cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

குமரகுரு கவிதைகள்


தூரத்தில் கேட்கிறது
ஒரு பைக்கின் சக்கரம்
சாலையில் அழுந்த உராயும்
“கிரீச்ச்ச்” ஒலி!

எப்போதாவது
நடு இரவில்
மூடிய கண்ணாடி சன்னல்களை மீறி
கேட்டு விடுகிறதொரு
ஆம்புலன்ஸ் சைரனொலி!

ஏகாந்தமான மாலையிலொரு
மழைச்சாரலின் நடுவில்
சூடான தேநீரை அருந்தும் நேரம்தான்
தப்படி சத்தத்துடன்
சாலையில் கடக்கிறதோர்
இறுதி ஊர்வலம்!

“அவனைப் பார்த்து நெடுநாட்களாயிற்றே?”
என்று சற்றுமுன் நினைத்தவனை திடீரென்றொரு
கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் சந்திக்க நேரிடுகிறது!!

இதோ இந்த கடலே ஒரு பிணமாய் மிதந்து வருகிறது!
நான் உயிருடன் கரையில் நின்றபடி அதனைப் பார்க்கிறேன்!
இத்தனை நாளும்
நான் காத்திருந்தது
இறக்கத்தான்!!
வாழ்வதே அதற்குத்தான்!!
காலத்தை மணல்களாக்கி
அதன் மேல்
என்னை கடலாக மிதக்க செய்துவிட்டு…
இந்த செவ்விய அந்தியில்
நிலாவை டார்ச் ஆக்கி
யாரையோத் தேடுகிறது
இந்த இயற்கை!!

என்னால் முடிந்த அளவிலொரு
டால்ஃபினைத் துள்ள செய்து
அதன் முகத்தில் நீரிரைத்தேன்!!

பிறகு மெல்ல கடற்கரையிலிருந்து நகர்ந்து
சிகரெட்டொன்றைப் பற்றி வைத்து
எரியத் துவங்கினேன்
அத்திப் சூரியனாய் தகதகவென!!
புகை உதட்டிலிருந்து
வெளிக்குள்
கலப்பதைப் பார்த்துவொரு எகத்தாளம்!!
என் சாவு என் கையில்
என்ற அகம்பாவம்!!

எங்கேயோ ஒரு குழந்தை
அழுகிறது,
அது அழ! அழ!!
என் இரவு நீள்கிறது…
எல்லா இரவையும்
நானொரு மரங்கொத்தியாய்
கொத்தி கொண்டேயிருக்கிறேன்…
மீன்கொத்தியாய் பறந்து வந்திறங்கிப் பிடிக்க வேண்டிய மீனைப் தவற விடுகிறேன்!!
கூகையின் தலையாய் சுற்றுகிறது மனம்!!

எங்காவது யாராவது எதற்காகவாவது துன்பத்தில் உழைக்கிறார்கள்!!

எனகக்கோ!! நானே துன்பம்!!
இன்பத்தின் அருகிலேயே
மிதந்து திரியும்
ஆகச் சிறந்த துன்பம்!!

கோட்ஸே வின் துப்பாக்கியிலிருந்து
காந்தியை சுட முடியாத
தோட்டாக்களைப் போல்…
நானுமொரு தோட்டா!!

எனக்கு முன்னர்
ஒருவனும்
எனக்குப் பின்னர்
ஒருவனும்
வெல்வார்கள்!!
என்னால்…

விதைப் போல் மண்ணுக்கடியில்
ஒளிந்து கொள்பவன் தான்
வேறாகவும்
கிளைகளாக வரம் பரவிக் திரிகிறானில்லையா?

சம்பந்தமேயற்ற வாழ்வின்
சம்பந்தங்களைப் பற்றி
ஆழ்ந்து யோசித்தபடியிருக்கப் பழகியவனை…
கிரீச்சொலியும்
தப்படியும்
அழுகையும்
ஓலமும்
ஒப்பாரியும்
எதுவும் செய்ய முடியாது!!

வந்து வீழ் மழையே!!
வந்து வீழ் மழையே!!
என் விலாவிலிருந்து
வெளியேறக் காத்திருப்பவளுக்காக
வந்து வீழ் மழையே!!
கடலை நனைத்து போ…

டகுகள் ஓய்வெடுக்கும்
கரையில்
துறுதுறுவென ஓடி கொண்டிருக்கிறதொரு நண்டு!

வளைக்குள்ளிருந்து
எட்டிப்பார்க்கும் அதன் டெலஸ்கோப் கண்கள்
இரு பெண்டுலங்களைப் போல் அசைகின்றன!

தூரத்தில் ஓடி வரும்
சின்ன குழந்தையின் காலடி கண்டு அஞ்சியொடுங்கி
வளைக்குள் ஓடும்
நண்டுக்குதான்
கொடுக்குகளிருக்கின்றன!!

புயலுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்த முருங்கையின்
முறிந்த உடலில்
இழைந்து ஓடிக் கொண்டிருந்த கம்பளி பூச்சிகள் எல்லாம்
எனக்கு முருங்கையின்
கண்களைப் போன்றிருந்தன!!
கண்களையிழந்த முருங்கையைப் பார்க்க
எப்போதோ கண் தெரியாமல் போன ஆச்சியைப் போலிருந்தது!!
“எலேய்!! என்னடா ப்த்துக்கிட்டேயிருக்க,
வந்து ஆச்சிக்கொரு கையைக் கொடுத்துக் தூக்கி விட்டாதான் என்னவாம்?”
என்று கெஞ்சுவதாய் தோன்றியது!!

முறிந்த முருங்கை மரத்துக்கு கீழே
நின்று கொண்டவன்…
அண்ணாந்து பார்த்தான்!!
கம்பளி பூச்சிகள்,
இல்லை இல்லை!!
முருங்கையின் கண்கள்
நட்சத்திரங்களாய்…
கீரையையும்
முருங்கைக்காய்களையும்
பூக்களையும்
முடிந்தவரைப் பறித்து கொண்டு
வீட்டுக்காரன் வரும் முன்
ஓடத்துவங்கினான்!!
“என் தண்டட்டியை விடுலே!! வளையலை விடுலே!!”
என்று ஆச்சி கதறி கொண்டிருந்தாள்…


Courtesy : Art by Leah Johnston 

About the author

குமரகுரு

குமரகுரு

சென்னையிலுள்ள ஐ.டி துறை நிறுவனமொன்றில் பணிபுரியும் குமரகுருவின் கவிதைத் தொகுப்புகள் இதுவரை தமிழில் இரண்டு ஆங்கிலத்தில் ஒரு தொகுப்பும் வெளியாகியிருக்கின்றன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website