அற்புத நிலவின் தரிசனத்தை
நான் மட்டுமே பார்த்துவிட்டுத்
தூங்கச் செல்கிறேன்
ஒரு கண்ணாடியை வாங்கிப் பார்த்தேன்
அதில் தெரிந்ததைக் கண்டு
என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்
அதிகாலையில்
நான் தூங்கியது
ஒரு கனவு
‘திட்டினால் உனக்கு அழுகை சுலபமாக வந்துவிடுகிறது’,
எனச் சொல்லியபடியே அந்தக் குழந்தையை
அவன் மேலும் அழ வைக்கிறான்
இலையுதிர்காலக் காற்று
ஒரு கல் ஒரு குழந்தையின் பிறப்பைப் பேசுகிறது
அந்தச் சப்தம் எனக்குக் கேட்கிறது
மலை மேல் உள்ள மயானத்தின் மேல்
சூரிய அஸ்தமனத்தின் வானம்
கடல் நோக்கிச் சாய்கிறது
மலர்ச்சியில் குளிர்ந்து, ஒரு மலரும் அதன் நிழலும்
குளிர்ந்த ஒளி
ஊடுருவுகிறது
மூங்கில் காடு
நான் இந்த இரவைக் கழிக்கும் இந்த நடைமேடையின் மீது
உடன் இருக்கும் இந்தப் பசுவின் கண்களில்
எனக்குப் பரிச்சயமான ஒரு இனிய பழைய நினைவின் பார்வை தெரிகிறது
மலைக் காற்று, கீழே இறங்குகிறது
(பிச்சை) பாத்திரம் கூட இல்லை
(பிச்சை) வாங்குகிறேன்
என் ரெண்டு கைகளிலும்
ஒரு கடன்காரனைத் திருப்பி அனுப்பிவிட்டு
ஒரு இளம் ப்ளம்ஸ் பழத்தை நான் கடிக்கிறேன்
நீரெடுக்க வரும் ஒவ்வொரு முறையும் அவள்
நீர்வஞ்சி** மரத்தின் நிழலைக் கலைக்கிறாள்
விடியல்
கடல் மீது ஒளியேற்றுகிறது
ஒரு சாளரம் திறக்கிறது
கருமையான கடல் தூங்குகிறது, நான் ஒரு விடுதியை அடைகிறேன்
புத்தருக்கு அளிக்கப்பட்ட
இந்த மஞ்சள் நிறப் பூக்கள்
வாசனை அற்றவை
இந்த அந்திக் காற்றில் ஒரு நெருப்புக் குச்சியைக் கூடப் பற்ற வைக்க முடியவில்லை, அந்தக் குளிரிலும் நாம் உரையாடுகிறோம்
என் மனைவியைத் திட்டிவிட்டு, தகிக்கும் வெய்யிலில் வெளியே செல்கிறேன்
விசிலடிக்காமல் இருக்க முடியவில்லை, இந்தக் காலை, இந்தக் காடு, எவ்வளவு நீலம், எவ்வளவு பசுமை
வேலிக்கு அந்தப் பக்கம் ஒரு நாய் என்னைப் பார்த்துவிட்டுக் கடந்து செல்கிறது, இந்த மதியத்தில் எதுவும் நடக்கவில்லை
ஒரு மழை நாளில் நான் பிரார்த்தனை மெழுவர்த்திகளை ஒளியேற்றிவிட்டுத் தனிமையில் இருக்கிறேன்
அமைதியான கானகத்தில், பயத்தில், இந்த ஒரு இலை
ஒரு மாதுளை தன் வாய் திறந்தது, அதன் சிறுபிள்ளைத்தனமான காதல்
நான் முற்றிலும் தனிமையாகி விட்டேன், இந்த அந்தி வானம் கூட
மழை பெய்துவிட்டது, இருண்டு போவதைத் தவிர வேறு மார்க்கமில்லை, புனித மண்டபம்
குறிப்பு
நீர்வஞ்சி – willow tree – நீர்நொச்சி / ஆற்றுப்பாலை
ஒஸாகி ஹொசாய் (Ozaki Hōsai) – (20 ஜனவரி 1885 – 7 ஏப்ரல் 1926) – இயற்பெயர்: ஒஸாகி ஹிடியோ (Ozaki Hideo):
ஒஸாகி ஹொசாய் ஒரு ஜப்பானிய சுதந்திர வடிவ ஹைக்கூ கவிஞர். சுதந்திர வடிவ வசன பாணி ஹைக்கூவின் முன்னோடியான ஒகிவாரா செய்சென்சுயின் (Ogiwara Seisensui) மாணவர். இவர் தன் ஹைக்கூக்களை பெரும்பாலும் ஒரு வரியில் தான் எழுதினார். பல ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களும் விரிவுரையாளர்களும் ஹைக்கூவிற்கு ‘ஒரு வரி’ வடிவம் தான் உகந்தது எனக் கருதுகிறார்கள். தனிமை தான் இவரின் முக்கியப் பாடுபொருள்.
