வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூலின் மூலம் ஏர் மகாரசன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. வேளாண் மக்களின் பண்பாட்டு வழக்காறுகளை ஆய்வு செய்து தமிழ்ச் சமூகத்தில் பாராட்டுக்களைப் பெற்றவர்.ஆசிரியர் பணியோடு தொடர்ந்து எழுத்துப் பணியையும் விடாமல் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். மண்ணோடும் நிலத்தோடும் கிடந்தமையால் தனது எழுத்துக்களில் பாடுபொருள்கள் காணிகளையே உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. மண்ணின் வாடை வீசும் கவிதைகள் நூல் முழுவதும் நிறைந்துள்ளன. தான் வாழ்ந்த அனுபவங்களை உணர்வுப்பூர்வமான சொற்களாய் கட்டமைத்திருக்கிறார். அந்தச் சொற்கள் இந்நூலுக்கு வலுவைச் சேர்ப்பதோடு மட்டுமின்றி வாசகனின் ஆழ்மனதில் பதியப்படுகின்றன.
தொளிப்பிரட்டி போட்ட நாற்றங்காலில் நிரம்பி வழியும் விதை நெல் மணிகளாய் நிரம்பி வழிகின்றன நாற்றங்கால் கவிதைகள்.
பசப்படித்த நிலமும் ஈரம் பொதிந்த மண்ணும் சுமக்கும் வலிகளை பேசுகிறது இந்நூல். இனத்தின் பசியும் நிலத்தின் வலியும் கண்களில் நீரைத் திரட்டி கொப்பளிக்கச் செய்கின்றன.கங்குகள் சுமக்கும் பெருங்காட்டின் வேதனைகளைச் சொல்லி மாளாது.அகம் நொந்து முடிவுறாத ஒப்பாரிகளாய்ப் பாடுகின்றன.
தொல்நிலத்தின் காணிகளைப் பிடுங்கி எக்காளமிட்டுச் சிரிக்கும் முந்நிறத்துகொடி இன்றும் தூக்குக் கயிறுகளாய் எண்ணற்ற உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை பேசுகிறது இந்நூல் .
தொரட்டிகளால் முறிக்கப்பட்ட எம்நிலத்தின் பூங்கிளைகளைகளுக்காக அரற்றுத் துடிக்கிறாள் நிலத்தாய்ச்சி.
ஊர் தெறிக்கும் மணிக்குலவையோடு பிள்ளைமுடி வாங்கும் குடும்பச்சியின் நடுகை நினைவுச் சுடராய் நிமிர்கின்றன.சொல்லளந்து போட்ட குடுகுடுப்பை காரனுக்கு நெல்லலளந்து போடும் குடும்பச்சிகளின் வெள்ளந்தி மனம் மனதை இறுகப் பற்றித் தழுவுகிறது.
ஆதி நிலத்தாய்ச்சிகள் சிந்திய உதிரங்கள் உறைந்து கிடப்பதைக் காணமுடிகிறது மகாராசனின் எழுத்துக்களில். ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு வகையான கோணங்களில் சித்தரிக்கப்படுகின்றன.
ஏர் மகாராசன் அவர்களின் எழுத்துழவு நிலத்தின் பாடுகளைச் செம்மையாக பாடுகின்றன . சொற்கள் வெடிக்கின்றன.சங்க இலக்கியங்கள் ஆங்காங்கே அணிவகுத்து நிமிர்கிறது.
வெடித்துச் சிதறிய நிலத்தி மக்களின் வேதனைகள் சூட்டுக் காய்களாய் சுட்டுயிருக்கிறது கவிஞரின் வெள்ளந்தியான சிவந்த இதயத்தை.
இன்னுமோர் தலைவனைத் தேடித்தான் அலைகிறது காய்ந்த நிலத்தின் மடி, கிடத்தி அமர்வதற்கு.
மகாராசன் ஏரைப் பிடித்து உழுது விதைத்த வயலைச் சுற்றி நாருப் பெட்டியோடு அவரது அம்மா படியளக்கும் குடும்பச்சியாக வந்து கொண்டே இருக்கிறார் .
நெல் அவித்த அண்டாவில் இருந்து சோமாரும் போது மணக்கும் அவித்த நெல்லாய் நான் உணர்ந்த சில கவிதைகள் இங்கே
1.
இன்னும் மிச்சமிருக்கும்
புழுதிக் காடுகளின்
பனையோலைத் தூர் இடுக்குகளில் எச்சங்களை விதைத்துச் சென்ற
ஒரு பறவையின் நம்பிக்கை
ஆலமாய் இறுகப் பற்றி வளர்ந்திருக்கிறது.
குஞ்சுகளோடு தூரியாட
உயிர் நீட்டித் தொங்கி நீள்கின்றன விழுதுகள்.
