர்க்கத்தை

ஒழுக்கியபடி நிகழ்த்துகிறது….

 

எல்லாம் சரி இங்கமர்ந்து

ஏது செய்ய..?

 

வற்றிப்போன மார்பக காம்பினை பிதுக்கி

கசியும் நிணமும் குருதியுமான

ஒரு சொட்டினை

பிள்ளையின் உதட்டின் மேல்

தடவ எத்தனிக்கும்

 

வெறும்

பேதைதானே நாம்.”

நாம் ஒரு எடையற்ற துரும்பு. காற்றின் போக்கிலோ நதியின் போக்கிலோ போய் தொலைந்து போகிறோம். ஆற்றல் கொண்ட இயற்கையின் முன் அற்ப துரும்பென அலையுறுவதாகச் சான்றோர் கூறியதை நிறுவும் இக்கவிதை, தத்துவியலுக்குள் உலவச் செய்கிறது.


‘கோப்பையின் விளிம்பில் வழியும் வாழ்வு’

ஒன்று

ஆறும் வரை காத்திருத்தல்

அதற்குள் ஆயுள் பூரணமடையும்

 

இன்னொன்று

அடியோடு தோண்டி எடுத்தல்

 

“… வாழ்வின் சாற்றினை மாந்த

ஒரே

கோப்பையைக் கொண்டு வர

இருவரும் வெவ்வேறு நேரத்தில் பருக

அதுவே வசதி

 

என்னும் கவிதை வரிகள் பிரமிளின்,

 

சிறிதில் பெரிதின் பளு

பாழின் இருளைத் தொட்டுன்

நுதலில் இட்ட பொட்டு

பார்வைக் கயிறு அறுந்து

இமையுள் மோதும் குருடு

ஓன்றும் ஏதும் இன்றி

;ன்மை நிலவி விரிதல்

வண்டியை விழுங்கும் பாலம்

மஞ்சம் கழித்த பஞ்சு

கூட்டை அழிக்கும் புயல்

புயலில் தவிக்கும் புள்

வாழ்வின் சூழலைத் துறந்து

என்றோ இழந்த வாசக்

காற்றுள் வீழும் ரோஜா

துணியே நைந்து இழையாய்

பஞ்சாய் பருத்தித் திரளாய்

பின்னே திருகும் செய்தி

காற்றை விழுங்கும் சுடர்

சுடரை உறிஞ்சும் திரி

வினையில் விளைவின் விடிவு

விளையா விடிவின் முடிவு

தொடங்காக் கதையின் இறுதி

நிறுத்தப் புள்ளிகளிடையே

அச்சுப் பிழைத்து

அழித்த வசனம்

வெறும்

வெண்தாள்ச் சூன்யம்.”

என்ற கவிதையை மெய்மைப்படுத்துவதாக அமைகிறது. அருந்துவது வேறு, வேறு நேரமெனினும் அருந்துவதே மெய்மை ஆகிறது இங்கே.


கைவிலக்கம், மாந்துதல் போன்ற தமிழ்ச் சொற்களின் பயன்பாடு உவகை அளிப்பதாக இருக்கிறது. அதே நேரம் கடினமான கவிதைகளாகத் தோற்றம் கொளச் செய்யும் சிலவும் உள்ளன. இதன் கடினத்தன்மை காரணமாக வாசகர் புறந்தள்ள வேண்டியதில்லை.

சங்கிலி முடிச்சுகளின் ஒரு நுனி கண்டுபிடித்திழுக்க படபடவென்று அவிழும் பொதி போன்று கவிதையின் ஒரு வார்த்தை கொள்ளும் அர்த்தமும் சூழலும் புரிந்து முழுமையும் வாசிக்கப் பொருளவிழ்கிறது. சன்னமான நீர்கோட்டின் பின்சென்று கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து பாயும் நதியினை அடைதல் சுகம் தானே.. வாசிப்பவர்களின் திறனை உயர்வித்துக் கொண்டு செல்லுதல் நல்ல படைப்பாளியின் இயல்பாகிறது. நூலாசிரியர் சமகால படைப்பாளர்களில் தவிர்க்க முடியாத படைப்பாளர். தொடர்ந்து செறிவு மிக்க படைப்புகளைக் கொண்டு வருதல் நலம். தொகுப்பின் அனைத்துக் கவிதைகளும் நெடிய கவிதைகள் தான். சில கவிதைகளின் அடுத்தடுத்த பத்திகள் தொடர்பற்றவை போன்ற தோற்றம் கொடுக்கின்றன. நேரம் கோரும் வரிகள்.

அழகான தலைப்புகள் கொடுத்துவிட்டு பொருளடக்கம் வைக்காமல் தவிர்த்தது ஏனென்று தெரியவில்லை. வாசிப்புத் திறனும் நற்சிந்தனையும் பரந்த பார்வையும், ‘கள்ளக்காதலி’ (வசீகரத்தின் விரல் இரேகைத்தடம்-ஐந்தாவது வரி) போன்ற சொற்பதத்தைக் கையாள்வதா…

பெரும்பான்மை வழியாக புராணத்தின் அகல்யை தெரிந்த அளவிற்கு வினதை தெரிந்திருப்பதில்லை. விக்டர் ஹியுகோவை தேடி அறிந்த பின்னரே தூய்மை விலக்கிய ஒழுங்குகள் என்னும் கவிதையை வாசிக்க இயலும். போலவே ஆன்டி வார்ஹோல், ஹோகுசை போன்ற பெயர்களும்… சிறு தடை.

தொகுப்பில் உள்ள கவிதைகளின் தலைப்புகளுக்கென்று தேவி ஒரு பூச்சொரிதலை நிகழ்த்தும் சாத்தியக்கூறுகளின் தகையுண்டு.

நாதங்கி அவிழும் ஒலிப்பிரிகை

திவலைகளின் கதை

பால்யநதியின் சுழிப்பில் உடையும் நுரை

இப்படித் தலைப்புகள் அழகழகு.. கவிதைகளை வாசித்துப் பின்னிருமுறை தலைப்புகளை வாசித்தல் உசிதம்.

வாசித்து அடுக்கிற்குள் வைத்து விட்டு ஒருநாள் எடுத்து வாசிக்கையில் பிறகும் கூட ஒரு புதிய செய்தி சொல்லும்… அந்த வகையில் இது வாசித்துக் கொண்டிருக்கும் நூலாக நிகழ்காலத்திலேயே தங்கிவிடக் கூடிய நூல்.. வழிந்து கொண்டிருக்கின்ற கோப்பை.


  • கவிதைத் தொகுப்பு : தேவதா… உன் கோப்பை வழிகிறது..!
  • ஆசிரியர் :  வேதநாயக்
  • பதிப்பு ஆண்டு :  ஜனவரி 2020
  • வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ்
  • விலை :  ₹ 200

About the author

அகராதி

அகராதி

திருச்சியை சார்ந்தவர். இவரின் இயற்பெயர் கவிதா. தமிழிலக்கிய பட்டதாரியான இவர் ”அகராதி” எனும் புனைபெயரில் படைப்புகளை எழுதி வருகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுப்பு வெட்கச் சலனம் எனும் பெயரில் வெளியாகி உள்ளது. பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் கதை, கவிதைப் படைப்புகள் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website