cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 5 கவிதைகள்

மலர்விழி கவிதைகள்


  • முழுதாய் மக்கிப் போகாத இதயம்

கையடக்க கல்லறைத் தோட்டத்தில்
பத்து இலக்கக் குறியிட்ட
கல்லறைகள்

முதல் கல்லறையைத் திறந்ததும்
முத்த வாடை

இரண்டாவதில் இன்னும்
முழுதாய் மக்கிப் போகாத இதயம்

விரல்களை
வாகனமாக்கிக் கடந்து போனேன்

பாதி திறந்திருந்த கல்லறை ஒன்று
என் இரகசியங்களைத் துப்பியது
மூடிவிட்டு

பூக்கள் விழுந்த கல்லறையிடம் நலமா என்றேன்
உள்ளே
புன்னகைக்கும் சத்தம்

மௌனத்தை உண்ணும் பூச்சிக்கு
இந்த உரையாடல்கள் பிடிக்கவில்லை

தோட்டத்திலில்லாத
ஒரு கல்லறையின் மீது
ஊர்ந்து சென்றது

அது
என் இதயத்தில் இறங்கிய
கத்தியைப் புதைத்த இடமஂ!!

  • மௌனத்தின் உரையாடல்

உன் கைப்பிடித்துப் பார்க்கிறேன் கவிதை நாடி தெரிகிறது

உனக்கு என்ன தெரிகிறது?

மௌனிக்கிறாய்….

உன்னோடு உரையாடும் போதெல்லாம் நாவலின் நடை தெரிகிறது

உனக்கு என்ன தெரிகிறது?

கடலை வெரிக்கிறாய்…

உன் சிரிப்புக்குள் எல்லாம்
சிறுகதை தெரிகிறது

உனக்கு என்ன தெரிகிறது?

சிரிக்கிறாய்

இத்தனை உவமைகளை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்?

இதற்காவது பதில் சொல்…

வானத்தைப் பார்க்கிறாய்

எதுவுமே பேசாமலிருக்க

என்னை எதற்கு வரச் சொன்னாய்?

நான் எழுத்தாளனாகப்
பிறக்க
எனக்கொரு கருவறை வேண்டாமா? என்கிறாய்!!

  • ஊடல்

நீ சண்டையிட்டு நகரும்
இரவில்

நீ முத்த சமிக்ஞைகள்
அனுப்பாத இரவில்

ஒற்றைக்காலில் நிற்கும் பிளமிங்கோவைப் போலத்
தவித்துப் போகிறேன்

ஜோசியக்காரனின் கிளி போல உன்னைச் சரிசெய்யும்
அட்டைகளைத் தேடி அலைகிறேன்

நீ என்னைத் தேடும் விடியல்
எவ்வளவு நல்ல அட்டை
நம் காதலில்.


 

About the author

மலர்விழி

மலர்விழி

கவிஞர் மலர்விழி பெங்களூரில் வசிக்கும் மென்பொறியாளர், கவிதைகள் எழுதுவதோடு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். ஓவியங்கள் மீதும்  வரைவதிலும் மிகுந்த ஆர்வம் உடைய,
இவருடைய கவிதைத் தொகுப்புகள் :
’விடாமல் துரத்தும் காதல்’ (எமரால்டு பதிப்பகம்),
“ஜூடாஸ் மரம்” (வேரல் புக்ஸ் ),
மற்றும் மலர்விழியின் மொழிபெயர்ப்பில் ‘அகாசியா மலர்கள்’
- பன்னாட்டு மொழிபெயர்ப்புக் கவிதைகள். (வலசை பதிப்பகம்0

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
க.ஆனந்த்

சிறப்பான அகவயக் கவிதைகள்.

You cannot copy content of this Website