- 120 டிகிரி
முத்தமென்பது சிலுவையின் மாற்று
சற்று சாய்ந்திருந்தால் பெருக்கல்
குறியீட்டில் சிலுவையைச் சேர்த்து விடலாம்!
ஏசுவின் மீது பட்ட பிரம்புகள்
பெருக்கல் குறியீடு தரும் வல்லமை அற்றதாகவே இருந்தது!
எல்லா நட்சத்திரமும்
சிலுவையைப் பெருக்கலாகப் பார்த்துக் கொண்டிருந்தது போதும்!
ஏசுவின் துயர் மரங்கள்
பெருக்கல் என்பது
தேவதூதனுக்குத் தெரியவில்லை
இப்போது பரலோகம் சிலுவையற்றது
120 டிகிரியில் கடவுள் சிலுவை மரத்துடன்
சரிகிறார்.
இடையீடாக கை விட்டு
சப்தமின்றி பறிக்கும்
“அரூப மலரின்” எவ்விதழில்
பூவின் மரணம் துவங்கும்!
சப்தமின்றி பறிக்கும்
கணத்தில் கேட்கத் தகாத
மௌனப் பெரும் சப்தத்தை
கையோடு விட்டுத் திரும்பிப் பார்க்காமல் செல்லும்
அரூப மலரைப் பறிக்காதவர்களை
தற்போது கண்களால் ஏந்திக் கொண்டேன்…
“மாயோன் விழுங்கப்
பற்றி எரியும் ஒரு மலரை”
வேர் பிடித்திருந்தது..
அதை வேருக்கும் பிடித்திருந்தது.
- முக்கோண வாசிகள்.
“எரியும் இருளில் மேவும்
முக்கோண வாசிகளைப் பாடுவோம்”
“தீப்பிடித்த கூரைக்கு நடுவே
போர்க்கொடியை உயர்த்திக் கொண்டீர்!
மாய்ந்திருந்த குழந்தையின்
கொப்புள் செடியிலா சங்கிலி மாட்டிக் கொள்வீர்!”
சாதுரியமாக ஒரு ஓட்டை குடிசையில்
ஔிந்து கொண்டோம்
கோவணம் உருவப்பட்டவர்களை
அம்மண இரவுகள் பொருட்படுத்தவில்லை
அழுகிய கிளை முழுக்க
கிறிஸ்துமஸ் தாத்தாவின் நட்சத்திரங்கள் குதூகலித்தன
என் வேரின் மேல் நடந்து கொண்டிருந்தது இரவு விருந்து
எச்சில் தெருவில் விட்டத்தைப் பார்த்துப்
பேசிக் கொண்டிருந்த எனக்கு
வீடென்பது நகரத்தின் நரகமாய் தெரிந்தது
என் கூடுகளில் பதுக்கி வைத்திருந்த
பட்டாக்கள் முழுக்க
எலியின் பற் தடையங்கள் கறையானின் அரிப்பேடுகள்
பத்திரமாய் இருந்தது
பத்திரத்தில் இருந்தது
கைநாட்டுத் தவிர எல்லா வரைவுகள்
குடிசைகளில் நாங்கள் மறைவதும்
குடிசைகளை மறைப்பதும்
என் முழங்கால் அற்ற தேசத்தின் பண்பாடு.