cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 39 விமர்சனம்

பசந்தி – கவிதைத் தொகுப்பு நூல் – ஒரு பார்வை

அகராதி
Written by அகராதி

சொற்களுக்குள் இருக்கும் வானிலிருந்து பொழியும் மழை கடலைச் சேரும்வரை தாகத்துடன் கவனித்தல் நிகழ்கிறது.

“உயரே வெளியின் கீதம் அந்தரத்தில் நீலத்தின் மந்திரம் தூர இருட்டில் மினுங்கும் கருப்புநெருப்பு
நாமேவெனப் பறக்கும் குருட்டுப்பறவை
ஓசையின்றி போகும் அதன் புதிர்சாலை
வளராவெளியில் நகரும் இருட்டு ஓவியம்
பள்ளத்தாக்கில் இருந்து வீசும் புதிய காற்று
சொட்டச் சொட்ட நிறையும் கருப்புமை
யாவும் இருட்டு மயம் கண்களுக்கு வெளியே விசேஷ இருட்டு
அடி ஆழத்திலோ விபரீத நெருப்பு”

‘தாமே’ என்று தலைப்பிடப்பட்ட மேற்கண்ட கவிதை பிரபஞ்சத்தின் விஸ்தீரனத்தில் ஆரம்பித்து மனித மனதுக்குள் முடிந்து எண்ணங்கள் ஊற்றாக வழி அமைக்கிறது. கிரேக்க மொழியில் ஹிம்னோஸ் என்றால் புகழுக்குரிய பாடல் என்று பொருள். இதிலிருந்து கீதம் என்ற சொல் பிறந்தது. ‘உயரே வெளியின் கீதம்’ வானையும் தாண்டிய உயரம் இது போலவே நாம் அறிந்திராத வெற்றிடங்களையும் உள்ளடக்கிய வெளி இது ஆங்கே இருக்கும் கீதம் புகழ் மிக்கதாகத்தானே இருக்கும். கவிதையில், தான் மட்டுமே பெரும் ஜீவன் என்னும் பார்வையில்லா பறவை “பூனை கண்ணை மூடிக்கிட்டா பூலோகம் இருட்டாயிருமாம்” பழமொழியைப் பொருத்திப் பார்க்கச் செய்கிறது. அப்பறவை பயணிக்கும் புதிரான வழி சில மனிதர்களின் இயல்பு போலிருக்க விசேஷ இருட்டுக்குப் பிறகு விபரீத நெருப்பில் உள்ளது மனிதர்களின் குணம்.

“ஒரு மிடறு நஞ்சு

கண்ணீரைத் தவிர வேறெதுவுமில்லாத
இரவிலிருந்து வெளிப்படும்
வன்மத்தை எரிக்க
ஓராயிரம் காடுகளை
தீயிட வேண்டும்

நினைவுகளில் எரியும் நெருப்பு
நினைவுகளாய் எரியும் நெருப்பு
நினைவுகளை எரிக்கும் நெருப்பு

எந்த நெருப்பும்
நெருப்பைப் போலவே இல்லை
எந்த நினைவும்
நினைவைப் போலவே இல்லை
நெருப்பைவிட அதிகமாய் எரியும்
வேறேதோவொன்று
நினைவைவிட அதிகமாய் கனக்கும்
வேறேதோவொன்று”

என்னும் துரோணாவின் கவிதையை
(சொல்வனம் 335 வது இதழில் வெளியானது)’ நினைவு கூறத்தக்கதாய் அமைகிறது.

“வேனல் பொங்கி
நிலமெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் வயலில் சோகத்தோடு தண்ணீர் பாய்ச்சுகிறார் வேளாளி
ஓடோடி வந்த நீரின் பரவசத்தில் கூடுதலாகத் தலையாட்டின பயிர்கள்
மயில் கொத்த
காட்டுப்பன்றிகள் கும்மாளமிட வெள்ளெலிகள் பொந்துக்குள் மணிவீடு கட்ட
கரிசல் குருவிகள் குஞ்சு பொறிக்க
விளையும் பயிரை வீடுகொண்டு வயிறு நிறைக்க
தேவதைச்சன் கவிதை எழுத
என
எல்லாருக்கும் இருப்பது
இந்த ஒரு வயல்தான்
என்ன இருந்தாலும் சோகம் சோகம்தானே
வேனல் காலத்து வயலை எந்த தெய்வம் காப்பாற்றும் கோடையில் காற்று வருமா கோடையில் கனமழை பெய்யுமா கோடையின் நறுமணத்தில் நஞ்சைகள் செழிக்குமா துயரத்தின் கேள்விகள் வெக்கைநீராய் ஓடுகிறது வானிலை பார்த்தே சிரிக்கின்றன தோகைகள் ஆகாயம் பார்த்தே வளர்கின்றன கதிர்கள்
கடைசியாக
இந்த முறையும் நம்பிக்கையோடு இருப்போம்
சாயங்காலத்தை அந்தி என அழைப்பது மாதிரி
கோடைக் காலத்தை தெய்வம் எனச் சொல்ல
இந்த முறையும் வானம் பார்த்தே காத்திருப்போம்”

என்று வயலின் தாகத்தை விவசாய குடிகளின் நிலைமையென எடுத்துரைக்கிறது கவிதை.

