cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 36 விமர்சனம்

ஒரு லோடு மழையில் நனைந்தபடி..

சுபா .
Written by சுபா .
Getting your Trinity Audio player ready...

ஒரு வீட்டினுள் பிரவேசிக்கிறீர்கள். வாசல் பெருக்கித் தெளித்து பளிச்சென்று அழகான புள்ளிக்கோலம் போடப்பட்டுள்ளது. அந்த அழகினை ஏந்திக்கொண்டு இன்னும் இனிய எதிர்பார்ப்புடன் உள் நுழைவீர்கள்.

புத்தகம் ஒன்றில் முகவுரை வாசித்த பின்பே உள்நுழைவது எனது வழமை. எல்லாமும் இல்லாவிட்டாலும் ஆசிரியரின் குறிப்பை கட்டாயம் முதலில் படிப்பேன். இது உள்ளீடின் ஒழுங்கைச் சொல்லிவிடும். சேலம் ராஜாவின் ‘என்னுரை’ ஒரு கவித்துவம். அடுத்த கதவைத் திறக்க ஆவலுடன் அடியெடுத்து வைக்க அழைக்கிறது. காட்சியொன்றைக்கண்டு கடப்பதாயில்லாமல், காட்சிகளைப் படிக்கும் இக் கவிஞன், கூடூர் பிரிவின் கோலத்தை இதமான என்னுரையின் முடிவில் ஒரு சுமப்பாக ஏற்றி உள்ளே அனுப்புகிறார்.

தவிப்பு, துயர், நையாண்டி, நல்குரவு, இனிமை, இயல்பு, இயற்கை என எல்லாமும் எல்லா வகையாயும் கூறும் பனுவல் இது.

தங்கபாலுவின் மகளாகிப் போன யதி என்கிற பூனையின் குறும்பை வாஞ்சையோடு சொல்லும் வரிகள், தங்கபாலுவைக் கூட ஒரு கற்பனைச் சித்திரம் வரைந்து எம்மை சிநேகிக்க வைக்கிறது.

//முகமே தெரியாதவர்களை
நலம் விசாரிக்கும்போதே
இணக்கமாகிவிடுகின்றனர்
எதிர் வீட்டுக்காரர்களைப் போல.//

இது நான் அறியாத டோஷிலாவுக்குப் பொருந்தக் கூடும். நான் அறிந்த ராஜாவுக்கு பொருந்தியே விடுகிறது.
சில கவிதைகள் அன்றாட வாழ்வில் காட்சிப் படிமங்கள். ‘உலகின் அழகிகள்’, ‘சுந்தர் லாட்ஜில் காத்திருப்பவர்கள்’, ‘சங்ககாலக் குழி’, ‘கூடூர் பிரிவு’, ‘கச்சித ஏளனம்’, ‘அரைகுறை நேரம்’, ‘சுழற்சிகள்’, ‘சிறிய பயணம்’, ‘நிகழ்வு’, ‘மகிழ்வில் துள்ளும் நெடுஞ்சாலைக்கொடி’ போன்ற பாடல்கள் அன்றாடத்தின் பெரும் கதை சொல்லும் ஒரு குறுங்கதையைக் கவிதைக்குள் கொண்டவை.

//அடி நாக்கில் வெற்றிலை அரவையை
அதக்கியதக்கி
ஒரு கிள்ளு
கலைமான் புகையிலையை
எடுத்து வைத்துக்கொண்டாள்
வாயெல்லாம் சிவந்தவள்.//

நரிக்குறவப் பெண் உலக அழகியாகிறாள். பேருந்தில் காட்சியான அழகியல். சினிமாவின் நவ்யா நாயர் கனவின் அழகி. நிஜ அழகியைக் காணாது உலகம் தூங்குகிறது.

//கல்லடிபட்ட தெருநாய்களின்
பதற்றக் குரைப்பொலியைப் போல்
மும்முனைகளிலும் பேருந்துகள்
ஒலியெழுப்பிக்கொண்டோடும்
தினசரி ஆட்சியர் வாகனம் செல்லும்
காவலர் வாகனம் செல்லும்.//

ஒரு பரபரப்பான சந்திப்பின் ஒலிகளின் உவமிப்பு!சுந்தர் லாட்ஜ் என்பது பெயரில் மட்டும் நினைவாக இருப்பது. அங்கிருந்து எல்லாவிடமும் செல்லலாம். அறிவியல் கல்லூரி முதல் சிறைச்சாலை வரை. நாலு வகையான ஊர்களுக்கும் செல்லலாம். சுந்தர் லாட்ஜ் இருந்த இடம் ஒரு சிலுவை போல இருக்கிறது. ஆனால் இல்லாமல் இருக்கிறது, சிலுவைகள் சுமந்து ஓடித் திரியும் மனிதர்களைச் சந்தித்தபடி. என்றுமே திருத்தப்படாதிருக்கும் சங்ககாலக் குழிகளைக் கொண்ட வீதிகளின் இடர்கள். அதே தெருவால் பயணிக்கும் அமைச்சர் எதுவும் பார்க்காதவாறு கறுப்புப் படையால் சூழப்பட்டிருக்கிறார்.

