“துயரத்தின் தீச்சட்டியைக்
கொஞ்சநேரம்
ஒரு கவிதை
வாங்கி வைத்துக் கொள்கிறது.”
இது கவிஞர் போகன் சங்கரின் வரி. ஒரு வகையில் அவருடைய கவிதைகளுக்குள் நுழைய ஒரு வாயிலாக இவ்வரியை நாம் உபயோகிக்கலாம்.
போகன் சங்கர் தற்காலத்தில் கவிதைகள் எழுதிவருபவர்களில் முக்கியமானவர். இலக்கியவெளியில் அதிக கவனம் ஈர்ப்பவர். தான் எழுதும் கவிதைகளின் ஒவ்வொரு பொருளிலும் வடிவத்திலும் தொடர்ந்து புதுமை செய்து வருபவர். கவிதைகளில் தன்னை விட்டு விலகி நின்று தன்னைப் பார்க்க கூடியவராகவும் இவர் இருக்கிறார்.
கவிஞர் போகன் சங்கர் அவர்களின் மொழி பிரத்யேகமானது. அதில் தவிப்பும் தத்தளிப்பும் அதிகம். அக்கொந்தளிப்புகளையே அவர் கவிதையாக்குகிறார். தடித்தக் கண்ணாடி போட்ட பூனை என்னும் இந்த தொகுப்பு அவரின் மற்ற தொகுப்புகளில் இருந்து சிறிதே மாறுப்பட்டது. அவரின் படைப்புகளில் மிகுந்த இருண்மையான கவிதைகளை கொண்டத் தொகுப்பு இதுவாக தான் இருக்கும். ரசனைக்கும் புதுமைக்கும் ஊடே உணர்வுகள் சேர்த்து நெய்யப்பட்ட சிறப்பான கவிதைகள். துயரின் பாடல்கள் என்று கூட அவற்றை சொல்லலாம். மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றிய நிறைய நல்ல கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. மீண்டும் மீண்டும் சென்று படிக்கத் தூண்டும்.
போகனின் கவிஉலகம் தனித்துவமானது பெண்ணுடல்களால் நிறைந்தது. இத்தொகுப்பில் பல கவிதைகளுக்கு உடல் தான் மையமாக இருக்கிறது. உடலைப் பற்றி உறுதியான நிலைப்பாட்டை எடுக்கமுடியாத ஒருவனின் தடுமாற்றத்திலிருந்து உருவாகி வரும் கவிதைகள் தான் பலவும்.
“உடல் என்பது
எத்தனை நுணுக்கமான திருகுகளால் நிறுவப்பட்டது.
எத்தனை எளிமையான விசைகளால்
அழிந்து விடக்கூடியது என்று அறிந்தபின்பு
மறுக்கவும் துறக்கவும் தேர்ந்தெடுக்கவும் நான் யார்?”
என்று கவிஞர் உடலைப் பற்றி பாடுகிறார்.
போகனுக்கென ஒரு திணை ஒதுக்கினால் விடுதிகளும் விடுதி சார்ந்த இடங்களும் அதன் முதற்பொருளாக இருக்கும். விலைமகளிர், குழந்தைகள், நோயாளிகள், அன்றாட வாழ்க்கையில் அலைக்கழிபவர்கள் இவர்களே இத்தொகுப்பில் அவரின் கவி மாந்தர்கள். காமமும் நோய்மையும் அலைக்கழிப்பும் அவருடைய பாடுபொருள்கள். விடுதிகளும் , ஆஸ்பத்திரிகளும் ஏனோ தொடர்ந்து அவருடைய கவிதைகளில் வந்து கொண்டே இருக்கின்றன. பெண்களும் நோயும்கூட. காமத்தாலும், வலியாலும், நோய்மையாலும், தனிமையினாலும் வாழ்வின் அபத்தங்களினாலும் அலைக்கழிக்கப்பட்டுத் தத்தளிக்கும் ஒருவனின் தீராப்பாடல் போகனுடையது. நினைவுகளாலும், நிராசைகளினாலும் அலையுறும் ஒரு மனிதன் மீண்டும் மீண்டும் ஏன் பெண்ணையே போய் அடைகிறான் என்று புரியவில்லை.