“விசும்பின் துளிவீழின் அல்லால் மாற்றாங்கே
பசும்புல் தலைகாண்ப தரிது”

என்னும் குறள் மழையின் முக்கியத்துவத்தை இயம்புவது போன்று கவிஞர் நீரின் தேவையை எடுத்துரைக்கும் பாங்கு பாராட்டத்தக்கதாக அமைகிறது. சாயங்காலம் அந்தி என்று மாறியதன் துணுக்குறுதலையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

“காற்றின் வாக்கில்
உக்கிர வெயில்
தாங்கித் தாங்கி நடந்து போகிறது
கண்ணாடியை தடவிக் கொண்டே பிரமிள் கேட்கிறார்
வெயில் மணலில் வெற்றுக்காலில் நடந்து போகும் காற்றைப் பார்த்தாயா? என்று”

கவிதைகளில் பிரமிளும் தேவதச்சனும் வாழ்வின் மகுதியாக வந்து போகின்றனர். பிரமிளின் எளிய கேள்வியை முன் வைத்து ஏகமாய் சிந்திக்கத் தூண்டும் தன்மையை ஒத்து கவிஞரும் காற்றின் பயணத்தை வினவுகிறார்.

“அம்மாவுக்கு
ஒரு வயிறு இருந்தது
நாங்கள் பசி பசி என்று கதறினால்
வயிற்றிலிருந்து
சோற்றை எடுத்து
எங்களுக்கு ஊட்டி விடுவாள். ரொட்டித் துண்டுகள்
மிச்சர் கடலைகள்
டம்ளர் நிறைய தண்ணீர் என எல்லாவற்றையும் வயிற்றிலிருந்துதான்
எடுத்து நீட்டுவாள்
நன்றாக ஞாபகம் இருக்கிறது நான் குழந்தையாக இருந்தபோதும்
வயிற்றிலிருந்துதான் பால் கொடுத்தாள்
இப்படித்தான்
அம்மா எங்களை வளர்த்தாள் இப்படித்தான்
அம்மாவின் வயிறு
பள்ளமாக மாறியது
அந்தப் பள்ளத்தில்
ஆறும் நீரும் ஓடியது
நாங்கள் அதில் குதித்தோம் கும்மாளமிட்டோம்
வயிறு வளர்த்தோம்
நிறைய வருடங்களுக்குப் பிறகு எங்கள் பிள்ளைகள் காகிதக்கப்பல் விடும்
குளமாக மாறியிருந்தது
அந்த வயிறு.‌.”

பாசம் தியாகம் உழைப்பு இழப்பென்று எண்ணுவதற்கு ஏற்றவாறு விரிந்து கொள்ளும் அம்மாவின் வயிற்றை மகிழ்ச்சி கொள்ளவும் பசி தீர்க்கவும் களித்து விளையாடவுமாக எடுத்தாண்டதின் பள்ளத்தில் தேங்கியிருப்பவை நீரா கண்ணீரா.. மனதிலிருந்து இறங்க மறுக்கும் கவிதை விழியோரம் நீர் தளும்பச் செய்யும் இக்கவிதை

நகுலனின்,
“அம்மாவுக்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத் தெரிவதில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக் குரல்
ஒலிக்கிறது
”நண்பா, அவள்
எந்தச் சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள்?”

என்ற கவிதை காட்டும் உருக்கத்தை ஒப்பிட வைக்கிறது.

“எனது உடம்பில்
இதயத்திற்கு கிழக்கில் சகதியாலும் வெயிலாலும் மூடப்பட்ட
வால் இல்லாத மீனின்
வரைபடம் ஒன்று இருக்கிறது ஆடையைத் திறந்து
உடம்பை காட்டுவது மாதிரி உடம்பைத் திறந்து
மீனை காட்டுகிறேன்
நதியாலும் கடலாலும்
அளக்கமுடியாத கண்ணீரே யாரின் கண்களுக்குள் இருந்து கொண்டோ
பாவமாக என்னை பார்க்கிறீர்கள்”

கடல் மனிதனைப் போல மீன் மனிதனாகத் தன்னைக்காட்டி கண்ணீரில்லாமல் அழுது கொண்டிருக்கும் நிலையினைக் கூறுவது போல தோன்றச் செய்கிறது. அழகான இந்தக கவிதை

“ஒரு கண் பார்ப்பதை மறு கண் பார்ப்பதில்லை மீன்களுக்கு
முகத்தோடு முகம் பார்த்து நிற்பதில்லை அவை
மற்றதன் முகம் நோக்கி நீந்துவதுமில்லை
முத்தத்தின் நிர்ப்பந்தமுமில்லை
முற்றிய பகையில் முகம் திருப்புவதுமில்லை
ஒன்றன் வால் பிடித்து மற்றொன்று
ஒன்றன் முதுகில் மற்றொன்று
கூட்டம் கூட்டமாய்
ஒரே திசையில் துடுப்பசைத்துச் செல்கின்றன
ஒரு நொடி
ஒரு துடுப்பு
கனவெனவே
விரிகிறது
கடலாழம்”

என்னும் எம்.டி. முத்துக்குமாரசாமியின் கவிதை வரிகளை நினைவில் கொண்டு வருகிறது.

