- பறவைகள் அற்ற வானம்
இருள் சூழ்ந்த
பூச்சிகள் மொய்க்கும்
சிறு விளக்கின் இசை
அங்கே சுழலலாம்
ஓர் ஆங்கிலச் சித்திரத்தின்
சாயலில் அது ஒரு
நீள் பிறழ் படிக்கட்டின்
சிந்தனையும் தான்
நிழல் நகருவது போல
நினைப்புக்குள்
பிரம்மாண்ட தூசுப்படலம்
பாரம் கூட்டும் சேகரிப்பு
அந்த வீட்டின்
அத்தனை முடிச்சுகளும்
அங்கிருந்து தான் கிளம்புவதாக
ஒரு கிளர்ச்சி
ஒவ்வொரு பரணிலும்
ஓர் ஓய்ந்த காலம் இருக்கிறது
இறக்கி ஏற்றிய
பழைய பெட்டியில்
பறவைகள் அற்ற வானம்….!
- காணாமலே போன குறு மனுஷி
ஒரு சாலை சித்திரமாக
அந்தக் கிழவி
ஒரு நைந்த ஓவியமாக
அந்த வளைவில் இருந்தாள்
திடும்மென கலைந்த
தூக்கம் போல
கடந்த வாரம் காணாமல் போனாள்
ஊரார் ஊட்டி வளர்த்த
அந்த சில காலம்
சிணுங்கிக் கொண்டிருக்கிறது
மரத்தடிக்கு
வீடு கட்டித் தந்த குறு மனுஷி
மறைந்ததெப்படி
பறவைகள் தேடலாம்
பார்வைகள் தேடுகின்றன
இலைகள் தைரியமாக விழலாம்
கூட்டிப் பெருக்க
கூனி இல்லை இனி
நாலைந்து முறை
காசு கொடுத்திருப்பேன்
நானும் கூட நலங்கிள்ளி தான்
யாரோ தந்த பழைய கட்டில்
யார் யாரோ தந்த பழைய போர்வை
சேலை செருப்பு என
இன்னும் சில பொருட்கள்
போட்டது போட்டபடி
எங்கே போனது வாசல்படி
வழக்கம் போல
சோறு கொடுக்க நீளும்
முகமற்ற கைகள்
காசு தரும்
முகவரி அற்ற கருணை
கண்கள் சுழற்றி தேடலாம்
அந்த மரத்துக் காக்கைகள்
அறிந்திருக்குமா
தனக்கே பிச்சை தான் பிஸ்கட்
நாய்க்கும் அதைத் தந்து உயர்ந்த
மூன்றடி சுருக்கம்
எங்கு தான் போனது
யாரிடமும் கேட்கப் பயம்
செத்து விட்டது என்று கேட்பதை விட
காணவில்லை என்று புரிவது சுலபம்
மேலும்
எங்கோ காணாமல் போய்
இங்கே வந்த மனுஷிக்கு
காணாமலே போவதொன்றும்
பெரிதல்ல
கொஞ்ச நாட்களுக்கு
வழியை மாற்ற வேண்டும் நான்
கொஞ்ச நாட்களுக்கு பழியையும்
சுமக்க வேண்டும் தான்
- ஒரு டீ சொல்லி போங்கள்
எதிர் எதிர் இருக்கை
அவரவர் கையில்
அவரவர் தேநீர்
வரிசை வரிசையாய்
இளைப்பாறல்
வரும் போது
வேர்த்துப் பூத்திருப்போர்
செல்கையில்
செழித்த நல் முகத்தில்
ஒருவருக்கு ஆறு நிமிடம்
ஒருவருக்கு ரெண்டே நிமிடம்
குடித்து முடிக்கும்
அவரவர் கோப்பை வித்தை
எப்போதேனும்
எவர் இருவருக்குமிடையே
இயல்பாய் பூக்கும்
அரை நொடி புன்னகை
மானுடத்தை மானுடம்
கை விடா தருணம் அது
எவருக்கும் பொது
இசையும் மின் விசிறியும்
எழுந்து கிளம்புகையில்
இலகுவாகிறது இடைவேளை
தேநீர்க் கடையை
தியான மண்டபம் என்கிறேன்
ஆம் என்போர்
ஒரு டீ சொல்லி போங்கள்…!