1.
பொம்மைகளை
வரிசையாக அடுக்கி வைத்து
பெயர் சூட்டி அழைத்து
விளையாடும் குழந்தையிடம்
நெடுநாளின் பின்
திரும்பிய நாளில் கேட்டாலும்
வரிசை மாறாமல் சொல்லிவிடுகிறது.
நமக்குத்தான்
அவ்வளவு எளிதில்
நினைவுக்கு வருவதில்லை
சமீபத்திய நிகழ்வில்
சந்தித்தவர்களைக் கூட.
2.
கதறக்கதற ஏற்றப்பட்ட
நதி
வழியெங்கும் சிந்திச் செல்கிறது
கண்ணீரை.
தன் இருப்பிடம்
திரும்பிவிடும் எத்தனிப்பில்
புழுதியெழும்பும் சாலைகளில்
குதித்துவிடுகிறது மணல்.
அனைத்தையும் சமன்செய்ய
வந்துவிடுகிறது ஒரு
பெரும் மழை.