வெகு நிதானமாக மழை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
மனம் பிறழ்ந்த அவளை
அவள் கண்களில் வடியும் இளஞ்சூடான கண்ணீரில் உதிர்வது
பழைய ஞாபகங்களின் பரவச இயக்கம்
கிளைகள் ஒடிய மரங்கள் அசைகிற நாளில்
மலை ஆடென
மலைச்சரிவின் விளிம்பு வரை சென்று திரும்பும் அவள்
கடலளவு தாகம் கொண்டவள்
சன்னமான குரலில் வாதாடுபவள்
இருண்ட நிலவறை இரவை அசாதாரணமாக கடந்து வருகையில்
ஒரு குளத்தை கையிலேந்தி வருகிறாள்
பிரபஞ்ச தரிசனத்துக்காக கொண்டு வந்ததாகச் சொல்கிறாள்
வான நிறத்தில் புடவை கட்டிக்கொண்டு
தான்தான் வானமென்கிறாள்
நிலாவென நடந்து காட்டுகிறாள்
விண்மீன்களென திடீரென ஓடி விழுந்து சிரிக்கிறாள்
இரவுப்பறவையென
இடம்பெயர்கிறாள்
இவளைப்பற்றி சிலகாலமாக
அறிய முற்படுகிறேன்
அனைத்தின் காரண காரியங்களை ஆராய்கிறேன்
தர்க்கித்துக் களைத்தே போகிறேன்
வேலைக்காகவில்லை ஒன்றும்
நம்மால் முடியாது என விட்டுவிட்ட பொழுதில்
தடைகளையெல்லாம் விலக்கியிருக்கிறாள்
சுய தீவிரத்தால் எல்லாவற்றையும் மீறி
தன் இரகசியங்களை யதார்த்தமாக உடைத்தெறியும் அவளோடு சேர்ந்து
நானும் மனம் பிறழ்ந்தாக வேண்டும்
இப்போது
அம்மாடியோ
ஒருமையாக இருப்பது எவ்வளவு உன்னதம்
இருமையாக இருத்தல் பெரும் பாதகம்.
Courtesy :Art by Valerie on DeviantArt