மனமேகங்கள் ஓய்ந்துறங்கும் இரவுகளில்
மினுக்கி நட்சத்திரங்களாய்,
எட்டிப்பார்க்கின்றன இறந்த கால இரணங்கள்
பிறரறியா துயரமதை ,
உலர்த்திப்போன காற்றறியும்,
கன்னங்களின் உப்புவழிதடம்..
மறக்கவியலாமல் கூடிக்கொண்டே
போகிறது அவமானங்களின்
எண்ணிக்கை..
அடுத்தவேளை உணவின் முன்பு
கையேந்தும் காலம் பற்றி எரிகிறது
எரிதழல் உருக்கும் நிறை நிணமென.
செம்மண் நிலம் விழும் வெண்ணிறகு,
பனிபடரும் பால் பருவச் சிகரம்..
புகை நடன நளின திண்ணசைவு,
நகில் போர்த்திய மென் துகில்,
ஈடில்லை
கடக்கும் குழந்தை கை ஸ்பரிசம்.