cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 34 விமர்சனம்

அய்யனார் ஈடாடி-யின் “மடியேந்தும் நிலங்கள்” – ஓர் அறிமுகம்


ற்றைத் திரிக்குள் ஒளிந்திருக்கும் வெடியின் வீரியம் ஓராயிரம் அசைவுகளை உருவாக்கிவிடுமல்லவா.

வரிகள் மூன்றுக்குள் வாழ்வின் பயணத்தையே படம்பிடிக்கும் காட்சிகளைக் கண்ணுறுகையில் பிரபஞ்சத்தை அளந்துவிடத் துடிக்கும் பேராற்றல் கிடைத்து விடக்கூடும்.

வாசிக்கும் தருணங்களுக்கேற்ப பொருளும் மாறி வழிநடத்தும் ஆற்றல் இத்தகு வரிகளுக்கு சாலப் பொருந்துகிறது. ஒவ்வொரு வாசிப்பிலும் புதுப்புது அர்த்தங்களை நமக்குள் நாமே தேடிக் கண்டடைய வைக்கும் திறனும் மூன்று வரிகளுக்குள் நிரம்பி நிற்கிறது. காணும் காட்சிகளை தனது எண்ணத்தின் விசைகளுக்கேற்ப உலகத்திற்கான படிமமெனப் படம்பிடித்துக் காட்டி பொதுமைப்படுத்தும் தன்மையும் ஹைக்கூ கவிதைகளுக்கு சிறப்புற அமைகிறது.

கிராமத்தின் எளிமை, எளிய மனிதர்களின் உயிரோட்டமான பண்புகள், தீய எண்ணங்களின் விளைவுகள், இயற்கையின் வளங்கள், இயற்கை மீதான மனிதர்களின் வன்முறைகள், சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணிகள், சாதியின் கொடுங்கரங்கள் தீண்டும் தருணங்கள் என தான் காணும் காட்சிகளின் மீதான தனது கவனத்தை வெளிப்படுத்தும் வரிகளில் மடியேந்துகிறது மனிதம்.

ஹைக்கூ கவிதைகளின் தனிச்சிறப்பே தருணங்களின் வழியே அவரவர் பார்வையை அதனுடன் பொருத்திப் பார்ப்பதுவே. தனது எண்ணங்களுக்குள் மேலும் இளைப்பாற்றிடவும் மூன்று வரிகள் முன் நிற்கின்றன.

கிராமத்தின் ஆன்மாவைச் சுமந்துகொண்டு அலையும் மனிதனுக்குள் காணும் எல்லோர் மீதும் அன்பும் பிரியமும் பூத்துக்கொண்டே இருக்கும். வெள்ளந்தியான தனது மனதால் தனது உழைப்பையும் காலத்தையும் மண்ணில் உரமாக்கும் அவர்களிடம் கற்றுக்கொள்ள பேரன்பே முன் நிற்கும். அத்தகு நிலையில் தன்னை அடைத்துக் கொண்ட கவிஞர் இந்நூலில் நமக்கான கிராமத்தை அறிமுகம் செய்கிறார். அதில் தானும் வாழ்ந்து களிப்படைகிறார்.சமூகத்தை பாழ்படுத்தும் செயல்களின் மீதான தனது அறச்சீற்றத்தை நமக்குள்ளும் கடத்துகிறார்.

விருப்பம் தலைதூக்குகையில் பணம் பொருட்டல்ல. ஆனால் வாழ்வின் நகர்தலே பணத்தை நம்பியிருக்கையில் ஆசையை நிறைவேற்ற ஏதேனும் ஒன்றை செய்துவிடப் பார்க்கிறது மனம்.

“உண்டியல் பணத்தைப்
போட்டுடைக்க வைத்தான்
வெண்ணிலா பணிக்கூழ் வண்டிக்காரன்”

சூழல் எதுவாயினும் தன்னைக் காத்துக்கொள்ள நம்பிக்கையிருக்கும் உயிரானது தடைகள் எதுவாயினும் தகர்த்தே வெளிப்படும் என்பதை பிரச்சனைகளுக்குள் போராடும் எல்லா மனிதர்களுக்கும் அருளிச் சொல்கிறது அரசங்கன்று.

“தண்ணீர்த் தொட்டிக்குள்ளிருந்து
தலை நீட்டுகிறது
அரசங்கன்றொன்று”

முன்னேற்றத்தின் ஓட்டத்தில் சுற்றுச்சூழலை சிதைத்து விட்டு நீர்நிலைகள் மாசுபற்றியும் நீரற்ற நெருக்கடியின் அவலம் பற்றியும் பேசித் தீர்க்கும் மனிதர்களை தோலுரிக்கிறது இந்த வரிகள்.

