அனுபூதி
விழும் முன் இருந்த
விதியை நினைக்க கூடும்
விடுபடுதலின் வியாக்யானம்
வெற்றிடம் நிரம்ப புரியலாம்
நிலம் படும் முன்
நித்திரை சூழ்ந்திட கூடாது
பெருங்காற்று
இப்போதைக்கு வேண்டாம்
சிறுபிள்ளை கைகள்
தூரங்கள் காக்கட்டும்
கவிஞன் எவனும் கபளீகரம்
செய்திடா கருணை அவசியம்
மண் தொடுதல் பற்றி
மறந்து விடுதல் நலம்
பண்படுதல் பற்றி தவம்
இயற்றும் நேரம்
நம்புகிறேன்
அலைக்கழிப்பில்
அனுபூதி அடைகிறது இலை
சித்திரம் நகர்கிறது
நெடுந்தூர பயணத்தில் சாலையோர
பச்சை வண்ண ஹோட்டலில்
தேனீர் அருந்துகிறேன்
பசிக்கிறதா இல்லையா
என்பது பற்றி சொல்வதற்கில்லை
தேவாவின் 90கள் ஸ்பீக்கரில்
கானா வாசிக்கின்றன
நெடுஞ்சாலை இடதும் வலதுமென
றெக்கை கட்டி இருக்கிறது
ஓய்வில்லாத உலகம் செவ்வகம் தான் போல
உலக சக்கரத்தை மீண்டும்
உருட்ட ஆரம்பிக்கும் ஓட்டுநர்
ஒலி எழுப்பி ஓலை அனுப்புகிறார்
ஓடிச் சென்று ஜன்னல் அடைகிறேன்
என்னைப் போலவே
தேநீருக்கு பிறகு ஓடோடி வந்து
பேருந்தில் ஏறும் யாரோ நீ
இந்த மென் இரவில்
சுடர் ஏந்தியது போல
மனச்சூட்டில் ஏனோ இனி
தூக்கம் வரலாம் எனக்கு
தூக்கம் வராத
அந்த சிற்றூர் சாலைவாசிக்கு
சித்திரம் நகர்வதாக படலாம்
இனி இந்த பேருந்து…!
தவளை முதுகில் சிந்தனை
முயலுக்கு மூன்று கால்
இல்லையில்லை ரெண்டரை என
சொல்ல வேண்டும்
காதுகளை எதற்காகவும் திறவா
வாய் மட்டும் செத்தும்
திறந்து கிடக்கும்
கேள்வி கேட்டு பதிலும் சொல்லி
கேட்ட கேள்வி விட்டு
சொல்லும் பதிலும் விட்டு
தவளை முதுகில் தான் சிந்தனை
உண்மையில் கவனமற்ற சிரிப்பெல்லாம்
உண்மையில் நூல் அறுந்த பட்டம்
வானில் தெரியும் வரை கவர்ச்சி
பிறகு சிக்கி சின்னாபின்னமாகி விடும்
கவிதை மனதுக்கும் கலங்கிய மனதுக்கும்
நூல் தான் இடைவெளி
மற்றும் தன்னை மட்டுமே
இவ்வுலகம் தூக்கி சுற்றவில்லை
ஜய்ஞ்சக்கா போடுவோர் மேலிருக்கும்
ஈர்ப்புக்கு ஒருபோதும் விடிவில்லையெனில்
தலையில் நடக்கிறாய்
கால்களில் சிந்திக்கிறாய்
திறவாத கதவு
ஒன்று பட்டும் படாமல் பேசுகிறீர்கள்
அல்லது பேசாமல் விடுகிறீர்கள்
மறைந்து பார்க்கிறீர்கள்
அல்லது
மறைக்க பார்க்கிறீர்கள்
இருப்பதை இல்லையென்பது
கடினமென அறிந்ததும்
இல்லாததை இருப்பதாக்கிக்
கொள்கிறீர்கள்
போலிகளின் முகப்பூச்சுக்கு
எத்தனை காலம்தான்
கண்ணாடி பிடிப்பது
பின்னிருந்து வருகிறவன்
பின்னாலேயே வர வேண்டுவது
குதர்க்கம் தானே
சிந்தனையின் வழியே
விடிவுக்கு நகர்வதை
வேடிக்கையாவது பார்க்கலாம்
பொருட்டில்லை என்பது போல
பாவிக்கிறீர்கள்
வேறு வழியில்லை
திறவாத கதவு உடையும் வரை
எட்டி உதைக்க
தயங்குவதில்லை யாம்…
மனமே நீ ஒரு மாய மான்
உன் வசீகரம் எதுவென
நினைத்துக் கொண்டிருக்கிறாய்
எதற்கு அடுக்கடுக்கான வேஷங்கள்
ஏன் தலையுமற்ற வாலுமற்ற தடுமாற்றம்
கற்பனை வேறு hallucination வேறு
புரிகிறதா
உன்னிலிருந்தே மற்றவர் உலகமும்
சுழல வேண்டும் என்பது பிழையிலும் பிழை
இறந்தவன் வீட்டிலும் நீயே
மாலையிட்டுக் கொள்வது முறைதானோ
வானவில்லில் தொற்றித் திரியும் உன்னை
யார் தான் காப்பாற்றுவார்கள்
வஞ்சம் நிறைந்த புன்னகையில்
வாழ்வு குறைகிறது பார்
ஓயாமல் உளறிக் கொண்டே இருப்பதில்
என்ன கண்டு பிடித்தாய்
தாங்கொணா அயற்சிகளை
சொற்களின் இடுக்கில் கொண்டிருப்பது
அநியாயம் அறி
மனமே
உன்னில் சுற்றித் திரியும் ஆயிரம்
நான்களையும் கவனி
அத்தனையிலும் excentric ego.
Courtesy : Art: Noel Badges Pugh instagram.com/hallucination.page