cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 34 விமர்சனம்

தேவதைகளால் தேடப்படுபவரின் கவிதைகள் எல்லோராலும் தேடப்படுபவை…

ஹரணி
Written by ஹரணி

புதுக்கவிதையின் பன்முகப் பரிமாணம் ஏற்படுத்தும் விளைவுகளில் அதீதமானவை சிலவே. இயல்பும் செறிவும் இலகுவான வெளிப்பாடும் இந்த அதீதங்களை மனத்துள் விதைத்துவிடுகின்றன. கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதைகள் இப்படித்தான் என் மனத்துள் நிற்கின்றன. அவரை ஒருமுறைகூட நான் நேரில் பார்த்ததில்லை ஆனால் முகநூல்களில் நேர்த்தியான அவர் கவிதைகளின் வழியாக அவருடன் நெருக்கம் நேர்ந்திருக்கிறது. எதையேனும் சொல்லவேண்டும் என்பதாக இல்லாமல் எதைச் சொன்னாலும் அதை சரியான சுவைக்குள், சொற்செட்டுக்குள், உணர்த்தும் நிலையில் உணர்வுகளை நெகிழவைக்கும் தன்மையிலேயே அவரின் கவிதைகள் இருக்கின்றன.
தேவதைகளால் தேடப்படுபவன் கவிதைத் தொகுப்பு சிறுசிறு துளிப்பாக்களை உள்ளடக்கிய கவிதை சரமாக ஒவ்வொரு பக்கத்திலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் அலங்காரம் என்பது எளிமையின் சாயல். தொடக்கம் கவிதையின் முடிப்பு என்பதை அழகாகக் கையாளும் திறன் மிக்கவராகக்  கவிஞர் இலங்குகிறார். வாழ்வியல் எதார்த்தங்களில் உளவியலையும் தத்துவவியலையும் இறைமையின் தன்மைகளையும் சொல்லாமல் உணர்த்தும் கலையில் மிளிர்கிறார்.
உறவுகளிடம் பேரன்பும் பரிவும் நெகிழ்வுமான தன்னை ஒப்புக்கொடுத்திருப்பதை எல்லாக் கவிதைகளிலும் காணும்போது கவிஞன் இயல்பாகவே அன்பிற்குத் தன்னைக் கொடுத்துவிடும் பண்பிலேயே நிமிர்கிறான் என்பதையுணர முடிகிறது. இந்நூலின் தொடக்கத்தில் சமர்ப்பணம் என்றில்லாமல் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அப்பா இவ்வளவு வெளிச்சமானதா இவ்வுலகம் என்று வியப்பவர் அவரின் இணை இல்லாத உலகில் எதுவும் வெளிச்சமில்லை என்கிற அன்புக்கட்டுக்குள் இந்நூலைத் தொடங்குகிறார். ஆயிரம் உறவுகள் கிளைத்துப்போகும் வாழ்வில் எந்தச் சூழலிலும் கணவனும் மனைவியுமான பிணைப்பு என்பது எதனோடு ஈடும் ஒப்பிடவும் இயலாத ஒன்றாகவே அல்லது செய்தால் அது தோல்வியாகவே முடியும் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ளத்தான் வேண்டியுள்ளது.
இருள் என்பது ஒரு குறியீடுதான். ஒளி என்பது நம்பிக்கை. எந்தவொரு வாழ்வையும் வளமாக்கும் நம்பிக்கை.
அப்போது /பூமியெங்கும்/பூத்திருந்தன/நிலவுகள். 
தனியொரு வாழவில் அல்ல பூமியில் உயிர்த்திருக்கும் எல்லோரின் வாழ்விலும் ஒளி வேண்டும் என்பதுதானே ஒரு கவிஞனின் மனமாக இருக்கக்கூடும்?  சொற்களின் இணைவோ, புணர்தலோ அல்ல கவிதை. அது இன்னும் ஆழமாகவும் தாண்டியும் எங்கோ ஓரிடத்தில் ஊன்றி உணர்வுகளை லேசான வெப்பமுடன் அதிரவைத்துக் கொண்டேயிருக்கையில்தான் அக்கவிதை நினைத்ததை நடத்தி முடிக்கிறது என்று கூறலாம்.