இவருடைய பெண்களுமே மிகவும் துயருற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். பல்வேறு வயதுடைய பெண்ணுடல்களை பற்றி தொடர்ந்து எழுதுகிறார். எழுதப்படும் எல்லா உடல்களும் கவர்ச்சியானவைகளும் அல்ல.” உக்கிராண அறையில் கிடக்கும் பெரிய மரப்பெட்டி “ என ஒருப் பெண்ணை வர்ணிக்கிறார்.
அவரின் கவிதைகளுக்கு பின்னால் எப்போதுமே மருகிக் கொண்டிருக்கும் ஒரு இதயம் இருக்கிறது இவரின் கவிதைகளில் எமிலியின் சாயலையும் , சில்வியா பிளாத்தின் சாயலையும் காணமுடிகிறது.
“எனக்கேன் மின்மினிப் பூச்சிகளின்
ஒளியை அணைப்பவன்
வேலை கொடுக்கப்பட்டது
என்று புரியவேயில்லை”
இன்னொன்று,
“நான்யார்
உனக்குநான்யாருமில்லை.
தொலை வானில் தேயும் புள்ளி.
கடைசியாய் அணைக்கப்படும் விளக்கு”
I’m nobody! Who are you?
Are you nobody, too?
Then there is a pair of us.
என்ற எமிலியின் கவிதையை நினைவுபடுத்தும் ஒரு கவிதை.
இது போன்ற தன்னிரக்கமும் சுயபச்சாதாபமும் தெறிக்கும் கவிதைகள் இத்தொகுப்பில் நிறைய . கையறுநிலையும் வெறுமையும் வெளிப்பட்டாலும் வாழ்க்கையை வாழ்ந்தே தான் தீர்க்க முடியும் என்ற உறுதியும் வெளிப்படும் கவிதைகள் தான் போகனுடையவை.
எட்கர் ஆலன் போ-வின் படைப்புகளைப் போல மரணம் , இழப்பு , ஏமாற்றம் பேசும் இரண்டு துயர்மிகு கவிதைகள். விரிவான காட்சிப்படுத்துதல், கதையாடல் பாணி , திடுக்கிடச் செய்யும் திருப்பங்கள், என கிளாசிக் ஆலன் போ பாணி.
பாதி கேட்கப்பட்ட பிரார்த்தனை குறிப்பிடப்படவேண்டிய கவிதை. போகனின் அமானுஷ்யத்தின் மீதான ஈர்ப்பு இந்த கவிதையிலும் வெளிப்படுகிறது.
“பாதி முடிக்கப்பட்ட வீடு
எதிரே ஆம்பல் பூக்கும் குளமும்
பின்னால் காந்தள் மரமும் இருந்தது…”
இப்படி தொடங்குகிறது இந்தக் கவிதை.
“அதை கட்டியவர் ஒரு விபத்தில்
அயல்தேசத்தில் இறந்து போனார்
இறக்கும் போது அவர் மனைவி
மூன்று மாதம் அவர் கருவோடு
இருந்தார் என்றார்கள்.”
என்றபடி பயணிக்கிறது. இப்பொழுது உங்கள் மனதில் மெதுவாக குளிர்பரவ தொடங்குகிறது.
“நான் அந்த வீட்டை வாங்கவில்லை.
நேற்று மாலை நடையில் மீண்டும்
அந்த வீட்டைப் பார்த்தேன்
வீடெங்கும் சருகுகள் பெருச்சாளிகள் போல
ஒன்றையொன்று துரத்தி அலைந்து கொண்டிருந்தன.
எனக்கு ஒரு சிறுவனும் சிறுமியும்
ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடுவது போல
வேறொரு காட்சி தோன்றியது.”
இப்பொழுது இந்த கவிதை முழுமையாக அமானுஷ்யத்துக்குள் நுழைகிறது. முத்தாய்ப்பாய் ஒரு வரி.