//நிலாப் புள்ளிகளைப்போல் தூர்ந்து போயிருக்கின்றன கருஞ்சாலைகள்.//

//மழை வெந்துகொண்டிருக்கும் இரவு.//

//பரஸ்பரம் பட்டினியைச் சுமந்தபடி வார்த்தைகளை மென்றவர்களிலொருவன்
பல ஊர் அழுக்குத்திட்டைக் கரைத்துக்கொண்டு
கிருதாவினோரம் வழியும் மழையை
வழித்துக்கொண்டே கேட்டான்.//

கூடூர் பிரிவு! விபத்தின் காட்சி முதல் வரி. பாதிப்பின் விவரிப்பு மிகுதி. வானிருளே உடலறுபடுகிற பலநூறு வாகனங்களின் ஒளியும்,ஒலியும் நிரம்பிய அவ்விடத்தின் காரணக் காட்சி இறுதி வரி.

‘காட்சி பிம்பங்கள்’ கவிதையிலொன்று சொல்லும் ஒரு வரியிலும் இதே காட்சி மனத் திரையில் கடந்து போகிறது.

//சாலையில் கிடக்கும்
மூடப்படாத கண்களில்
ஊடுருவிக் கடந்துகொண்டிருப்பது
இது எத்தனையாவது காட்சியோ?!.//

‘சாயல்’ கவிதையைப் படித்தபின் கற்பனைப் பிம்பமாக என் மனதில் படிந்த அம்மா உருவத்தில், பாசாங்கலர் சேலை என்பது மட்டும் என்ன நிறத்தில் இருக்கும் என என் மொழியறிவுக்குத் தெரியவில்லை. வதங்கிச் சுருங்கிய அனைத்துக் கைகளாலும் சுற்றப்பட்ட எல்லா வதங்கிச் சுருங்கிய சேலைகளுக்கும் இந்த நிறம் இருக்கக்கூடும் என ஒன்றைக் கற்பனை செய்து கொண்டேன்.

அந்த அம்மாவின் ஈரம், பிள்ளையில் பிறப்பிக்கும் மழையாக அமைந்தவை, ‘அம்மாவின் அழைப்பு’, ‘அம்மாவின் பாடல்’ மற்றும் ‘ஒரு லோடு மழை ஏற்றுபவன்’.

//வெயிலால் உடலெல்லாம் எரிகிறது
என அவள் கூறுகையில்
ஒரு ரோஜாப்பூவை
தீயில் சுடும் காட்சி மனத்திரையில் விரிகிறது
ச்சே அது எவ்வளவு துயரம்//

எனது பாடசாலை வகுப்புத் தமிழ் ஆசிரியை பெயர் மணிவண்ணன் மிஸ். வட்ட முகம், குங்குமம், இனிய அமைதியான சோகம் அப்பிய முகம். என் மணிவண்ணன் மிஸ்ஸிற்கும் கோபமே வராது. தலையில் பூ வைப்பது இல்லை. ஆனால் மிதமாக வாடிய ஜெயப்பிரதா டீச்சரின் ஊசி மல்லி எனக்கு மணிவண்ணன் மிஸ்ஸின் முகம் போல இருக்கிறது. இனிமேல் மல்லிப்பூ வாசம் ஜெயப்பிரதா டீச்சர், மணிவண்ணன் மிஸ் இரண்டு பேரையுமே எனக்கு ஞாபகப்படுத்தி விடப் போகிறது. சில முகங்கள், முகம் பார்க்கும் கண்ணாடி மூலையில் ஒட்டி வைத்த பழைய முருகன் பட ஸ்டிக்கர் போல் படிந்து விடுகின்றன. ஜெயப்பிரதா டீச்சர் பற்றிய இந்தக் கவிதை வாசிக்க வந்து மணிவண்ணன் மிஸ் போய்க்கொண்டிருப்பதை நான் காணத் தொடங்கி விட்டேன்.