ஹொசாய் தன் மனச்சோர்வினை நுட்பமான தரிசனங்களாக உருமாற்றி அதை ஒரு தனிப்பட்ட குரலாகத் தன் கவிதைகளில் ஒலிக்கவிட்டார். இவரது ஹைக்கூக்கள் இவரது சொந்த வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளைப் பற்றி பேசுவன. இவரது கவிதைகள் அன்றாடச் சூழல் மற்றும் பொருட்கள் தரும் சுய விழிப்புணர்வின் நீட்சியாக உள்ளன. இவர் நவீன ஹைக்கூவில் ஒரு முக்கிய குரல். இவரது ஹைக்கூக்கள் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவர் படைப்புகள் பரந்துபட்ட விஷயங்களைப் பேசுவதாக உள்ளன. மேலும் அவை மனச்சோர்வினை நகைச்சுவையாகக் கண்டு, தீவிர ஆன்மீக நோக்கத்தை நிராகரிப்பதாக அமைந்திருக்கின்றன.
உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு, ஜப்பானில் உள்ள டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது அங்கு யோஷி சவா என்ற நெருங்கிய தோழியைத் திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் யோஷியின் சகோதரர் அந்தத் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிராகரிப்பால் அவர் காயமடைந்து மதுவை நாடினார்; அதன் விளைவாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
டைவானில் சில காலம் ஒரு காப்பீடு நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு ஜப்பானுக்குத் திரும்பிய பிறகு, இவர் தனது உடைமைகள் அனைத்தையும் தனது மனைவியிடம் விட்டுவிட்டுத் துறவற வாழ்க்கைக்குச் சென்று கோவில் கோவிலாக அலைந்து திரிந்தார். தன் உடல்நிலைக் குறைவால், ஒரு புத்தத் துறவியின் வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது என்பதுது இவருக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. இவர் இறுதியாக செட்டோவில் உள்ள ஒரு தீவில் குடியேறினார், அங்கு காசநோயைப் பிடித்து இறந்தார். ஹொசாயின் படைப்புகளுக்கான உந்துதல்கள், இலக்கியக் கோட்பாட்டிற்குப் பதிலாக அவரது சுதந்திரமான உற்சாகமான வாழ்க்கை முறையிலிருந்து இயல்பாக வெளிப்படுவதாக இருக்கின்றன.
ஒஸாகி ஹொசாயின் ஒரே கவிதை புத்தகம், ‘பெரிய வானம்’, அவரது மரணத்திற்குப் பின் 1926இல் வெளியிடப்பட்டது; அதன் விரிவாக்கப்பட்ட பதிப்பு 1956இல் வெளியிடப்பட்டது; பின்னர் மீண்டும் அத்தொகுதி 1973இல் வெளியிடப்பட்டது. அவரது எழுத்துக்களின் முழுத் தொகுப்பு இனோவ் மிகியோ (Inoue Mikio) என்பவரால் 1972இல் வெளியிடப்பட்டது; இதில் ‘பெரிய வானம்’ தொகுப்பில் இடம்பெற்றது போக அவரது ஆரம்பக் கால 17 அசைகள் கொண்ட ஹைக்கூக்களும், கட்டுரைகளும், 550 கடிதங்களும் இடம் பெற்றன.
ஒஸாகி ஹொசாயின் முழுத்தொகுப்பிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட ஹைக்கூகளும், ஆறு கட்டுரைகளும் கொண்ட ஹைக்கூ மற்றும் உரைநடை புத்தகம் ‘பெரிய வானத்தின் கீழ், நான் தொப்பி அணியவில்லை’ எனும் பெயரில் 1993இல் ஹிரோகி சேட்டோ (Hiroaki Sato) என்ற மொழிபெயர்ப்பாளரால் ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு ஆக்கம் செய்யப்பட்டு வெளியானது.
நந்தாகுமாரன்
கோவையில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது பெங்களூரில் கணினித் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணி புரிகிறார். இலக்கியத்திலும், ஓவியத்திலும், ஒளிப்படத்திலும் ஆர்வமுள்ள இவர், பிரதானமாகக் கவிதைகளும் அவ்வப்போது சிறுகதைகளும், கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகளும், பயணப் புனைவுகளும் எழுதுகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுதி 'மைனஸ் ஒன்', உயிர்மை பதிப்பக வெளியீடாக டிசம்பர் 2012இல் வெளியானது. இவரின் இரண்டாம் கவிதைத் தொகுதி 'பாழ் வட்டம்', காலச்சுவடு பதிப்பக வெளியீடாக டிசம்பர் 2021இல் வெளியானது. இவரின் ஆதிச் சிறுகதைத் தொகுதி ‘நான் அல்லது நான்’, அமேசான் கிண்டில் மின்னூலாக ஃபெப்ருவரி 2019இல் வெளியானது. ‘கலக லகரி: பெருந்தேவியின் எதிர்-கவிதைகளை முன்வைத்துச் சில எதிர்வினைகள்' எனும் ரசனை நூல் அமேசான் கிண்டில் மின்னூலாக ஏப்ரல் 2020இல் வெளியானது. இவரின் மூன்றாம் கவிதைத் தொகுதி ‘வெறுமை ததும்பும் கோப்பை தாந்த்ரீகக் கவிதைகள்: பாகம் - ஒன்று’, தமிழ்வெளி பதிப்பக வெளியீடாக டிசம்பர் 2023இல் வெளியானது.