cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 4 கவிதைக் களம்

அற்புதம் அம்மா அறிவது


ராயிரம் ஆண்டுகளின் முன்பு
அந்த நிலம் பூந்தோட்டமாக இருந்தது
அழகாக அணிவகுத்துச் செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து
குந்தியபடி நகர்ந்த குழந்தைகள்
பதியனிடம் வந்து சேர்ந்ததும் தயங்கிநின்றனர்
எறும்புகள் ஆயிரமாயிரமாய் மடியும் என்பதால்
கையில் ஏந்தியிருந்த பூவாளித் தண்ணீரை
வார்க்க மனமில்லாது
ரோஜாச் செடியைப்பறித்து வேறிடம் பதித்தனர்

இரண்டாயிரம் ஆண்டுகளின் பின்
மூவண்ணக் கொடியுடன் மரணம் அந்த பூமியில்
காலடி வைத்தபோது ரோஜாக்கள் வாடி உதிர்ந்தன
40,000 சிற்றெறும்புகள் மடிந்தன
சிறுமியர் நசுங்கினர்
2009ஆம் ஆண்டு மே 18
அசோகச் சக்கரம் பின்தலையில் சுழல
செஞ்சேனையின் மாபெரும் தலைவர்
இலங்கைச் சிங்கத்தின் கையில்
பச்சை இரத்தநெடி வீசியவாளுக்குப் பதில்

தமது இலச்சினைகள் பதித்த
புத்தம் புதிய கறுத்த பென்னாம் பெரிய கோலிகள் தந்தார்
அடர்ந்து கறுத்த சீருடையும்
இரத்தச் சிவப்பில் பட்டியும் அணிந்து
முண்டுகட்டிய அழகிய பெண்கள் பரிமாற
கால்கள் தடுமாற அவர்கள் இரவை நிறைத்தனர்

60,000 விதவைகள்
40,000 அநாதைக் குழந்தைகள்
40,000 காணாமல் போனோர்
40,000 சிதறிய உடல்கள்
புத்தர் புன்னகைத்தார்
இரவல் காந்தியின் உயிரின் விலை இதுவென்றது
முள்ளிவாய்க்காலின் கறுத்த புகைவானம்
அதே என்றபடி
துள்ளித்துள்ளி ஆடிக் களித்தது கோதபயாவின் குறி
அமைதி தீவில் எங்கும் பரவியது
அடர்ந்த பச்சைவனங்களின் அருவிநீரில்
தமிழர் குருதி வழிந்து பெருக்கெடுத்து
புத்தபிக்குகளின் பாதங்களை நனைத்தது
சாந்தி சாந்தி என்றபடி
படையினர் கையில் கங்கணம் கட்டி
ஆசி வழங்கினர் புத்தனின் அடிநடந்தவர்

பேரறிவாளன் முருகன் சாந்தன்
இன்னும் ஈராயிரம் ஆண்டுகள்
நடந்தும் கடந்தும் வாழ்வர்
அற்புதம் அம்மாவின் ஒரேயொரு மகனுக்காக
4,000 மகன்கள் மகள்கள்
சே குவேராவிற்கு
ஒரு தென் அமெரிக்க மோட்டார் சைக்கிள் டைரி
பேரறிவாளனுக்கு
இரண்டாயிரம் மோட்டர் சைக்கிள் குறிப்பேடுகள்

அன்னையே அற்பும் அன்னையே
கண்ணீர் திடமாகி உறைந்து
நீதி கோரி நிற்கும் தாய்மையே
உயிர்தரும் தருவே
அழகாக அணிவகுத்துச் செல்லும்
எறும்புகளைத் தொடர்ந்து
குந்தியபடி நகர்ந்த குழந்தைகள் என
ரோஜாப்பதியனிட
மறுபடி நாங்கள் வந்திருக்கிறோம்

பேரறிவாளன் முருகன் சாந்தன்
இன்னும் ஈராயிரம் ஆண்டுகள்
நடந்தும் கடந்தும் வாழ்வர்
இரவல் காந்தியின் உயிரைவிடவும் பெரிது
அடிமை பூமியில் ஒருபோது
சுதந்திரமாய் அழகிய நடனமிட்டு நகர்ந்து
உயிர்த்திருந்த ஒரேயொரு சிற்றெறும்பின் உயிர்.


 

  இந்த கவிதை 2016- ஆம் ஆண்டு வெளியான யமுனா ராஜேந்திரனின் “ஞாயிற்றுக்கிழமை அதிகாலைச் சதுக்கம் “ எனும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.  யமுனா ராஜேந்திரன் அவர்களிடம் உரிய அனுமதிப் பெற்று ‘நுட்பம்’ -கவிதை இணைய இதழுக்காக  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது .

ஞாயிற்றுக்கிழமை அதிகாலைச் சதுக்கம்

உதிரிகளின், ஏதிலிகளின் மரண வரலாறும் தேச உருவாக்கத்தின் விளைவான தனிமனித அன்னியமாதலும் யமுனா ராஜேந்திரனின் கவிதைகளில் திடுக்கிடும்படி பதிவாகின்றன. தேச நினைவற்றவர்களின் அடித்தள பண்பாட்டு நடத்தைக்கு ஒரு தற்கொலை வரைபடத்தையும் இக்கவிதைகள் கோருகின்றன. தன்னிலை மனதின் சிதைவையும் ஒழுங்குபடுத்தப்பட்ட ஆண்மொழியின் வடிவத்தையும் கலைத்துச் செல்லும் இவை, நிறுவனமாகாத பாலியல் எச்சங்களின் வழியே மூலதனம் அவிழ்த்துவிட்டிருக்கும் பின்நவீனத்துவக் கேளிக்கையையும் அதன் நகல் கலைகளையும் வர்க்க உறுதிப்பாட்டுடன் கடந்து செல்லவும் முயல்கின்றன. ஓருலக முதலீட்டிய பொருண்மைக்கு எதிரான எதிர்க்கலகக் கலையாக, தமிழில் ஈழப் பார்வையுடன் கூடிய புதிய வரவாக இக்கவிதை நூல் நமக்குக் கிடைக்கிறது. கவிஞர் தன் பால்யத்தின் இழப்பிற்கு வைக்கும் சமகால அரசியல் அறம் இத்தொகுப்பு

– யவனிகா ஸ்ரீராம்

நூல் : ஞாயிற்றுக்கிழமை அதிகாலைச் சதுக்கம்

பதிப்பகம் : பன்முகம் பதிப்பகம்

முதல் பதிப்பு : செப்டம்பர் 2016

பக்கங்கள் : 144

விலை : ₹ 100

நன்றி : 

  •  யமுனா ராஜேந்திரன்
  • விகடன் இணையதளம் (அற்புதம் அம்மாள் – புகைப்படம்)

About the author

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்

”மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று”
என நம்பும் யமுனா ராஜேந்திரன் கோவையில் பிறந்து தற்போது லண்டனில் வசிக்கிறார். கவிஞர், நாவலாசிரியர், அரசியல் கோட்பாட்டாளர், சினிமா விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் என பன்முக ஆளுமையாளராக திகழ்கிறார்.
இலக்கியம், கோட்பாடு, திரைப்படம், அரசியல், கவிதை, மொழியாக்கம் என இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகி இருக்கின்றன.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
பா.கயல் விழி

மெய்சிலிர்க்க வைத்தது வார்த்தைகள் ஒவ்வொன்றும்

You cannot copy content of this Website