“இப்பொழுது தான் கவனித்தேன் அந்த
வீட்டின் பெயரை
இறை இந்த வீட்டைக் காக்கிறது
என்ற பொருள்படும் பெயர்.”
அதிர வைக்கிறார் போகன். எட்கர் ஆலன் போ-வை கண்முன்நிறுத்தும் இறுதி வரிகள். சிறுகதையாய் எழுதி இருக்கக்கூடிய கவிதை. .
அதே போன்ற கதையாடல் பாணியில் இன்னொரு கவிதை, “அழுகிய வாதாம் பருப்பு வாசனை மிதக்கும் குடிக்கூடம்” எனத்தொடங்கும் கவிதை. சிறுகதைக்கான சாத்தியங்களை உள்ளடக்கிய இன்னொரு கவிதை. லைட் அவுஸின் ஒற்றைக் கண்ணை பத்து நிமிடங்களுக்கொரு முறை சந்திக்கும் ஒரு அறை எனத்தொடங்கி அறையை விவரிப்பதாய் விரிகிறது . “கேரளத்தின் மழை எங்களை துரத்தி துரத்தி நனைத்துக் கொண்டிருந்தது’ இந்த நெடுங்கவிதையில் மழை நம்மை கவிதை முழுக்க தொடர்ந்து வருகிறது அடுத்தடுத்து வரும் காட்சிகளினூடே நாமும் அவர்கள் இருவரோடு மழை இரவில் அந்த விடுதியறைக்குள் போகிறோம். அவர்களை அருகிருந்துப் பார்க்கிறோம்.
அவளின் துயரத்தை ,கண்ணீரை நாம் கவனிக்கத் தொடங்குகிறோம். இரக்கமான நோக்குடன் ஒரு லத்தீன் முக ஏசு என்று கவிதை ஆன்மீகத்தைத் தொட்டுப் பார்க்கிறது.
“பிரபஞ்சத்துக்கு தேவைப் படுவதெல்லாம்
பத்து நிமிடம் என்று தோன்றியது
ஒரு அற்புதம் நிகழ்த்த
பிரார்த்திக்கும் போது அவள் ஆடையெதுவும்
அணிந்து கொள்ளவே இல்லை என்பதைக் கவனித்தேன்
உண்மையில் அதுவே அந்தக் கணத்துக்குப்
பொருத்தமான ஆடையாய் இருந்தது”
இந்த இடத்தில் கவிதை முற்றிலும் வேறொன்றாகிறது. இறுதியாய் அவர்களுள் நிகழும் கலவி ஒரு கூட்டுப்பிரார்த்தனை. நிர்வாணமாக ஒரு பெண் சுடரின் முன் மண்டியிட்டு தொழும் காட்சி வாசிப்பவரை ஏதோ செய்கிறதல்லவா. இந்த ஏதோ செய்யும் வேலையைத் தான் போகன் தொடர்ந்து தன் கவிதைகளில் செய்கிறார். பல கவிதைகளில் விவிலியத்தின் கூறுகளை காண முடிகிறது
மனிதன் சமயங்களில் குரூரமானவன். அவன் அன்றாடங்களின் மத்தியில் சிறு சிறு நிகழ்வுகளில் நுட்பமாக தன் மனவக்கிரங்களை வெளிப்படுத்துகிறான். இந்த கவிதையில் இவ்வியல்பை மிக துல்லியமாக காட்சிப்படுத்துகிறார் போகன்.
“பிறகு அந்த இடத்தில்
வேறு யாரோ வந்து அமர்ந்தார்கள்
அவர்கள் தோளில்
ஒரு குருவி வந்து அமர்ந்தது
பிறகு அவர்கள் புன்னகைத்தார்கள்
அவர்கள் புன்னகையில் வயல்
காற்று போல ஒரு ஈரம் இருந்தது.
அவர்கள் என்னை அழும் குழந்தையை
அழைப்பது போல வா என்று
பச்சை துளிர்க்கும் கைகளால் அழைத்தார்கள்.
நான் தவழ்ந்து தவழ்ந்து அவர்கள் அருகில் போனேன்.