சேலம் ராஜா

‘காத்திருப்பு’ கவிதை நான் பிறந்த நிலத்தின் துயர். மூன்று வெவ்வேறு நிலைகளிலுள்ள ஈழத் தமிழர் வாழ்விற்கு இது பொருந்தும் எனத் தோன்றிற்று. ஒன்று இந்தியாவில் அகதியாக இருப்பவர்கள், அடுத்தது வெளிநாட்டிற்கு அகதியாகத் தஞ்சம் கோரி வந்து மிக நீண்ட காலமாகக் குடும்பத்தைப் பிரிந்து நிரந்தர வதிவுரிமைக்காகக் காத்திருப்போர், மற்றொன்று போரில் காணாமலாக்கப்பட்டோர்.

எப்போது திரும்புவது என்பதை சிறு சிறு செய்கைகளின் அழகியலைக் குறிக்கும் கால அளவையின் பதில்களாகச் சொல்லிவிட்டு, ‘நீ என்னை மறந்து உறங்கியெழும்போது..’ என்பதில் இனி திரும்பவே போவதில்லை என்கிற உண்மையின் வலியை விடையாக்குகிறது அப்பாவின் வார்த்தை. மீண்டும் சிறு மகளை ஆறுதல் படுத்தும்படியாக ‘இல்லையில்லை உன் இளங் கையிலுள்ள மருதாணிச் சிவப்பு மறையும் முன் மகளே’ என்று பதறி முடிக்கிறது. என் மண்ணின் கதையுமாதலால், எனது நெஞ்சைக் கீறிவிட்டுச் சென்ற பாடல் இது.

வெயில் எரிக்கும் நெடுஞ்சாலைக் கரைகளில் அவ்வப்போது ஓரிரு பெரு மரங்களின் பச்சையம் புள்ளி வைத்திருப்பதைப் போல வந்து போகின்றன காதலி அல்லது பெண்கள் பற்றிய சில கவிதைகள். ‘கனவில் வாழ்வது’, ‘அவள் பிணக்கில் இருக்கிறாள்’, ‘நெஞ்சச் சகதியில் பூக்கும் மலர்’, ‘கிளை எங்கும் சிரிப்பவள்’, ‘மயில் நீல மை’ என்பன இவை.

//இப்பொழுதெல்லாம்
கவளச் சோற்றிற்காக
வாயைப் பிளந்து கிடக்கும்
நாயைப்போல என்னுடைய வாட்சப் கதவு
திறந்தே கிடக்கிறது//.

இன்னும் சிலவை, இயற்கையின் மற்றும் அன்றாடத்தின் இனிய நிகழ்வுகள்.

‘பூவெயில் பறவை’, ‘விடியல்’, ‘அவசரத்தை ரசிக்கும் கவிதை’ இப்படியானவையும் சிறு சாரல் மேகமாய் கடந்து செல்பவை.

//இரண்டு கால்களால்
பலமுறை அவசரமாக ஓடுவதற்குள்
மழை தன் ஆயிரம் கால்களால்
நிலமெங்கும் ஓடுகிறது.//

மாறிவிட்ட காலத்தைக் காட்டும் ‘நகரத்து மேய்ப்பர்கள்’, அதே அவர்களின் அப்பன்கள் இன்னும் இருக்கும் கிராமத்து விவசாய வேதனையைச் சொல்லும் ‘மிச்சம்’, இரு வேறுபட்ட கவிகள்.

ஒரு எழுத்தாளனின் எந்தவொரு எழுத்திலும் அவனது சொந்த அனுபவம் அடித்தளமாக அமையும் அல்லது புனைவின் ஏதோவொரு இடத்திலாவது அதன் பாதிப்பு இருக்குமென்பது நான் நம்புவது. வாழ்வுக்கும் எழுத்துக்கும் பேதம் இல்லாதவர்களின் படைப்பு ஏனோ மனதுக்கு நெருக்கமாகி விடுகிறது. அதிலிருக்கும் சத்தியம் காரணமாக இருக்கலாம். ‘ஒரு லோடு மழை ஏற்றுபவன்’ நிஜ நிகழ்வுகளின் பிரதிபலிப்பு.

இது தவிர சில பகிர்தல்கள் நம் சொந்த இயல்புடனும் இயைந்து விடுகின்றன. இவை இன்னும் நாம் எழுதிக்கொள்ளாத எமக்கானவையாகவும் ஆகிவிடுகின்றன.