சுடரேற்றும் தருணத்திற்காகத் / தயாராகின்றன/ எல்லாச் சொற்களும். (பக்.8)
சுடரேற்றவேண்டும் கவிஞனும் சொற்களும் இணைந்துதான் இந்த சுடரை சொற்களுக்குள் ஏற்றவேண்டும். நாம் வாழும் வரைதான் எதுவும். நிலையாமைதான் நிலைத்து வாழும். ஆகவே இருக்கையில் உணர்வின் அடிப்படையில் விடுத்து மனத்தின் அடிப்படையில் வாழ்வை எதிர்கொள்ளும் தருணங்களில் வாழ்ந்துவிடவேண்டும். கடந்து முடியும் வாழ்வில் நினைப்பவை யாவும் கானல் நீராகத்தான் காட்சிப்படும்.
நன்றாய்/வாழ்ந்ததைப் போலிருக்கிறது/என்றோ/செத்ததைப் போலவும் இருக்கிறது (பக்.10)
திருவிழாக்கள் தொடங்கப்பட்டதன் நோக்கம் வேறு. நோக்கத்தை வலுப்படுத்த அல்லது மனத்துள் ஏற்ற கையாண்ட உத்திகளே இன்று பெருநோக்கமாய் மாறிவிட்ட அவலங்களையும் கவிஞர் குறிப்பிடுகையில்
அதன்பின்/நிரந்தரமாய் தங்கிவிட்டன/திருவிழாக்கள்/குழந்தைகளின் கனவுகளில்.. (பக்.16)
இதன்பொருள் ஒரு பண்பாட்டின் சிதைவை இழந்துவிடமுடியாமல் சேகரித்து வைக்க எண்ணும் கவிஞர் குழந்தைகளின் கனவுகளில் மட்டுமே சேமிக்கமுடிகிறது.  ஏனென்றால் இன்றைய குழந்தைகளின் நிஜங்களில் கைப்பேசி எனும் உயிர்க்கொள்ளி புகைந்துகொண்டிருக்கிறது. வாழ்வில் நாம் தேவையில்லை என்கிற ஒன்றை சரியாக விளங்கிக்கொள்ளாமல் விலகிவிட்ட வாழ்வின் அவலமே இத்தகைய போக்கு.
நிறமற்றிருக்கிறது / வாழ்க்கை (பக்.17)  என்பதும் இதைத்தான். அடிப்படையான அறப்பண்புகளைத் தொலைவிட்ட சமுகத்தில்தான் நாம் இப்போது பயணித்துக்கொண்டிருக்கிறோம். பண்பெனப்படுவது எனும் முழுக்கவிதையும் கசிய இதை வெளிப்படுத்துகிறது (பக்.30) வேறு வழியின்றிக் கவிஞர்
பண்பறியா/மனங்களுடன்/பகட்டாய்ச் சிரிக்கிறது/ இவ்வுலகு  என்று வேதனையுடன் முடிக்கிறார்.
இன்றைக்கான மனிதர்களைப் பற்றி அப்பட்டமாக எடுத்துரைக்கிறார். நிறைய கூத்துகள் இன்றைய படைப்புலகில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. நம் முன்னோடிப் படைப்பாளர்கள் எங்கேயும் தங்களைப் பிரபலபடுத்தி முன் மொழிந்ததில்லை. இன்றைக்கு ஆளுக்காள் செய்யும் செயல்பாடுகள் அருவருக்கத்தக்கனவாய் இருக்கின்றன. இவ்வுலகம் என்னால் உயிர்த்தது என்றும் நான்தான் உலகின் மிகச்சிறந்த படைப்பாளி, என்னைவிட யார் படைத்துவிடமுடியும்? நான் சொல்கிற படைப்புகளே இவ்வுலகின் தரமானவை என்கிற அற்பங்களையெல்லாம் அள்ளிக் கொட்டுகிறார்கள். அவை குப்பைகளைவிட அதிகம் நாறிக்கிடக்கின்றன.
கவிஞர் சுருக்கமாக எடுத்துக் கூறுகிறார்..
