நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத் திறப்பு எது என கவிஞர்களிடம் கேட்கலாமென ஒரு ‘நுட்பமா’ன எண்ணம் எழுந்தது. உடனே தொடர்புக் கொள்ள முடிந்த கவிஞர்களிடம் ” முதன் முதலாக ” என சில கேள்விகளை தொடர்ச்சியாக முன் வைத்து வருகிறோம். சென்ற இதழில் சில கவிஞர்கள் பங்களித்தார்கள் . இந்த இதழில் பங்களித்த கவிஞர்களின் பதில்கள் இதோ..!
- முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? . அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?
ஏழாம் வகுப்புப் படிக்கும்போது போபால் விசவாயு பற்றியது கவிதை நினைவில் இல்லை என் தமிழாசிரியர் பாராட்டினார்.
- முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ?
கல்கி சிறப்பிதழில். (கவிதையும் வருடமும் நினைவில் இல்லை)
- முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ?
முதல் கவிதைத் தொகுப்பு “பாப்பாவின் நட்சத்திரம்”. மார்க்சிய அறிஞர் கோவை ஞானியின் தூண்டுதலால் வெளிவந்தது.
- கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?
என் அப்பா ஜம்புகேஸ்வரன், என் வழிகாட்டி கவிஞர் சிற்பி, என் ஆசான் கோவை ஞானி.. என் கல்லூரி பேராசிரியர் கா.அரங்கசாமி ஐயா இவர்கள்தான் அடையாளம் காட்டினார்கள். “நீ கவிஞர், நீ எழுதுவது கவிதை” என்று.. இல்லை என்றால் முனைவர்கள் போல திறனாய்விலேயே நின்றிருப்பேன்.
- முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?
கவிஞர் சிற்பி விருதுதான் முதல் அங்கீகாரம்.
- முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன. ? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.
கவிஞர் சிற்பி எழுதிய கவிதை கவிதை காலத்தின் உதடு, சூரிய நிழல் தொகுப்பின் கவிதைகள், பள்ளிப் பருவத்தில் கண்ணதாசன் கவிதைகளில் மயக்கம் இருந்தது, இயேசு காவியம் படித்து வியந்த பருவம். மாங்கனியில், ‘தென்றலது வந்ததற்கு சுவடேது..’ என்ற வரியில் ஒரு பித்து.
- முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்?. அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?
என்ன கவிதை என்று சரியாக நினைவில் இல்லை. ஆனால் பள்ளிக்காலத்திலிருந்தே கவிதைகள் எழுதும் ஆர்வமும், அதனால் அவ்வப்போது சிற்சில கவிதைகளும் எழுதியதுண்டு. சரியாகச் சொல்ல வேண்டுமானால் ஐந்தாம் வகுப்பு இருந்தே. ஆனால் தொடர்ந்து எழுதுவதென்பது பதினோராம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தான்.
- முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ?
முதன்முதலாக எனது “அந்தர நடனம்” என்கிற கவிதை கீற்று.காம் இதழில் வெளியானது. அச்சு இதழெனில் அது பொள்ளாச்சி இலக்கிய வட்ட நண்பர்களால் கொண்டு வரப்பட்ட “கருந்துளை” என்கிற இதழில் “தோழர் சே” என்கிற கவிதைதான்.
- முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ?
”கடற்குதிரை” என்கிற பதிப்பகத்தின் மூலமாக எனது முதல் கவிதைத் தொகுப்பான “தற்கொலைகள் அவசியமானவை” வெளியிடப்பட்டது. 2016 ஆம் ஆண்டு மதுரை புத்தகத் திருவிழாவில் வைத்து வெளியிடப்பட்டது. என் மனதிற்கு மிகவும் பிடித்தமான படைப்பாளிகளான கோணங்கி முதல் பிரதியினை வெளியிட யவனிகா ஸ்ரீராம் பெற்றுக்கொண்டார் உடன் நான் பெரிதும் மதிக்கும் படைப்பாளிகள் மனுஷ்யபுத்திரன், எஸ்ராமகிருஷ்ணன், அ.முத்துகிருஷ்ணன், ஆத்மார்த்தி, மற்றும் “மேகா” அருணாச்சலம் இவர்களுடன் நான் ஆசானாக மதிக்கும் “யதார்த்தா” ராஜன் சாரும் அப்போது இருந்தார்.
ஆனாலும் அந்தத் தொகுப்பு வரவேண்டும் என்று என்னைக் காட்டிலும் அதிக ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் இருந்த எனது அம்மா மட்டும் அதனைப் பார்க்க அப்போது இல்லை….
- கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?
கவிதைக்காக என்று சொல்வதைக் காட்டிலும் “இலக்கிய வேள்” என்கிற இதழில் எனது முதல் தொகுப்பான “தற்கொலைகள் அவசியமானவை” தொகுப்பு குறித்து மதிப்பிற்குரிய கவிஞர் விக்கிரமாதித்யன் அவர்கள் எழுதிய கட்டுரை வெளியாகியிருந்தது. அதனை மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன்.
- முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.
நவீன இலக்கியம் வாசிக்கத் துவங்கிய காலகட்டத்தில் நேரடி தமிழ்க் கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் என அனைத்தையும் தேடித்தேடிப் படித்ததினால் ஒரு கவிதையை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வதென்பது கொஞ்சம் கடினம்தான் என்றாலும், ஆரம்ப காலத்தில் நானும் எனது அக்காவும் அடிக்கடி விவாதிக்கும் ஒரு கவிதை என்றால் அது பா.வெங்கடேசனின் “இன்னும் சில வீடுகள்” தொகுப்பிலுள்ள “பொய்” என்கிற கவிதையைச் சொல்லலாம். அதற்குக் காரணம் நாங்களும் அதே போன்ற பாட்டிகளுடன்தான் வாழ்ந்து கொண்டிருந்தோம். இதோ அந்தக் கவிதை
பொய்
பிராமணனில்லை என்கிறவிஷயம் அவளுக்குத் தெரியாது. அதை நாங்கள் மறைக்காமலிருந்திருக்கலாம் என்று இப்போது வருத்தப்படுகிறோம். விளையாட்டாய், கதைகள் கேட்கச் சுலபமாய் நாங்கள் சொல்லி வைத்திருந்த பொய்யால் தன் பழைய நார்மடிப் புடவை போலத் தன் தோளிலேயே சுமந்து கொண்டிருந்த ஆசாரம் கெட்டுப்போய் விட்டதென்று தெரிந்து கொள்ளாமலேயே பாட்டி உடல் வேகாமலிருந்து விடவில்லை யென்றாலு பாட்டியை அப்படி ஏமாற்றிய நிகழ்ச்சி மட்டும் எங்களுக்கு மறக்கவேயில்லை பாட்டியின் முகத்தைப் போலவே. ஒருவேளை முருகன் பிராமணனில்லை யென்கிற விஷயம் பாட்டிக்குத் தெரிய வந்திருக்குமானால் அவள் தன் ஆசாரம் கெட்டுப்போகாமல் தீட்டுத் தீருமட்டும் மேலும் கொஞ்ச காலம் உயிரோடு இருந்து மேலும் கொஞ்ச கதைகள் சொல்லியிருக்கக்கூடும். நாங்கள் கெட்டுப் போக்கியது ஆசாரத்துக்குப் பதிலாக பாட்டியை என்று பயத்துடன் இப்போதெல்லாம் நினைத்துக் கொள்கிறோம்.
- முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?
என்னுடைய பல்கலைக்கழகத்தில்தான் எனது எழுத்து, கவிதை, வாசிப்பு என்பன சிறுகுழந்தையென தவழத் தொடங்கியக் காலம்.
என்னுடைய முதலாவது கவிதை.
ஒரே சிலுவையில் ஒரு புறம் நீ
மறுபுறம் நான்
மேசியாவின் காயங்களும்
வலிகளும் உண்டு
உயிர்த்தெழாமல் மட்டும் நம் காதல்
- முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ?
கிட்டத்தட்ட ஒரு இருபது வருடங்களாக எழுதிய கவிதை, செப்பனிட்டக் கவிதை “கால்பட்டு உடைந்தது வானம்” என்ற தலைப்பில் 2018 உருவானது. இது என்னுடைய முதலாவது தொகுப்பு. பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்றபோது எழுதியதும், விடுகையாண்டில் கொஞ்சமும், பின்னர் வந்த நாட்களில் எழுதிய கவிதைகளே சென்னை ’போதி வனம்’ வெளியீடாக 2018 வெளிவந்தது. புத்தக வெளியீடு இலங்கையில் செய்தேன். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் கவிஞர் சோலைக்கிளி தலைமை தாங்கினார், பேராசிரியர்கள், அப்போது அரச மொழி அமைச்சராக இருந்த மனோ கணேசன் உட்படச் சர்வதேச ரீதியில் பலர் இவ்வெளியீட்டு விழாவில் பங்கு பற்றினார்கள்.
- கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?
என்னுடைய முன்னாள் காதலன் நன்றாகக் கவிதை எழுதுவார். அவர் எனக்கு எழுதிய அருமையான கடிதங்கள் மூலமான கவிதைகளோடு அந்தக்கடிதம் இருக்கும். அவரொரு தமிழ் ஆசிரியர் மிகதிறமான கவிஞன். அவர்தான் என்னுடைய முதல் கவிதைக்கான தலைப்பான கால்பட்டு உடைந்தது வானத்தை மிகவும் நல்ல கற்பனை என உற்சாகம் அளித்து என் கவிதைகளைக் கொண்டாடியவன்..
- முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?
ஒரு விருதும் இல்லை. சில விருதுகளுக்காக நூல்களை அனுப்பி இழந்ததுதான் மிச்சம்.
- முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன. ? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.