‘நான்’, ‘மறதியில் வாழ்பவர்கள்’, ‘இல்லாத போதுகள்’, ‘நான் இப்படித்தான் மெல்ல ஒடிந்துபோகக் கூடியவனாக இருக்கிறேன்’, ‘சிறுமையின் சுயக் குறிப்புகள்’, ‘இரண்டு வாழ்வு’, ‘மௌனப்பிரிவு’, இந்தக் கவிதைகளை நான் எனக்கான பாடல்களாகவும் ஆக்கிக் கொண்டேன்.

//இறுதி ஊர்வலத்தில்
இறுதியாக விழுந்த .பூ//

//நீங்கள் என்பது இவ்வளவு தானா
என எண்ணிக் கசியும் நீரை
துடைக்காமல் விடும்போது.//

//நீங்கள் ஆகாயத்தை வேண்டும்போது
என் காலுக்கடியில் ஊர்ந்து செல்லும்
அட்டைப்பூச்சிக்காய் நடையிடறி வீழ்பவன்.//

//அத்தோடு அவர்கட்கும் எனக்கும்
இடையே உள்ள
ஒட்டுமொத்தப் பந்தமும்
காய் அறுக்கத் தொரட்டியிட்டபோது
முறிந்து வீழ்ந்த
முருங்கைக் கிளையென
நம்பிக்கொள்கிறார்கள்.//

இவற்றிலெல்லாம் நான் இப்படித்தான் ஒடிந்து போகக் கூடியவளாக இருப்பதைப் பொருத்திக் கொண்டேன்.

//தாம்பு சுற்றும் மாடுகளைப்போல
கயிற்றை
சரியாக இறுகப்பற்றவில்லையெனில்
தடம் மாறத்துடிக்கு.ம்//

‘இந்த உடல்’ பற்றிய கவிதையும், ‘அரைகுறை நேரம்’, ‘சுழற்சிகள்’ ஆகிய பிணியின் காட்சிகளும்,

//யாருக்கும்
எத்தொந்தரவும் தராத
ஒரு மரணம் நிகழும் காலம்
இன்னும்
எவ்வளவு தொலைவில் உள்ளது என்பது
யாருக்கும் தெரியவில்லை.//

என்று வாழ்வின் மெய்மையைச் சொல்லும் ‘அகாலத்தில் செல்பவன் தரும் துயரிலும்’

ஒரு பெருமூச்சுடன் பயணித்துச் செல்கிறது இவ் வாசிப்பு.

ராஜாவின் ஒவ்வொரு பாடலும் இறுதிப் பகுதியில் சொல்ல வந்த செய்தியை இறக்கிவிட்டுச் சென்றபடி ஒரு மின்னலை அல்லது இடியைக் கடத்தி நிற்கின்றன.

முதற் கவிதையில் தங்கபாலுவிற்கு யதி எனும் பூனை ஒரு குழந்தை என்று காட்டுவதிலிருந்து, இறுதிக் கவியில் ‘நொய்க்குருணைக்காக பகலுக்கு வந்துதான் ஆகவேண்டுமென்பது ஒரு கவிதையின் துயரம்’ எனத் தாய்மை என்கிற கவிதையின் அச்சத்தை விபரிப்பது வரை.

அதே நேரம் இவரின் இக்கவிகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. அடுத்தடுத்த கவிதைகளுக்கு நிறுத்தமின்றி வாசகரைப் பயணிக்க வைப்பதற்கு ஒவ்வொன்றுக்குமிடையிலான வேறுபாடுகளும் ஓரு மேலதிக காரணம் எனலாம்.
தூறல், சாரல், பெயல், மாரி, சோனை, அடை, ஆலங்கட்டி என மழைத்து நனைத்து, ஈரம் படர்த்திக் குளிர்த்து, அதன் பாரமும் தந்து கிளைப்பவை.எனது இன்று வாழும் ஊரில் வெம்மை தகிக்கிறது. ஆனால் நான் நனைந்து நிற்கிறேன்.

வாழ்த்துகள் சேலம் ராஜா! . இன்னும் இதுபோல பல மனித மனங்களை திறந்து காட்டுங்கள்.


நூல் விபரம்

நூல்: ஒரு லோடு மழை ஏற்றுபவன்

ஆசிரியர்: சேலம் ராஜா

வெளியீடு: இடையன் இடைச்சி நூலகம்

பக்கங்கள்:

விலை :  ₹ 140

நூலைப் பெற : +919841208152

About the author

சுபா .

சுபா .

தேர்ந்த இலக்கிய வாசிப்பாளரான சுபா இலங்கையை சார்ந்தவர். பணி நிமித்தமாக வெளிநாட்டில் வசிக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website