போய் மடியில் ஏறிக்கொண்டு
முதல் வேலையாக அந்தக் குருவியின்
கழுத்தை நெரித்தேன்”
இன்னொரு கவிதை,
“நேசிப்பவரை
நேசிப்பவற்றைக் கொல்வது
எப்போதுமே எனக்கு உவப்பாக இருக்கிறது.
கழுத்து அறுபட்டு
தலைகீழாய்
மண் நோக்கி வழியும் உதிரத்தோடு
துடிக்கும் கோழி போல
அவர்கள் கண்களில்
அந்த நேசம் அணைவதைப் பார்க்கும்
அந்தக் கடைசிக் கணத்தில்தான்
என்னால் உறுதிப் படுத்திக் கொள்ளமுடிகிறது
நேசத்தை
என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.”
நேசிப்பவரின் கழுத்தை அறுத்து நேசத்தை உறுதி செய்யும் மனதை வைத்துக் கொண்டுதான் இவ்வுலகில் நாமெல்லாம் வாழ்ந்து உய்ய வேண்டும்.
அவர் தன் கவிதைகளுக்கு தலைப்பே தருவதில்லை. முராகாமியின் கதைகளில் வரும் பெயரில்லா பெண்களை போல் தலைப்பில்லா கவிதைகள் .
“ரயிலில் இருந்து
பார்க்கும் மழை
வேறு மாதிரி இருக்கிறது.
மனைவியை
அவள் அலுவலகத்தில் வைத்து
சந்திப்பது போல.”
போகன் அபாரமான சொல் வீச்சை உடையவர். எழுதியெழுதி தேய்ந்துபோன பாடுபொருள்களை எழுதினால் கூட அதை இன்னும் புதிதாக எழுத போகனால் முடியும். இத்துறையில் இன்னுமொரு நிபுணர் கவிஞர் இசை.
“ஒரு மழைக்குப் பிறகு
ஒரு கூடலுக்குப் பிறகு
ஒரு கவிதைக்குப் பிறகு
சூழும் அமைதியின் பரிசுத்தத்தைத்
தாங்க முடியாமல்தான் வெளியேவந்து
இந்த சேற்றைப் பூசிக் கொள்கிறேன்”
சூழும் பரிசுத்தமும் சேறும் வாழ்க்கையின் முரண்களின் படிமங்கள்..
வழக்கம் போல் குழந்தைகளும் அவர் கவிதைகளில் வருகிறார்கள். போகன் குழந்தைகளைப் பற்றி எழுதும் போது அவரது விரல் நுனியில் இறை வந்தமர்கிறது. தன் காதலனுக்காகவே தனிக்குரல் வைத்திருக்கும் பெண்ணைப்போல குழந்தைகளைப் பற்றி எழுதும் போது மட்டும் தழுதழுக்கும் குரல் வந்து விடுகிறது போகனின் கவிதைகளில். அத்தனை குழைவும் நெகிழ்ச்சியும்.
“புல்வெளியில்
குழந்தை விட்டுச் சென்ற
மழைக் கால்தடத்திற்காக
வெட்டுக்கிளிகளும்
பட்டாம்பூச்சிகளும்
சண்டையிடுகின்றன.”
இன்னொன்று,
“ஒரு பெரிய குவளை நிறைய
முல்லை மொட்டுகளோடும்
சிறிய விளக்கோடும்
பட்டுப்பாவாடை சரசரக்க
பௌர்ணமி பூஜைக்குப் போகிறாள்
சிறுமி
நாய்க் குட்டி பின் தொடர.”
அந்த கோமதியன்னையே சிற்றாடையுடுத்தி தன்னையே தரிசிக்க வருவது போல எண்ணுதற்கே பரவசமூட்டும் கவிதை. இன்னும் அழகழகான குட்டி கவிதைகள். அத்தனையும் ரசனையானவை.
“வானவில்லின் மறுபுறம் மிதக்கும் நீலப்பறவைகள்” போல இருக்கிறார்கள் நம் பிள்ளைகள் எனத் தொடங்கும் கவிதை ஒன்று. அதில் “நம்மை பறவையாக்கும் ஒருச் சொல்’ என்று வரி. இந்த கவிதையை ஒரு நவீன கவிதையாக்குவது இந்த வரியே. சிறப்பான கவிதை.
