cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

கே.ஸ்டாலின் கவிதைகள்


சரியான தவறு

புதர் இருக்கும் பக்கம்
அடிக்கக் கூடாதென்பது விதி
பந்தின் திசையை
கணிக்கத் தவறும் 
யாரேனும் ஒருவன் மட்டையை
லாவகமாக சுழற்ற
பந்து புதரில் தஞ்சம் புகும்.
அடித்தவனே எடுத்து வரவேண்டும்
என்பது அடுத்த விதி
இதில் தோல்வியுறும் எவனுக்கும்
கஜேந்திரன் உதவுவான்_ஆம்
பந்து சென்ற அதே பாதையில்
ஒரு கல்லை விட்டெறிவான்
அது விழுந்த இடத்தின்
சமீபத்தில் நிச்சயம் பந்து
கண்டெடுக்கப்படும்.
ஒரு தவறை சரி செய்ய
அதே தவறை மீண்டும் சரியாக
செய்ய வேண்டும் என்பதே
பால்ய நண்பன் கஜேந்திரன்
கண்டறிந்த விதி.
ஆண்டுகள் பல கடந்து
எந்த தவறை நேர்செய்ய
மீண்டும் மீண்டும்
தவறிழைத்தானோ தெரியவில்லை
இன்று காலை தற்கொலை
செய்து கொண்டதாய்
தகவல் வந்தது.
                

நட்பிழை

பழுதான சைக்கிளின் மீது
நண்பன் அமர்ந்து வர
இவனது சைக்கிளை
ஒரு கையால்
மிதித்துக் கொண்டு
மற்றொரு கரத்தால்
நண்பனின் கைப்பற்றி
சுமந்து வருகிறான்.
எதிர்வரும் வாகனங்களுக்கு
கைகள் விலக்கி வழிவிட்டும்
மீண்டும் கைகள் பிணைத்தும்
பயணித்துச் செல்லும்
இவர்களின் ஊடாக
தார்ச்சாலை மீது
அழுத்தமாய் திரிக்கப்படுகிறது
நேசத்தின் அறுபடா இழையொன்று

About the author

கே.ஸ்டாலின்

கே.ஸ்டாலின்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website