உன் பெயர் மலைச்சாமி. நீ இப்படியான வாழ்வைதான் வாழ்கிறாய், உனக்கான துயரமும், மகிழ்ச்சியும் உன்னால் உனக்கு உருவாவது அல்ல. எல்லாம் திட்டமிடப்பட்ட அரசியல் சூழ்ச்சி. யாருடைய தேவைக்காகவோ வாழவைக்கப்படுகிறாய் என்பதை உணர்த்துவதாக உள்ளன மண் குதிரையின் “மலைச்சாமியின் வயலை இருபத்தியொன்றாம் நூற்றாண்டு மேய்கிறது.” கவிதை தொகுப்பு.
எந்த ஒரு செயலும் அச்செயலுக்கான சுதந்திரத்தையும், இன்பத்தையும் வைத்துள்ளது ஆகவே அரிதான செயல் அல்ல கவிஞனாக இருப்பது எனக் கூறும் கவிதை சி.மணியின் ” கோணம்” கவிதையை நினைவுகொண்டது.
இரண்டாயிரத்துக்கு முன்பாக வீடும் ஆறும் வேறானதாக இல்லை. வீட்டின் ஒரு பகுதியாக ஆறு இருந்தது. காலைக்கடன் முடித்து நீராடி வந்து மற்ற அலுவல்களை தொடங்குவர். மாலையும் அப்படியே. அதற்கு தோதாக பெரும்பாலான நாட்கள் ஆற்றில் நீரோடும். அப்படியான. ஆற்றின் இன்றைய நிலையை ஆகத் துல்லியமாக சித்தரிக்கின்றது ‘ எப்போதாவது நீர் வரும் ஆறு’ கவிதைகள். “தன்னை ஆறு என்று நிருபிக்கும்/ பரிதவிப்பில்/ அந்த ஆறு/ பெண்கள் தோண்டும் ஊற்றுகளில்/ தன் நீர்க் கைகளை/ உயர்த்தி உயர்த்திக்/ காண்பிக்கிறது. என முடிவுறும் கவிதையை வாசிக்கையில் நான் புழங்கிய ஆற்றின் நீர் மீண்டும் என் கண்களில் சொட்டின. “கடல் காணா ஆறு/ கடல் தொடும் முந்தைய கணத்தில்/ குடி இழந்த கட்டு விரியனின்/ சினம் கொண்டு மரிக்கிறது.” இன்றைய ஆற்றின் நிலை இதுதான் எனும் உண்மை நம்மை சுட்டெரிக்கச் செய்கிறது. ஏதோவொரு வகையில் நாமும் காரணம் என்பதை மறைக்கவோ, மறுக்கவோ இயலாது.
நான்
கூச்சலிட்டு கொண்டாடுகிறேன்
என்னுடையதல்ல
இந்த வெற்றி
தேம்பியழுகிறேன்
எனக்குச் சம்பந்தமில்லாதது
இந்த தோல்வி
ஆடிக் களைத்த மைதானத்தை
நடந்தளந்ததைத் தவிர
சொல்வதற்கு எதுவுமில்லை.
இக்கவிதை இந்த நூற்றாண்டு சனங்களின் நிலையை தெரிவிப்பதாகவும் கொள்ளலாம். அலைகழிப்புக்கு உள்ளான வாழ்வையே வாழ்ந்து கழிக்கிறார்கள். வெற்றி தோல்வி என்பதெல்லாம் இவர்களுக்கானதல்ல. ஆனால் நமக்கானதென நம்பும் மாயவலை பின்னப்பட்டிருக்கும்.
உப்பு வைத்து( யூரியா) உப்புவைத்துத் துண்டான/
நிலம்/பயிர்களிலிருந்து தன்/
பிடியை விட்டுவிட்டது.
நிலத்துக்கும் பயிர்களுக்குமான பந்தமே யூரியாவல் பிடியற்று போனதை ஒத்த வாழ்வே இங்கு பெரும்பாலானவர்களின் வாழ்வு. பிணைப்புகள் உருவாக்கப்படாது அப்போதைக்கான வாழ்வையே வாழவேண்டிய நிர்பந்தச் சூழல் உள்ளதை கவிதை சுட்டுகிறது.
காதல் மனம் எப்படியாகினும் அழகியலுக்கான கணத்தை உறையவைத்து நம்மை லகுவாக்கிவிடுகிறது. விரைத்த உடலை தளர்வு கொள்ளச்செய்து நணலாக்குகிறது. காதல் வசீகர ஒளிக்கூடு. லோச்சனா கவிதை நம்முற் உறைந்திடக்கூடும்.
லோச்சனா
நிரப்பவே முடியாத
என்னம்பின் பள்ளம்
அடையவே முடியாத
என்னுறவின் தூரம்.
எளிய சம்மாரிகளின் ஆசைகளின் உச்சமான நிலமும் சாலைக்காக சவமாகிக் கொண்டிருப்பதன் ஏக்கம் நம்மையும் அசைவுகொள்ள வைக்கிறது.
நன்பகல் நேரத்து மயக்கம் தலைப்பிட்ட ஐந்து கவிதைகளிலும் பொழுதை உறையச் செய்துள்ளது கவிதைக்கான பலமாக உள்ளது.
……..
உங்கள் அன்பே எனக்கு ஆதாரம்
அந்த உங்கள் அன்புக்காக
நான் ஒரு குழந்தையின்
குரல் வளையைக் கூட
நெரிக்கத் துணிவேன்.
என முடிவுறும் இக்கவிதை திடுக்கிடலை ஏற்படுத்துகிறது. வாசகனுக்கு அதிர்ச்சி ஏற்படுத்த எழுதப்பட்டிருக்காது. குழந்தை என்பது உண்மையில் குழந்தை இல்லை. அது வேறொன்றை சுட்டும் என மனம் சமாதானம் கொள்கிறது.
மண் குதிரை எவ்வித ஆராவாரம் இல்லாமல், உலைக்கொதிப்பு இல்லாமல் ஆற அமர நிதானத்தோடு தன் கவிதையை களமாடச் செய்துள்ளார்.
நூல் : மலைச்சாமியின் வயலை இருபத்தியொன்றாம் நூற்றாண்டு மேய்கிறது.
எழுதியவர் : கவிஞர் மண் குதிரை
வெளியீடு: நின்னை பதிப்பகம்
விலை: ₹ 120
தொடர்புக்கு : 9344534100