யானைக்கென ஒரு முகம் வைத்திருக்கும் குழந்தையை பற்றி எழுதும் அதே கையால் சட்டென எதிர்பாராத இடத்தில் ஒரு அல்லிப்பூவை மூழ்கும் குழந்தையின் சிறுகையென எழுதி சற்று விதிர்க்க வைக்கிறார்.
“ஒரேயொரு பிரார்த்தனைதான்
குச்சியைக் காட்டியதும்
குழையும் மிருகமென
இவன் முன் நான் நிற்பதை
என் குழந்தைகள்
ஒருபோதும் பார்க்கக் கூடாது.”
தன் குழந்தையின் முன் தன் கீரிடத்தை தொலைத்துவிடக்கூடாதென அஞ்சும் தந்தை நாமெல்லோரும் தானே. ஊரே தன்னை கோமாளியாய்ப் பார்த்தாலும் தன் பிள்ளையின் முன் கம்பீரமாய் ஒரு அரசனைப் போல் வலம் வர தானே ஒரு அப்பா விரும்ப முடியும்.
காமத்தை காதலிக்கும் கவிஞராகவே தன்னை வெளிப்படுத்த நினைக்கிறாரா போகன் என்ற சந்தேகம் அவர் கவிதைகளைப் படிக்கும் ஒருவருக்கு எழலாம். ஆனால் அவர் கவிதைகள் புணர்ச்சியை ரொமாண்டிஸைஸ் செய்வதில்லை. தன் கவிதைகளில் உடலை கடக்க முடியாத ஒரு சமுத்திரமாகவே காட்சிப்படுத்துகிறார். காதலற்ற காமங்கள் தான் அதிகம் அவர் கவிதைகளில்.
“உடலுறவு மட்டுமே
தரக்கூடிய
பிரகாசத்துடன் அவள் இருந்தாள்
அவளை காச நோய் வைரஸ்கள்
ஆவேசமாய் புணர்ந்து கொண்டிருக்கின்றன.”
இன்னொன்று,
“ஒவ்வொரு கூடலுக்குப் பிறகும்
அவள் ஒரு பாதரசம் ஊற்றப்பட்ட
ஒளிரும் கிண்ணம் போல ஆகிவிடுகிறாள்
நறுமணமிக்க ஓளிப்பந்துபோல
வீடு முழுக்க மிதந்து திரிகிறாள்
ஒவ்வொரு கூடலுக்குப் பிறகும்
அவன் ஓரே ஒருநிறம் மட்டும் முற்றிலுமாகப் பிடுங்கப்பட்ட
சித்திரம் போலாகிவிடுகிறான்……
அவளைப் போலவல்லாமல்
ஒவ்வொரு கூடலுக்குப் பிறகும்
அவன் உணர்கிறான் ஏக்கத்துடன்
தனது விலாவிலிருந்து வெகுகாலத்துக்கு முன்பே
எடுக்கப்பட்டுவிட்ட ஒரு எலும்பை.”
“வெட்டுண்ட புண்போல்விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம்? ”என்ற பத்திரகிரியாரின் குரல் இந்த கவிதைகளில் காதை அறைகிறது.
காலங்காலமாக ஆணுக்கு தன் இச்சைகளை கடக்கமுடியாத வருத்தமுண்டு. ஒரு புணர்ச்சிக்குப் பிறகு அவன் கடும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறான். உயிர்கள் அனைத்தையும் ஆட்டுவிக்கும் விசையின் முன் அவனுடைய பலவீனம் ஆணைப் பயமுறுத்துகிறது. அதனால் தான் உடலைக் கொண்டே அவன் பெண்ணை வெல்ல முயல்கிறான். எழுத்தாளர் ஜெயமோகன் தன் “கோட்டை” என்னும் சிறுகதையில் இதைப்பற்றி எழுதியிருப்பார். காமத்தை புனிதப்படுத்தாமல் அதன் உள்ளுறையும் வன்முறையைப் பற்றிய கதை. போகனின் சில கவிதைகள் அந்த வன்முறையை நிகழ்த்துகின்றன. மெல்லிய சேடிஸம் இழையோடும் கவிதைகள்.