“குளத்து மேடு
உடுத்திப் பார்த்தது
கந்தல் துணிகளை”

வறுமையின் விளைவா? பிரிய மனமற்ற தருணமா ? பிடித்ததை இழக்கக்கூடாதென்ற ஏக்கமா ? என நிறைய வினாக்களை எழுப்பப் பார்க்கிறது இக்கவிதை.

“இரத்தவாடை பிடித்தது
துருவேறிய இரும்புக் கத்தி
கடைசி முகச்சவரம்”

தன்னை கவனிக்காமல் நாடியோரை வாழ்விக்க வைக்கும் எல்லா உள்ளங்களும் தாய்மையால் நிரம்பியவைதான். அன்பை விதைக்கும் இந்தக் கரங்களே இன்றைய வன்முறைக் காலத்திற்கான மாமருந்து.

“வெண்கலக் கும்பாவில்
பிசைந்த சோறு
மிச்சமில்லை கைகளுக்கு”

உயிர்களின் வளமையென்பது நீரிலும் அதன் தன்மையிலும் அடங்கியிருக்கிறது.மழை இல்லையென்றால் உலகத்தின் இயக்கமே திசைமாறி பாலைவனங்களையும் பாலைமனங்களையும் உருவாக்கிவிடும். உயிர் வாழ்தலுக்கான சக்தியைத் தந்து கடவுளாகி நிற்கும் மரங்களும் நீரைத் தேடும் அவலத்தை வழி மொழியும் இவ்வரிகளில் நிலம் நிழலின் பிடியிலாவது உயிர்ப்பை தக்கவைக்கந் போராடுவதை உணர முடிகிறது.

“தாழப் பறக்கும் தும்பிகளின்
நிழலைச் சுமக்கிறது
நீரற்ற நிலம்”

“கருவேலம் பூக்கள்
கொட்டிக் கிடக்கின்றன
கோடாரியின் பசி”

நாட்டில் வாழும் மனிதர்களின் வாழ்வுநிலையைவிட சில இடங்களில் சிலைகளுக்கு வழங்கப்படும் மரியாதை அதிகம். நேரம் ஒருவரை விரைவில் உயரத்தில் வைத்தும் அழகு பார்க்கும் அதுவே அவரை பாதாளத்திலும் தள்ளிவிடும். அரசியலின் லிளையாட்டில் உயிருள்ளவர்களைக் கவனிப்பதைவிட உயிரற்றவைகளுக்கான மாலையும் புகழும் நிறைந்திருக்கும் நாட்டில் வறுமையும் பூசலுமே மிகுந்திருக்கும்.

“தூசிப் படிந்த சிலைகள்
பூச்சூடின
தேர்தல் முடிவு”

வாழ்வின் நகர்தலில் வறுமையும் வறட்சியும் கைசேர்கையில் தடைக்கற்களையே தகர்த்தெறியத் துடிக்கும் மனங்களுக்கு பாடம் நடத்துகிறது இவ்வரிகள்.

“குத்தும் முட்கள்
மேய்கின்றன ஆடுகள்
கடும் வறட்சி”

இனத்தாலும் சாதியாலும் பிரிவினை வேண்டாது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனை வழிமொழிகிறதில்

“கருவறையைத் தொட்டன
சேரிப் பூக்கள்
யாவரும் அர்ச்சகரே”

என்ற வரிகள் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநிறுத்துகின்றன.

பெருகிப் போன வாகன நெரிசலில் விரையும் நேர நெருக்கடி அவசரத்தில் சாலைகளெங்கும் நிறைந்து விடுகின்றன மாசுகளின் ஊர்வலம்.தூசிப்பு அதிகரிக்க அதிகரிக்க உயிர்களின் ஓட்டம் தடைபடும் என்பதை மனிதர்கள் உணர வேண்டும்.

“செவ்வரளி செடிகளின்
தலைநிறைய தூசிப்பு
தேசிய நெடுஞ்சாலை”

நட்பு எல்லோருக்கும் வாய்த்திடக் கிடைக்காத பொக்கிஷம். குருதியில் இணையாத இதயங்களும் நேசத்தில் இணைசேர்கையில் மகிழ்வும் உற்சாகமும் பலமடங்காகிவிடுகின்றன. நீண்ட நாட்கள் சந்திக்காது போனாலும் மீண்டும் பார்த்திடத் துடிக்கும் நினைவுகளில் மிளிரும் நட்பைப் பேசுகிறது இவ்வரிகள்.

