- சருகுகள்
இறந்து போன இலைகள்
காட்டுத்தீயில் எரிந்து விடாத சருகுகள்
காற்றில் அலைந்து அலைந்து
காட்டுத்தீயின் கொடூர கணங்களையும்
தான் தப்பி வந்த வீர பராக்கிரமங்களையும்
எங்கெங்கோ பயந்து நடுங்கியபடி கிடந்த சருகுகளிடம்
“கசகச”வென்ற சத்தத்துடன்
சொல்லி கொண்டிருந்தன.
அவற்றை மேலே என்னால் முடிந்தவரை
மொழிபெயர்த்துள்ளேன்.
- இல்லாத நொடி
நொடிகள் என்னை சுற்றிலும் விழுந்து கொண்டிருக்கின்றன
அவற்றினுள்ளே பல்லாயிரம் கோடி தருணங்கள்
வானத்து நட்சத்திரங்களாக
மறைந்திருக்கின்றன.
ஒவ்வொரு நொடியும் எப்போதும் பெய்து கொண்டிருக்கும் மழைத்துளிகளைப் போல்
நிலத்தின் மீது
விழுவதும் தெரிவதில்லை
காய்வதும் தெரிவதில்லை.
விழுந்த நொடிகளிலெல்லாம்
என் மரணத்தின் நொடியைத் தேடியபடியிருக்கிறேன். அவையோ நான் வாழும் நொடிகளாகவேத் தெரிகின்றன.
இருந்துவிட்டுப் போகட்டுமென
வாழ்ந்தும் தொலைக்கிறேன்.
- காணாமல் போய்விடுங்கள்
திடீரென்று காணாமல் போய்விட்டான் ஒருவன்.
ஃபேஸ்புக்கிலும் இல்லை
இன்ஸ்டாகிராமிலும் இல்லை
டிவிட்டரிலும் இல்லை
புதிதாக வந்த திரெட்டிலும் இல்லை.
அவனின் ஃபோன் நம்பரை வாங்காமல் விட்டுவிட்டேன்.
ஈமெயில் ஐடியோ விலாசமோ கேட்டதே இல்லை, அதனால் கிடைக்கவும் இல்லை.
என்னுடைய உலகிலிருந்து காணாமல் போன அவன்
அவனுடைய உலகில் வாழ்ந்தால் மகிழ்ச்சி.
மரணம் சில நேரங்களில்
இப்படியும் நிகழும்
நீங்களும் ஒரு நாள் காணாமல் போய்தான் பாருங்களேன்…
- முட்டைகளுக்குள்…
இரட்டைப் பிறவிகள்
வளர்ந்த முட்டை ஒன்றாய் என் வீடு.
நாங்கள் இருவரும்
ஒன்றாய்
ஓருலகை
கட்டமைத்து உடைக்கக் காத்திருந்தோம்.
திடமான சுவர்களுக்குள்
முட்டையின் உயிர்
சுழன்றபடியிருந்தது.
உடைத்து வெளியேறவும் சில நேரம் மனம் ஏங்கியது.
உடல்
உடையாலும்
உயிர்
எண்ணங்களாலும்
அழகாவதாய் உணர்ந்தபடியேதான் வாழ்ந்தோம்.
ஒவ்வொரு முட்டைக்குள்ளிருந்தும்
வெளியேறும் உயிர்
தனித்துவம் பெற்ற குணம் கொண்டது அல்லவா.
அப்படியே எங்களுக்குள் வளர்ந்த அன்பும்.
நாளாக நாளாக
அன்பின் மிகுதியில்
வீங்கி நிரம்பி
ஒரு நாள் எங்களின் முட்டை உடைந்து எங்களை வெளியேற்றியது,
அன்றுதான் எங்களின் சூரியன்
எங்களின் நிலாவுக்குப் பக்கத்திலிருந்து
கண்சிமிட்டியது.
அப்போது
நாங்கள் புல்லின் நுனியில் பனித்துளியாக
மிளிர்ந்தோம்.
பிறகு காற்றோடு கலந்து பறந்தோம்.