பிறப்பும் இறப்பும் ஒரு சக்கரத்தின் சுழற்சி எனக் கூறும் ஒரு கவிதை. ஒரு பிரசவம் நடைபெறுகிறது. இனிப்புகள் வினியோகிக்கப்படுகிறது. பிரசவம் பார்த்த மருத்துவர் மாலதிக்கு வீட்டில் இருந்து அழைப்பு வர, அவள் ஆவேசமாய் கிளம்புகிறாள். எதேச்சையாக சாலை விபத்தில் சிக்கி இறக்கிறாள்.அவள் உடல் அதே மருத்துவமனைக்கு வருகிறது. இனிப்புகள் இன்னும் வினியோகிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவள் பிரசவம் பார்க்கும் போது உபயோகித்த ஒன்றைவிட பெரிய இடுக்கி அவளை நோக்கி வருவதாக கவிதை முடிகிறது. இக்கவிதையில் இடுக்கி மிக முக்கிய குறியீடாகிறது.
“கால்களுக்கு நடுவே
ஒருசிறிது முரசு போல
துடித்த சிசுவை
ஓரு கிழங்கைக் கெல்லி எறிவது போல
ஓரு பெரிய இடுக்கியைக் கொண்டு
பிடுங்கி எறிகிறாள்
டாக்டர் மாலதி.”
இந்த கவிதையில் கவிஞர். “தூமைகால யோனி போல சிவந்த அந்த அதிகாலையில்” என்றெழுதுகிறார். அதிகாலையை வர்ணிக்க எத்தனையோ சொல்லிருக்க இப்படியேன் எழுத வேண்டும்? இங்கு தூமைகால யோனி பிறப்பின் குறியீடாக இருக்கலாம்,அல்லது கோபத்துடன் கிளம்பிய பெண்ணின் ஆவேசத்தையும் குறிக்கலாம். அப்போது தான் நடந்து முடிந்த பிறப்பை குறிப்பதாக கூட இருக்கலாம். இருந்தாலும் தவிர்த்திருக்கலாமோ? இத்தொகுப்பில் இன்னொரு இடத்தில் கூட தூமையைப்பற்றி எழுதியுள்ளார். போகனின் “படுதா” என்னும் சிறுகதையில் கூட ரப்பர் மரங்களில் வெட்டப்பட்டு செருகப்படும் பிளாஸ்டிக் சருகுகளை தூமைகால யோனியில் அடைக்கப்பட்டிருக்கும் துணிகள் என்றே எழுதியிருப்பார். அதிர்ச்சியூட்டும் படிமங்களை, குறியீடுகளை அடிக்கடி அவரெழுத்தில் காணமுடியும். இந்த தொகுப்பி்லும் அவ்வாறே.
இவர் கவிதைகளில் அடிக்கடி இடம்பெறும் இன்னொரு கூறு தனிமை. தனிமையை கவிஞர்கள் பாடித்தள்ளியுள்ளனர். எத்தனைப் பேர் பாடினாலும் தனிமை காலத்தின் தீராதப்பாடலாக ஒலித்தபடியே இருக்கிறது,
“தனியே துயில்பவர்
வீடருகே வந்ததும்
உரத்துப் பெய்கிறது
மழை”
போகனின் இன்னொரு கவிதை(வெறுங்கால் பாதை என்று நினைக்கிறேன்) உண்டு.
‘எதிர்பாராத மூங்கில்களிலிருந்து
எழும் இசை
அசவுகர்யமாக இருக்கிறது’.
தனிமையை எவ்வளவு நுட்பமாக கூறுகிறார் பாருங்கள்.
அம்மாவை பற்றி இரண்டு கவிதைகள்.
அம்மா ஒரு திரை எனத்தொடங்கும் ஒரு கவிதை.
“அம்மா அழகானவள்
அவள் மேல் ஒரு தேமல் ஒவியம் போல
நாம் படர்கிறோம்..