“விடுதித் தட்டில்
ஒட்டியே இருந்தன
நண்பர்களின் எச்சில்கள்”

கருவிகளின் ஆதிக்கம் களத்துமேடுகளை நிறைத்துவிட்ட இன்றைய சூழலில் கிராமத்தின் வயல் வேலைகளை நினைவிற்கு இழுத்துச் செல்கிறது இக்கவிதை.உழுது பயிரிடுதல் தொடங்கி களை எடுத்து உரம் வைத்து அறுவடை என எல்லா வேலைகளையும் மனித உழைப்பு நிறைத்திருந்த அன்றைய காலகட்டத்தில் நானும் இந்த அனுபவத்தை அடைந்திருக்கிறேன்.மருந்துகளோ மாத்திரைகளோ கொடுத்திடாத நிவாரணத்தை அவரவர் எச்சில்களே ஆற்றுப்படுத்திய காலத்தை இன்றைய தலைமுறை ஏற்றுக்கொள்ளவே யோசிக்கும்.

“கதிர் அறுப்பில்
ருசி பார்க்கிறது நாக்கு
காயம் பட்ட கைவிரல்களை”

வெட்டி வீழ்த்தப்படும் உறவைக்கூட வாழ்த்தியனுப்பும் மனம் மரங்களுக்குத்தானே வாய்க்கிறது. தாய்மரம் வேறிடம் செல்லுகையிலும் சேய்களின் நிலைப்பில் நிலமும் உயிர்வாழ்கிறது என்பதில் புதைந்திருக்கும் அன்பை எதாலும் ஈடு செய்ய இயலாது தானே.

“வரவேற்பிற்குப் போகிறது
குலை தள்ளிய வாழை
வழியனுப்பும் கன்றுகள்”

அறிலியல் யுகத்தில் கல்வியின் தாக்கம் அதிகரித்த போதிலும் சாதி நீக்கமற எங்கும் நிறைந்து மனங்களுக்குள் பிரிவினையையும் பேதத்தையும் விதைத்துக் கொண்டே இருக்கின்றன.

“எத்தனை பெரியார் வந்தாலும்
இன்னும் இருக்கிறது
இரட்டை டம்ளர் ”

என்ற எனது மின்மினிகள்( 1999 )ஹைக்கூ நூலில் இடம்பிடித்த கவிதையின் வேதனையை இதில் உணரமுடிகிறது

“சாக்கடையிலும்கூட
தனியாக ஓடியது
மேலத்தெருவும் கீழத்தெருவும்”

பகையைப் பகையால் வெல்வது இயலாத காரியம். பகை எப்போதும் பழிவாங்கலைத் தூண்டி ஒருவித பயத்தையும் வாழ்வில் தீராத வலியையும் உண்டாக்கிவிடும். பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே என்ற பாரதிப் புலவனின் வரிகளுக்குள் நிரம்பி வழியும் அன்பையே இந்த வரிகளின் வழியே சமூகத்திற்கு பாதை காட்டுகிறது மரம். அறிவில் குறையென்றாலும் நம்மை ஆள்வதில் நிறைவோடு நிற்கும் மரங்களின் வாழ்வில் நமக்கான பயணங்களுக்கு நிரம்பிடும் வெளிச்சங்கள் ஆயிரம்.

“கோடரியோடு வந்தவனுக்கும்
அட்சதை தூவுகின்றன
உச்சிக் கிளைகள்”

மடியேந்தும் நிலங்கள் தொகுப்பின் வழியே தனக்குள் ஒளிந்திருக்கும் கிராமத்தை எல்லோருக்கும் பசுமையாக்கிவிடும் ஆற்றலில் நம்மை நினைவுச் சுழலுக்குள் ஆச்சரியமூட்டுகிறது கவிஞரின் சிந்தனைகள்.


நூல் விபரம்

நூல் : டியேந்தும் நிலங்கள்
வகைமை : ஹைக்கூ கவிதைகள்
ஆசிரியர் : அய்யனார் ஈடாடி
வெளியீடு : அகநி
விலை : 80

About the author

இளையவன் சிவா

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய 'இளையவன் சிவா' திண்டுக்கல் மாவட்டம் - அய்யம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர். தற்சமயம் அரசுப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறார். மின்மினிகள், தூரிகையில் விரியும் காடு ஆகிய இரண்டு ஹைக்கூ நூல்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, கொலுசு, படைப்பு கல்வெட்டு போன்ற பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website