“மந்திரம் போட்டவுடன்
மழை பெய்தது
கைகளை அகல விரித்து
குடை என விற்கின்றனர்
மழை வியாபாரிகள்
இருந்தும்
மழை விடுவதாயில்லை
ஊர் நனைகிறது
கோயில் நனைகிறது
ஆநிரை நனைகின்றன இதற்கிடையில்
படகு நனைவதை நினைத்து நீருக்குள் அழுதுகொண்டிருக்கிறது
பசந்தி மீனொன்று
இப்போது என்ன செய்யலாம் புதிதாய் மந்திரம் போட்டு மலையை நிறுத்தச் சொல்லலாம் அல்லது
அகல விரித்த கைகளை கடற்கரைக்கு எடுத்துச் சென்று படகு நனையாமல் காக்கலாம் கடைசியாக
ஆழக்குழி தோண்டி படகைப் புதைத்து
மீனின் அழுகையை நிறுத்தலாம்”

குழந்தைகளுக்குக் கூறும் கதையைப் போல் ஆரம்பிக்கும் கவிதை இறுதியில் வாசிப்பவருக்கு அழுத்தமான மெளனத்தை பரிசளிப்பதாக உள்ளது.

கவிதைகளில் விளம்பியிருக்கும் பசி உணர்வை வாசிக்கையில் பட்டினியுடன் வறண்ட கண்கள் விசும்பை நோக்குகின்ற காட்சி தோன்றுகிறது

ஒருமையாகவும் பன்மையாகவும் முன்னிலையாகவும் தன்னிலையாகவும் மாறிக்கொண்டே மாறவைக்கும் சாகரத்தின் மீனோடு நீந்தும் நினைவுகளில் பசி, கனவு, இறப்பு, பால்யம், ரூபம், அரூபமென கவிதைகள் பரிணாமம் கொள்கின்றன. இத்தகலய நிலையைப் புனைந்து கொள்ள வாய்ப்பளித்த வானுக்கு அளிக்கும் பரிசு இக்கவிதைகள்.
கடற்கரை ஈர மணல் ஒட்டியப் பாதங்களிலிருந்து உலர்ந்து கொட்ட உப்பின் கரிப்பு உடலில் பூத்துக் கிடக்கிறது.

இத்தொகுப்பில், சிறு பிராயத்து‌ பசியைச் சுமந்த மனிதன் வெளியின் வெளியில் உலவுகிறான்.

மனித மூளையுடனும் மீன் செதில்களுடனும் உயிரொன்று நடக்கவும் நீந்தவும் முயல்கிறது.

உறவுகளைக் கொண்ட குடியொருவன் உணர்வுகளை மென்று முழுங்க இயலாமல் தள்ளி நின்று பார்வையிடுகிறான்.

ஆநிரை நனைகின்றன போன்ற சிற்சில இலக்கணப் பிழைகள் சரி செய்ய வேண்டும்.

கடலை அறிந்தவர்கள் எல்லோருக்கும் மீனைத் தெரியாது மீனை அறிந்த எல்லோருக்கும் கடலைத் தெரியாது.
எல்லாவற்றையும் கருப்பொருளாக்கி எல்லோரிலும் புகுந்து கவிதை கொள்ளும் மனது படைப்பாளருக்கு உண்டு.

சொற்களுக்குள் இருக்கும் வானிலிருந்து பொழியும் மழை கடலைச் சேரும்வரை தாகத்துடன் கவனிக்கும் கவிஞர் மேலும் பல கவிதைகளை எழுதவும் இன்னும் கவனம் பெறவும் வாழ்த்துகள்.


நூல் : பசந்தி

ஆசிரியர்:  அதிரூபன்

பதிப்பகம் : சால்ட்

வெளியான ஆண்டு :  2023

விலை : ₹ 160


 

About the author

அகராதி

அகராதி

திருச்சியை சார்ந்தவர். இவரின் இயற்பெயர் கவிதா. தமிழிலக்கிய பட்டதாரியான இவர் ”அகராதி” எனும் புனைபெயரில் படைப்புகளை எழுதி வருகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுப்பு வெட்கச் சலனம் எனும் பெயரில் வெளியாகி உள்ளது. பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் கதை, கவிதைப் படைப்புகள் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website