அழகாய் இருப்பதன் மூலம்
அம்மா
இன்னும் அழகான விசயங்களை
மறைக்கிறாள்
காட்டை மறைக்கும் புஷ்பம் அவள்”.
இந்த உலகத்து ஆண்கள் அனைவரும் இன்னும் அம்மா பிள்ளைகள் தான். மகனின் கண்ணுக்கு அம்மா தான் பேரழகு. அம்மாவையும், டீச்சர்களையும் காதலிக்காத ஆண்களே கிடையாது.
“அம்மா காட்டின் பிரதிநிதி
காடு அம்மாவின் விரிவு”.
அம்மா தான் பிரபஞ்சம். அவளாடிய நடனத்தில் சிதறிய சிறு பரல் இப்பூமி.
இன்னொரு கவிதை
“அம்மா
ஒரு உப்புகல்
சேலைநுனி
கையில் பற்ற ஒரு இரும்புச் சாவி..
அது அம்மாவுக்கும் அவனுக்கும்
உள்ள தூரம்
என்று அவன் உணரும்போது
விடிவெள்ளிகள் அணைந்திருக்கின்றன.”
ஆண் வளர வளர அம்மா விலகி போகிறாள். அம்மாவின் மேலுள்ள தீராத ஈர்ப்பை தான் கண்ணில்படும் பெண்களிடமெல்லாம் அவன் தேடி திரிகிறான்.
போகனின் இன்னொரு அருமையான அம்மா கவிதை. வேறொரு தொகுப்பிலிருந்து.
“அம்மாவை நாளை பார்க்கப் போகிறேன்
அது ஒரு சம்பிரதாயம்தான்.
அம்மா மிக மெலிந்துவிட்டாள்
ஒரு எலும்புக் கூட்டைப் போலாகிவிட்டாள்
கட்டிலின் கீழொரு வாளியில் மூத்திரம் போகிறாள்.
உத்திரத்தை விட்டு கண்ணைத் திருப்பச் சிரமப்படுகிறாள்
நடப்பதே இல்லை.
போய்ப் பார்த்தால் “சாப்பிட்டாயா?” என்று மட்டும் கேட்பாள்.
இரண்டு மாதம் மூன்று மாதம் கழித்து
எப்போது திரும்பப் போனாலும் அது மட்டும்தான்.
அவள் நினைவெல்லாம் இதுதான்
நான் எங்கோ சாப்பிடாமல் இருக்கிறேன்.”
குழந்தைகளைப் பற்றி எழுதுகையில் முளைக்கிற மாயக்கைதான் போகனின் அம்மா கவிதைகளையும் எழுதுவது.
இந்த தொகுப்பில் மொத்தம் 200 கவிதைகள். பெரும்பாலும் வாசகனை எளிதாய் அடையும் மிகச் சிறந்த கவிதைகள். இன்னும் இங்கு குறிப்பிடப்படாத மிக சிறந்த கவிதைகள் தொகுப்பில் உண்டு. கவிஞர் போகன் சங்கருக்கு வாசகர் பட்டாளம் அதிகம் . காரணம், பெரும்பாலானவர்கள் அவரின் படைப்புகளோடு நெருங்கி பயணிக்கிறார்கள். தங்களோடு அவரின் கவிதைகளை தொடர்புபடுத்தியே பார்க்கிறார்கள். கவிதைக்கு வெளியே நின்று போகனின் கவிதைகளை ரசிப்பது சற்று கடினம்.
இருண்மையே உணர்வுகளின் உச்சமாகிறது இத்தொகுப்பு. அது ஏற்படுத்தும் வலி ஒரு ரகசியமான பரவசஉணர்வை வாசகனுக்கு அளித்து அருமையான வாசிப்பனுபவத்தை நல்குகிறது.
கசந்தும் கிளர்த்தும் மதுவை போன்றவை போகனின் கவிதைகள்.
நூல்: தடித்த கண்ணாடி போட்ட பூனை
ஆசிரியர்: போகன் சங்கர்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை : ₹ 130