ஊருக்கு ஒதுக்குப்புறமான காலனியில் எங்கள் மூத்திரத்தை நாங்களே மொண்டு ஊற்றும் குடிசைதான் எனக்கு வாழ்வைப் பழக்கிவிட்ட மாளிகை. நின்னா,நடந்தா, சிரிச்சா, படிச்சா, குதிச்சா, துரத்தி வர்ற பிரம்ப வீசி எறிய கொஞ்சம் காத்திரமாகவே எழுதுகிறேன் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் பிரியதர்ஷினி பள்ளிக் கல்வித் துறையின் கவிதைப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர். பள்ளி ஆசிரியர் மற்றும் துப்புரவுப் பணியாளர் குழந்தைகளுக்கான சமூகப் பணி தொண்டு நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார். இவருடைய கவிதைகள் படைப்பு அணங்கு நீலம் காற்று வெளி இந்து தமிழ் திசை, குவிகம் நடு இதழ், நுட்பம், கழகம், கொலுசு போன்ற முன்னணி இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இவரது முதல் கவிதைத் தொகுப்பு இது.
மலரின் புன்னகைக்குள் மறைந்திருக்கும் எரிமலை கவிதைகள்.
தனக்கான வெளியைக் கட்டமைக்கத் துடிக்கும் மனதுக்கும் தன்னை ஓயாமல் இயங்கவிடாமல் துரத்தும் ஆதிக்க வெறிக்கு எதிராக மண்ணை முட்டும் விதையைப் போல எதிர்வினையாற்றத் துடிக்கும் வாழ்வுக்கும் இடைப்பட்டு நிற்கும் கவிதைகளும் அதன் வலிகளும் நூலெங்கும் எதிரொலிக்கின்றன.
தோடயம் என்பதற்கு நாடகத்தில் கடவுளை எதிர்கொள்வதற்கான பாடல் என்று பொருள். சமூகத்தில் பெண்களின் மீதான வன்முறையை எதிர்கொள்ளும் பெண்கள் கடவுளை எங்கே என்று தேடி தனது வினாக்களுக்கான விடையைத் தேடும் கவிதைகளாகவே நூல் முழுக்க அலங்கரிக்கின்றன.
பிறப்பால் ஆணும் பெண்ணும் சமம் என்ற போதிலும் வளரும் பருவத்தில் பெண்கள் பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் பாவாடை தாவணியில் வலம் வந்த பெண்கள் இன்று பலவிதமான நாகரீக ஆடைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தம்மை அழகுபடுத்திக் கொள்கிறார்கள். அதேசமயம் பெண்களின் மீதான ஆண்களின் பார்வை இன்று அதிக அளவு பாலியல் சீண்டல்களைத் தூண்டக்கூடியதாகவே அமைந்து விடுகிறது. இதற்கான காரணம் என்ன இன்று உலகம் முழுவதும் பெண்கள் பாலியல் வன்கொடுமையினால் துன்புறுத்தப்படுகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள் சில சமயங்களில் இறப்பையும் தேடிக் கொள்கிறார்கள். அறிவியல் வளர்ச்சியில் அடுத்தடுத்த நிலைகளுக்குத் தம்மை புகுத்திக் கொள்ளும் மனிதன் மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பின்னோக்கிச் செல்லத் தொடங்கி விலங்குகளாக மாறியதன் விளைவாகவே அவர்களுக்குள் பாலியல் தூண்டல்கள் எழுந்து விடுகின்றனவோ என்றே ஐயுறவேண்டியிருக்கிறது. இத்தகு ஆண்களுக்கு எதிரான பெண்கள் இன்னும் மௌனம் சாதிப்பதும் தம்மைப் போராட்டக் களத்திற்கு ஒப்புக்கொடுக்க முடியாத சூழலில் வாழ்வதும் ஆண்களுக்குச் சாதகமான அம்சத்தை உருவாக்கி விடுகின்றன.
தோடயம் அத்தகு மனநிலைக்கு எதிரான கவிதைகளை உணர்ச்சியின் கைக்கொண்டும் பெண் தன்னை உணர்ந்து கொள்வதன் அவசியத்தையும் எடுத்துரைக்கின்றது
நூலின் அனைத்துக் கவிதைகளும் நீண்ட கவிதைகளாக இடம் பெற்று பெண்ணின் வலியையும் வேதனையையும் வெளிப்படுத்தி நம்மை நமக்குள்ளேயே கேள்வி கேட்க வைக்கின்றன. சில கவிதைகளை மேற்கோள்களாக அறியும் போதே நூல் எந்த இலக்கை நோக்கி எழுதப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது
“மேன்மாடக் கண்களில் படாதபடி
அம்மாவின் துத்த உடல் மரிக்கட்டும்”
***
“என் மீதான பகையும் இருளும்
எதன் சூனியமாய் விலகி வெளி பிறக்குமோ
நானும் அப்போது பிறந்து கொள்வேன்.”
