- சோ ன்னு அடிக்கற மழைல ஒரு ஓவியம்
கொய்யா மரத்த காணோம்
குறுகுறுன்னு ஓடற அணிலை காணோம்
வெள்ளந்தியா பேசற சுரேஷ்
வெடைப்பா மீசை முறுக்கி திரியறான்
ஆட்டு மூக்கன் தூக்கு போட்ட கதை
படபடக்க வைக்குது
கிரேஸ் மேரியை காணவே காணோம்
எவனையும் எனக்கு தெரியல
என்னையும் எவனுக்கும் தெரியல
பெரிய இவனாட்டம் வருஷம்
ஒரு தடவை போறேன்
ரெண்டே நாள்ல திரும்ப ஓடி வந்தர்றேன்
எல்லாம் புரிஞ்ச மாதிரி இருக்கு
ஒன்னும் புரியல மக்கு மாதிரி இருக்கேன்
சோ ன்னு அடிக்கற மழைல
இந்த பக்கம் சிவக்குமாரு
அந்த பக்கம் சுப்ரமணி
நடுவுல நானுன்னு நடந்தே
பள்ளிக்கூடம் போவோமே
அது மட்டும் ஓவியமா எங்கயோ கிடக்குது
அங்கயே கிடக்கட்டும்
அது மட்டுமாது…..!
- மறுஜென்மன்
முன்னொரு காலத்தில்
நீர் ஓடிய தடம் அது
நீராடிய இடமும் தான் அது
எங்கிருந்தோ வந்த திசை குறிப்பென
நதி தாண்டும் மானை
கனா காண்கிறேன்
அந்தரத்தில் நிற்க மாரளவு சிலை
தலை பூத்த நதி
அன்று பூத்த மலராய்
ஏவாள் கண்கள்
கண்ணுக்கெட்டும் தூரம் வரை நதிக்கு
எவனுக்கு வாய்த்த ஓவியம் இது
காலம் நிறுத்தி கவிதை செய்யவும்
ஒரு வழிப்போக்கன்
இந்நேரம் இருந்திருக்க வேண்டும்
பாடும் பறவைகள்
தேடும் சிறகுகள்
இசை கோர்த்து இனிப்பு தூவ
இளங்காற்றில் மினுக்கி கொண்டோடும்
சிறு நதிக்குள் ஒரு ஜீவன்
படபடவென காற்றில் கரைகிறது எல்லாம்
நதி ஓடிய தடம் வழியே
வெயில் ஓட்டி செல்கிறான்
ஆட்டுக்கு கை கால் முளைத்த
மறுஜென்மன்
நதியா பிராண்ட் வாட்டர் பாட்டில்
முதுகு பையில்.
- தான்தோன்றி
கேள்வியற்ற பாடம் தான்
உங்கள் விருப்பம்
மீசை முறுக்குதல் கூடாது
புஜம் தெரிந்து விட அனுமதியில்லை
டக் இன் செய்து
மழுங்க சிரைத்திருத்தல் வேண்டும்
சற்று மாறுபட்டாலும்
கழிசடை ஆக்குவீர்கள்
கருத்து சுதந்திரத்தை விட
கத்திரிக்காய் சாம்பார் சுலபம் உங்களுக்கு
மாற்று சிந்தனைக்கு
மரியாதையற்றவர்கள் என்று
சுலபமாக பெயர் சூட்டுகிறீர்கள்
ஆமாஞ்சாமிக்கு ஒத்துக்கவில்லையெனில்
ஆவேசமாய் பிரயோகிப்பது
அதிகாரம் மற்றும் அன்பெனும் ஆயுதம்
ஒரே கோட்டில் நின்று
உங்கள் பாதைக்கு மட்டும் உரம் ஆவதை
மறுக்கையில்
கிறுக்கன் என்கிறீர்கள்
தாவோ புத்தன் ஜென் பேசினால்
தான்தோன்றி பட்ட பெயர்
கூட தருதலையும் சேர்த்தல்
உறவினர் மத்தியில் உங்களுக்கான கெத்து
கண்கள் கொண்டும்
காட்சி தெரியாதோர்க்கு
இனி சொல்ல ஒன்றுமில்லை எனும்போதுதான்
இப்படி எழுதி முடிக்க வேண்டி இருக்கிறது
அறிவாளிகள் அடுத்த வீட்டிலிருந்தே
வர வேண்டும் என்ற
உங்கள் அடிப்படை வாதத்தையும் சேர்த்து.
- மீச்சிறு நகலென
கண் விழித்த காட்டில்
முகம் இல்லை
தூரத்து வானம்
துண்டுகளின் துகில்
உரிந்தது போல
மரம் விலக்கிக் காண
மனம் விடவில்லை
மெழுகு கரங்களினூடே
சிற்றோடை அள்ளச் சொல்லித்
துளி விழிப்பது புரியும்தான்
மீச்சிறு நகலென
நெற்றி தொடும் நிழல் வலையில்
நிம்மதிக்குக் கூடுதல் மறதி
பின் எழுந்து மெல்லூறும்
சூரிய கால்களில்
சிலந்தி வலை சதியோ சதி
எவ்வழியும் அடைத்து விடப்
பச்சையம் பூத்த பாதங்களைக்
கழற்றித்தான் என்ன ஆகிறது
வெற்று உருமலை
நிறுத்திக் கொள்தல் தான்
அரூபன் உணர்வது…!
- இலையென அலையும் காலம்
இறுமாப்பு அல்ல
இதயம் விட்டு
இறைஞ்சுதல் அது
மனம் விட்டுப் பேசுதலும்
உதிர்தலில் இருக்கிறது
உணர்வது பற்றிக் கண்டறிய
விட்டு விலகுதல்
அவசியம்
மாயங்களில் மௌனிக்கும்
மர்ம புன்னகை
உதிர்ந்த பின்
கிடைக்கும் கோட்டோவியம்
இலையென அலையும்
காலத்திடம்
ஆயிரம் கை விரித்து
தன் எலும்பை தானே
எண்ணுதல் தவம் கூடல்
எப்படியோ
தனது ஒற்றைக்கால் தவத்தை
நிகழ்த்தத் தவறாத
மரத்துக்கு
அடுத்த முறை உயிர்த்தும்
உதிரத் தான் ஆசை.