1. காலதேவன் வாக்கு
கோடைத் தூறல்
பகல் தன் வெப்ப நாவை
சுருட்டி வைக்கிறது இரவில்
நீண்டுயர்ந்த ஹார்டி மம்ஸ்கள்
சின்ன சின்ன பெட்டூனியா பூக்கள்
மௌனத்தின் உறைதலில்
இளஞ்சிவப்பு இலைகளைக்
கரங்களாக்கி
மழைத்துளிகள் ஏந்திய ஓவியப்பாவையாய்
மேப்பிள் மரம்
ஆழ்நிலை தியானத்தில்
ஒளிரும் நிலவு
ராபின் குருவி
மூங்கையானது திடீரென
கூடாரமடித்துக் குந்தியிருக்கும்
காலதேவனின் இருப்பில்
காற்றையும் தீயையும்
பெருங்குவடுகளையும் கடல்களையும்
கண்டங்களையும் பொழுதுகளையும்
மொழிகளையும் சைகைகளையும்
கிடக்கையும் பேரண்டத்தையும்
தாண்டி
நேசம் வைத்த உயிர்களுக்கு ஈடாக
எனதுயிரை
லட்சங்களாகக் கூறுப்போட்டு
எடுத்துக்கொள் எனப்
பாசக்கயிற்றின் நுனிபற்றி
பேரன்பின் யோக நிலையில்
யாசிக்கிறேன்
ஆன்மாவைத் திருவோடாய் ஏந்தி
அன்பின் ஆழத்தில் புகவியலாது
அவிந்து போன கொள்ளிக் கண்களுடன்
கல் புகுகிறான் காலதேவன்
திருப்பைஞ்ஞீலி கருவறைக்குள்
மீண்டும்
நான்கு தசாப்தங்கள் கழித்து வருகிறேன்
என வாக்களித்து.
2. அசட்டு ஆன்மா
வெயில் உருகி ஒழுகும்
கோடை நாளின் இளங்காலை பொழுது
நெடுநாள் பசித்திருந்த
அமெரிக்கத் தேசத்து Bald Eagleளாக
நீண்ட நாள்கள் கழித்து வந்த
அதன் வரவை மோப்பம் பிடித்து
ஆர்ப்பரிக்கின்றன
உடல் செல்கள்
ஊடல் கொண்டு
காளையென முரண்டு பிடிக்கும்
மனதை Texas Cow boyயாய்
அடக்கப் பார்த்தும்
24/7 திறந்திருக்கும் 7 – Elaven கடையாய்
உரையாடுகிறது வாய்
அதனிடம்
நீயொரு அசடு எனப் பட்டம் கொடுத்து
மலர்ந்து விகசிக்கிறது
மௌனித்து.
இருந்தும்,
பென்குவினாய் துள்ளிக்குதித்து
உருள்கிறது
வெட்கம் துளியும் இல்லா
ஆன்மா
பனித்துளியில் வியர்க்கும்
அந்தச் சிவப்பு ரோஜா முள்ளின்
கூர்மையை வசதியாக
மறந்துவிட்டு.
3. அம்னீஷியாவில் தூரிகை
அமெரிக்க மாகாணம்
பேரிருளில் மூடுண்டு கிடக்கிறது
உதித்த சூரியன்
திசையெங்கும்
காற்றுக்குப் போட்டியாய்
ஒப்பாரி ஓலம்
சுருதி சேர்ந்த கிட்டார் நரம்புகளில்
வழிகிறது வெற்று இராகம்
இந்த மண்ணின் சித்திரத்தை
எங்ஙனம் தீட்டுவதெனக்
குழம்பிக் கிடக்கிறது
தூரிகை
காணும் இடமெல்லாம்
நச்சுக் கொடியென நிறைந்து கிடக்கிறது
கிளை பரப்பி ஆயுதங்கள்
அதிலொன்று மீசை முளைக்காத
ராட்சசனிடம்
நடுவே
ஒருத்தி பள்ளிக்குப் போனாள்
இன்னொருத்தி விட்டுவரப் போனாள்
வேறொருவன் பாடம் நடத்தப் போனான்
போனவர் போனவர்தான்
திடீரென ராட்சசன் பிடுங்கி எறிகிறான்
டேன்டேலியன் களைகளாய்
உயிர்களை
மீதமுள்ள
கண்களில் அப்பிக்கிடக்கின்றன
தீராக் கலக்கம்
மரண பயம்
சதைப் பிண்டங்களின்
மூடாக் கண்களில்
இன்னும்
எஞ்சியிருக்கிறது வாழ்வு பற்றிய கனவு
தூரிகை இவர்களின் உருக்களைத்
தீட்டத் தீட்ட வடிகிறது
குருதி
பிறகு
சீடர் மர இலைகளுக்கு
இரத்த வண்ணம் தீட்டி
அதன் கீழ்
மேரி மாதாவிற்கு எலும்புக் கூடுகளால்
அணிவிக்கிறது மாலை
புத்தன் முகத்து அமைதியை
அழித்து
எழுதுகிறது அகோரத்தையும்
கைகளில் AR-15 துப்பாக்கியையும்
உறவுகளின் பிரிவுத்துயரைத் தீட்டுகிறது
நிழலின் இருள் கவிழ்ந்த
வர்ணத்தில்
இம்மண்ணில் அவர்களுக்கு
அஃதே அழகு
ஆனால்
மண்ணைச் சபித்து
ஆயுதத்தைத் துப்பியவனின்
முக அவலத்தைச் சித்தரிக்கும் பொழுதினில்
மட்டும்
அம்னீஷியாவில் அவதிப்படுகிறது
தூரிகை.
( துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்… )