***
“செயற்கைக்கோள் அனுப்பியதெல்லாம் போதும்
என் இடுப்பிற்குக் கீழ் மாட்டிக் கொள்ள
இரும்பு வளையங்கள் செய்து தாருங்கள்”
***
“நள்ளிரவில் வேலை பார்த்துவிட்டு
வீடு திரும்பும் தந்தை இல்லாத பெண்கள் மட்டும்
சில வேசைச் சொற்களை
ஹேண்ட் பேக்கில் எடுத்து வருகிறார்கள்”
“ஊர் திரும்பும் கடலே
ஊர் திரும்பும் நதியே
ஊர் திரும்பும் குளமே
காலனித் தெருவை கடக்கும் போது மட்டும்
பெயர் சொல்லாமல் கடந்து விடு”
“முறிந்த விரல்களால் எழுதும்
தடுமாறும் எழுத்துக்களில் நிறைந்திருக்கும்
அஞ்ஞானமாய் எல்லோருடைய கழுத்திலும்
தடித்துச் சிரிக்கிறது
தேர்ந்த கள்வர்களின் சாவி”
***
“பெரும் பசியில் நீட்டி நிற்கிறேன்
இரு கைகளை
சிலுவை சுமந்தபடியே
கசையடியாய் விழுந்தது
சாதியும் மதமும்”
***
மேலத்தெருவும் கீழத்தெருவும் இல்லாத
ஜனநாயகத் தெருவில்
குடியேற்றம் புக
நெடிய நாட்களாய் வீடு பார்க்கிறேன்
என்னை புகுத்திக் கொள்ள
விரும்பியவர்கள் எல்லாம்
மண்டையோடு மனிதர்களே”
***
”க்ராப் வெட்டிய பெண்கள்
சாலையில் எங்கினும் தென்பட்டால்
கொஞ்சம் ரசித்துக் கொள்ளுங்கள்
ஏதேனும் ஒரு கேன்சர் தோழி
கண்ணாடி பார்க்க
காரணமாக இருக்கலாம் அவள்”
***
“குடிசைகளில் நாங்கள் மறைவதும்
குடிசைகளை மறைப்பதும்
என் முழங்கால் அற்ற
தேசத்தின் பண்பாடு
மற்றும்
கைநாட்டுப்பற்று”
நூல் முழுக்க பெண்ணியத்தை மட்டுமே பேசும் 52 கவிதைகள் இடம் பெற்று பெண் அரசியலை, பெண் உரிமையை, பெண்ணின் மொழியை, பேசாது தனக்குள்ளே அடங்கிக் கிடக்கும் பெண்ணின் பார்வையை, முந்தைய தலைமுறையிடமிருந்து தன்னை வளர்க்கத் துடிக்கும் புதிர்க் கனவுகளைப் பாடிச் செல்கின்றன.
தன் வலியை எவ்வித உறைகளுக்குள்ளும் போட்டு மூடி வைக்காமல் சமூகத்தின் செவிப்பறை அதிர கத்திச்சொல்லும் கவிஞர் நூல் முழுக்க பதிவு செய்யும் நுண்ணுணர்வுகளைக் கொஞ்சமாவது பரிசீலிக்க வேண்டும் என்ற பேரவா தெரிகிறது.
பல நூற்றாண்டுகளாகக் கொடிகட்டிப் பறக்கும் பெண் அடிமைத்தனத்தை வளர்க்கும் ஆதிக்க மனப்பான்மையை மாற்றுவது என்பது ஒற்றை நொடியில் முடிந்து விடப் போவதில்லை. இருள் இருள் என்று தன்னைச் சூழ்ந்திருக்கும் இருளுக்குள் ஒளிந்து கொண்டிருக்காமல் சிறு வெளிச்சத்தை ஏற்றும் அகல் விளக்காகவாவது எழுந்து வருகிறது தோடயம் கவிதைகள்.
மன ஆழத்தில் புதைந்திருக்கும் எழுத்துச் சுரங்கத்திலிருந்து விடுதலைக்கான சொற்களையும் சமத்துவத்திற்கான சொற்களையும் மதிப்பை மேம்படுத்தும் சொற்களையும் தேர்ந்தெடுத்து தீராத வேட்கையின் கனம் கூட்டி சொற்சித்திரத்தை வரைந்திருக்கிறார் கவிஞர் பிரியதர்ஷினி.
நூல்: தோடயம்
ஆசிரியர்: பிரியதர்ஷினி
வெளியீடு: யாவரும் பதிப்பகம்.
விலை : ₹ 180
நூலினைப் பெற :
WhatsApp.No: 90424 61472