வெளிரிய வானத்தில்
திசைகள் தேடிய பறவைகள்
கூடு திரும்பிய நாட்களில்
மனிதர்கள் யாருமேயில்லை.
நாதியற்றுக் கிடந்தாள்
நிலத்தாள் மட்டும்.
குக்கிராமங்களில் வாழும் எல்லோரும் காணக்கூடிய இயற்கையின் காட்சியை அழகியலின் ஒரு இயங்கியலை அசலாக காட்சிப்படுத்திருக்கிறார் கவிஞர் மகாராசன். ஆலமரமும் அய்யனார்கோயிலும் பறவையின் எச்சமும் ஆலம் விழுதுகளும் சமகாலத்தில் நம் கண்முன்னே நிறுத்தி ரசனையூட்டுகின்றன. புழுதிக் காடுகளை கொஞ்சம் மிச்சம் வைத்திருக்கின்றன என்பதை அறியமுடிகின்றது.
புழுதிக்காடுகளின் வாசம் தனித்து மிளிர்கின்றன. நாதியற்றுக்கிடப்பதோ நிலத்தாள் மட்டும் என்று எடுத்துரைக்கிறார் இக்கவிதையின் வாயிலாக.
2.
நிலத்தோடு தோய்ந்தும் தேய்ந்தும்
உழைப்புத் தடங்களால்
புடம்போட்ட பாதங்கள்
வெறும் பாதங்கள் அல்ல.
உழுகுடிப் பாதங்களின் கொப்புளங்கள்
நிலமெனும் ஆத்மாக்களின்
அழுகைத் துளிகள்…
உழைத்து உழைத்துத் தேய்ந்த உழுகுடிச் சம்சாரியின் பாதங்கள் வெடித்து நொந்து வேதனைப்படுவதை தத்தமது வலிகளாக கவிதையின் வழியே காயாங்களாக கொப்பளிக்கும் கண்ணீர்த் துளிகளாக அகத்தில் அடக்கிக் கொள்ளமுடியாமல் கூறுகிறார்.
3.
விதை நிலமெல்லாம்
வதை நிலமாகிக் கிடக்கிறது. சோறுடைத்த மண்ணெல்லாம்
வயிறு காய்ந்து கிடக்கிறது.
வியர்வை மணக்கும் நெல்லை
அள்ளிக் கொடுத்த கைகளெல்லாம்
பருக்கைகளுக்காகக் கையேந்தி நிற்கிறது.
இக்கவிதையை வாசிக்கும் போது மனம் அழுகின்றன. விதை நிலமெல்லாம் இன்று காணாமல் போய்விட்டன என்பததை புரிந்து கொள்ள முடிகிறது. சோற்றுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் வயிற்றின் பசியைச் சொல்கின்றன.
நெல்லை அளந்து போட்டு கைகள் எல்லாம் இன்று ஒரு பருக்கைகளுக்காக கையேந்தி நிற்கின்றன என்பதை ஆசிரியர் புலப்படுத்தியிருக்கிறார்.
காணிகளைப் பிடுங்கி விட்டு கூலிகளாக மாற்றிய ஆதிக்க வாதிகளின் தந்திரத்தை ஒப்பிட்டு பார்க்கமுடிகிறது.
4.
வெறுமை மண்டியிருக்கும்
வாழ்நிலத்தில்
கூந்தல் சூடத் தவிக்கின்றன
கைக்கிளைப் பூக்கள்.
பறவையின் வரவுக்காய்
கிளைக்காம்பில் காத்திருக்கின்றன
பெருந்திணைக் கனிகள்.
மும்முலைத் தாயவளின்
குறள் கசிந்த நிலத்தில்
வான்முலைத் தாய்ச்சியின்
மழைப்பால் குடித்துத் தவழ்கிறது
ஐந்திணைச் செவல் காடு.
எழுதிணைக் காமத்தின்
இன்பத்தில் திளைக்கிறது ஏழ்பிறப்பு.
நிலம் நிலமென இந்த பிரபஞ்சத்தின் பரந்த வெளியில் தன்னால் இயன்றவரை யாரும் சொல்ல முடியாததை செய்ய முடியாததை இயற்கை மரம் செடி கொடி மலை உழவு விதை காதல் என ஒரு ரசனைப்பாட்டாய் கவிதைகளில் பாடச்செய்திருக்கும் மகாராசன் போற்றக்கூடியவர் பாராட்டக்கூடியவர். எனது அன்பு முத்தங்களை வாழ்த்துகளாக அள்ளித் தெளிக்கிறேன்.
நூல்: நிலத்தில் முளைத்த சொற்கள்
ஆசிரியர்: ஏர் மகாராசன்
வெளியீடு: யாப்பு
பக்கங்கள்: 112
விலை : ₹ 100 /-