உங்கள் / பெருமை பேசும்/ பதாகைகளை/நீங்களே/ வடிவமைக்கிறீர்கள். (பக்.32).
தன்தூக்கிகள் எனும் அற்புதச் சொல்லால் இக்கவிதையின் எல்லாவற்றையும் இன்றைக்குப் பொருத்தமுற எண்ணித் தற்பெருமையாளர்களை விடுத்துத் தள்ளிப்போகலாம்.
 தன் பணத்தில் தனக்குக் கிரீடம், தன் புகழுக்குத் தானே இசை, தன் சரித்திரத்தை தானே எழுதுதல்.. இறுதியாய் முடிக்கிறார்..
நமக்கினி /வேலையில்லையென/நகைக்கிறது/காலம். 
காலத்தின் நகைப்பாளிகள் இந்த தன்தூக்கிகள்தாம்.
இன்றைய வாழ்வில் மனிதக் குரூரத்தைக் காட்சிப்படுத்துவது நெஞ்சில் நெருப்பைப் புதைக்கிறது.
நிழல் தந்தன / மரங்கள்/அங்கே மலம் கழித்தான்/ மனிதன் (பக்.42)
அவ்வளவுதான். இதைவிட சுருக்கென்று எப்படிச் சொல்லமுடியும்?
ஒவ்வொரு கவிதையும் வடிவம், படிமம், வெளிப்பாடு, எடுத்துக் கொண்ட பொருண்மை எனும் களங்களில் நின்று நிதானித்து உணர்வுகளைத் தூண்டுகிறது. சொல்ல வந்ததை அழகாக வாசிப்போர் மனத்துள் சிரமமின்றி வலியின்றி நுழைத்து நெகிழச் செய்யவும் நெஞ்சுருகி வலியைத் தாங்கச் செய்யவும் வருந்தவும் என நிகழ்த்துகிறார் சொற்களால் கவிஞர்.
சில சான்றுகளோடு நிறையலாம்.
ஆடம்பர அணிகலன்களோடு/அவதரித்த/எல்லாக் கடவுளின் கையிலும்/ஒரு செல்போன் ..
அனைவரும் கடந்தபின்/அந்த அரங்கெங்கிலும்/ சிதறிக் கிடந்தன/ குழந்தைகளின்/ மகிழ்ச்சிகளும் ஏமாற்றங்களும்.. (பக்.49)
கரையருகே கடைபரப்பி/மீன் விற்கும்/அந்த மூதாட்டி/ ஒருமுறைகூட / நிமிர்ந்து பார்க்கவில்லை/நீலப்பெருங்கடலை (பக்.58)
உதடுகள்/உணவூட்டும் வரை/பட்டினி கிடக்கின்றன/ புல்லாங்குழல்கள் (பக்.67)
அர்த்தமிழந்த சொற்கள்/சிலவற்றில்/கரைகிறதென் ஆயுள். (பக்.69)
அலட்டிக்கொள்ளாமல் இவ்வுலகின் நிகழ்வுகளில் தன்னைப் பிணைத்துக் கண்டறிந்தனவற்றைக் காட்சிப்படுத்திக் கவிதைகளாக்கித் தொடர்ந்திருக்கிறார் பயணத்தை. எல்லோருக்குள்ளும் இருக்கிற அன்பை, பரிவை, மனித நேயத்தை, உதவும் மனத்தை, அவலத்தில் துடிக்கும் ஏக்கத்தை, ஆதங்கத்தை, செய்யவேண்டியனவற்றில் இருந்து நழுவும் ஆசையை என எல்லாவற்றையும் தன் சொற்களில் தருகிறார் தேவதைகளால் தேடப்படுகிற இக்கவிஞன்.

வாசிக்கவேண்டிய தொகுப்பு. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பரிமாணத்தைத் தரக் காத்திருக்கும் தொகுப்பு. அகங்கனிந்த வாழத்துகள் கவிஞர் தங்கம் மூர்த்தி.


நூல் விபரம்

நூல்: தேவதைகளால் தேடப்படுபவன்

ஆசிரியர்: தங்கம் மூர்த்தி

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்

விலை :  ₹  70

About the author

ஹரணி

ஹரணி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website