தூரத்தில்
நிரம்பியிருந்த பள்ளத்தை
அருகினில் கண்டபோது
என் பார்வையின்
தொலைவை
வானம்
நிரப்பிக் கொண்டிருந்தது…
இன்றொரு
மூங்கில் செடியைக் கண்டேன்
மறைந்து போகாது
அதன் வளர்ச்சியை
கணுக்கணுவாய்
காணலுற்றேன்
அக் கழியையூன்றி
பயணித்த என்னை
கணித்துக் கொள்ளுமோ
அழிந்தழிந்து போகும்
நீர்த்தடம்.
எப்போதும் நிகழ்ந்து
கொண்டுதானிருக்கிறது
நினைவில் அவ்வப்போது
வந்து வந்து போகும்
ஊரைப்போலவே
ஊரைக் கடந்து போகும்
என் பயணமும்
நிமிடச் சாரலில் நனைந்து
ஆறு
அளவு கடந்த வேகமாய்
போய்க்கொண்டிருந்தது..
மலையிலே
தீ
பாதையின் துல்லியத்தில்
ஒளி உமிழ அசைவற்று
நாகமாய் கிடக்கிறது
பாவை விளக்கில்
ஒரு துளி வழி
செதில் செதிலாக
இருளுடைந்து ஆலயத்
தூணாகி நெளிகிறது
புலப்படலாம்
கல்லும் கடவுளும்.