எனக்கு என்னுடைய முன்னாள் காதலனால் எழுதப்பட்ட நான் இன்றும் நேசிக்கும் உயிர்க்காதல் கவிதை
உன் பெயரை உரத்துக்கூவுவதானக்
காட்சியில் போர்வைக்குள் முனங்குவேன்
நீயோ
விலங்கிடப்பட்ட பட்டத்து இளவரசியாய்
முறைப்புடன் விலகிச் செல்வாய்”
- முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? . அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?
முதல் முதலாய் நான் எழுதியது கவிதை என எனக்கு அடையாளம் தெரிய வந்தது எட்டாம் வகுப்பில் என்னுடைய 14-ம் வயதில். எழுதிய கவிதை நினைவில் இல்லை.
- முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ?
கீற்று இணைய இதழில் முதலாவதாக வந்தது. அச்சு இதழ் என்றால் காக்கைச் சிறகினிலே என்ற இலக்கிய இதழில் வெளியானது.
- முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ?
2018-ல் யாவரும் பதிப்பகத்தின் வாயிலாக என்னுடைய கவனிக்க மறந்த சொல் என்ற கவிதைத் தொகுப்பு வெளியானது. நாம் நம்பிச் செய்யும் ஒன்று அதற்கு இணையான ஒன்றோடு இணையும் என நான் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது தான் நான் அறிந்த சரியான பின்னணி.
முதல் புத்தக வெளியீடு நிஜமாய் கலவையான மனநிலையில் இருந்தது. குடும்பத்தோடு நம் புத்தக வெளியீட்டில் இருக்கும் போது கொஞ்சமாய் உள்ளுக்குள் வளர்ந்ததைப் போன்ற ஓர் உணர்வு.
- கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?
என் கவனிக்க மறந்த சொல் கவிதைத் தொகுப்பையே என் முதல் அங்கீகாரமாய் பார்க்கிறேன் அப்படி பார்க்கும் போது யாவரும் பதிப்பகத்தின் ஜீவகரிகாலன், கண்ணதாசன், கவிதைக்காரன் இளங்கோ இவர்களிடமிருந்து முதல் அங்கீகாரம் கிடைத்தது. நண்பன் ஜோ எப்போதும் என் கவிதைகளைக் குறித்து பேசும் ஒரு நபராக ஆரம்பத்தில் இருந்திருக்கிறார்.
பின்னர் 2019-ல் ஐயா தமிழவன் அவர்களால் தொகுக்கப்பட்ட சாகித்ய அகாதமியின் இளையவர்களின் புதுக்கவிதைகள் என்ற கவிதைகளுக்கான அந்த வருட ஆவணத்தில் என்னுடைய கவனிக்க மறந்த சொல் தொகுப்பில் இருந்து சில கவிதைகள் அந்த தொகுப்பில் இடம் பெற்றதை என் மதிப்புமிக்க அங்கீகாரமாக கருதுகிறேன்.
- முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?
முதல் முதலாக என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதால் எனக்கு விருதென மனதிற்குள் தோன்றியதைச் சொல்கிறேன். என் பத்தாம் வகுப்பில் பள்ளித் தோழியின் காதலுக்காய் எழுதிக் கொடுத்த கவிதைக்கு அவள் எனக்குப் பரிசாய் கொடுத்த ஹீரோ பேனாவை விருதாய் இன்றும் மனதிற்குள் வைத்திருக்கிறேன்.
- முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன. ? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.
வைரமுத்துவின் மீண்டும் என் தொட்டிலுக்கு என்ற தொகுப்பில் இருக்கிற கவிதை ஒன்று. இப்போது வரிகள் சரியாய் நினைவில் இல்லை.
நியாபகங்களை கொஞ்சமாய் கேள்விகளின் வழியேயும் மீட்டத் தந்த நுட்பம் ஆசிரியர் குழுவிற்கு என் அன்பு.
- முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? . அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?
19 -ஆவது வயதில் முதல் கவிதையை எழுதினேன். ” கல்லூரித்தாய்” என்கிற கவிதை.
- முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ?
இலங்கையில் வெளிவரும் ” உதயன்” என்கிற பத்திரிகை.
- முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ?
புத்தகம் வெளியிட வேண்டும் என்பது என்னுடைய ஆயுட்கால கனவு. ” ஒரு பகல், ஒரு கடல், ஒரு வனம்” எனும் கவிதைத் தொகுப்புதான் எனது முதல் கவிதைத் தொகுப்பு. இந்நூலை ‘கடல் பதிப்பகம்’ வெளியிட்டது. முதல் வெளியீடு உணர்வு.. முதன் முதலாக குழந்தைப் பெற்ற தாயின் பரவசத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல
- கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?
என்னுடைய தமிழாசிரியரிடம்.
- முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?
விருதென்று எதுவுமில்லை. அப்படி விருது வேண்டுமென்று தோன்றுவதுமில்லை. எழுதினால் போதும் என்றே தோன்றும்.
- முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன. ? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.
பாரதியார் கவிதைகள். ” பாயுமொளி நீ எனக்கு”
சிறப்பான நேர்காணல். நுட்பம் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
அருமையான கேள்விகளும் பதில்களும்.
வாழ்த்துக்கள்.