1.
விரைவஞ்சலில் வந்த பொட்டலத்தை
ஆர்வத்துடன் அவசரமாகப் பிரிக்கிறீர்கள்
எளிதில் உடைந்துவிடாதபடி
கவனமாகக் கட்டுமம் செய்யப்பட்ட
முழுநீளப் புன்னகையே அது
என்று தெரிந்ததும்
இத்துணூண்டாகச் சுருங்குகிறீர்கள்
ஆணைப்படி இல்லாத போதும்
தள்ளுபடியில் வாங்கியதால்
திருப்பியனுப்பும் வசதியும் இல்லை
தோழமையைத் தொடர்பு கொண்டு
வேண்டுமா என்கிறீர்கள்
ஏற்கனவே பிரிக்கப்படாத
இரண்டு பொட்டலங்களை
என்ன செய்வதெனக் கேட்டுத்
தொடர்பைத் துண்டிக்கிறது மறுமுனை
அடுத்த வீட்டின் அழைப்புமணி அழுத்தப்பட
அரவல்லாமல் உள்புறமாகத் தாழிடப்படுகிறது உங்கள் கதவு
ஆளில்லாத வீடு
வாயைமூடிப் புன்னகைக்க
ஒலித்துக் கொண்டே இருக்கிறது
அழைப்புமணி.
2.
தன்னை ஒட்ட வைக்கும்படி
கேட்கத் தயங்குகிறது ஒற்றைச் செருப்பு.
பழைய பளபளப்பை அசைபோட்டபடி
தன்னைத் தானே தூக்கி வீசுகிறது
வெயில் படாத இடமாகப் பார்த்து.
கைவிடப்பட்ட சுரங்கப்பாதையிலிருந்து
வெளிவந்த நாய், இணையற்றதன் மேலேயே
காலைத் தூக்குகிறது.
மிதிபட்ட மலத்தைக் கழுவ
ஒரு குவளைத் தண்ணீர் கிடைக்குமா
என்ற சன்னமான குரல் எதிரொலிக்கிறது.
மீறி பாதம் கிழித்த முள்ளின் நுனி
சொட்டாக வடிந்து பிசுபிசுக்கிறது வலி.
கண்டுகொள்ளப்படாத மனத்திரள்களுக்கிடையே
ஊசி நூல் இத்யாதிகளுடன்
சாலையோரம் மாறுபட்ட சம்மணமிட்டு அமர்ந்திருப்பவர், எட்டாவது முறையாகத்
தன் செருப்பைத் தானே தைக்கிறார்.
‘இதைக் கொஞ்சம் பாலீஷ் போட முடியுமா?’
எனக் கழுத்துப் பட்டையைத் தளர்த்தியபடித்
தன் கால்களின்
கருப்பூ ஷூவைக் காட்டுகிறார்
ரெப்ரசன்டேட்டிவ் கடவுள்.
3.
பசி தான் முக்கியம்
இலை தட்டு நெகிழித்தாள்
எதுவாய் இருந்தாலென்ன?
நேரத்திற்குக் கிடைத்ததே பெரிது
எவரும் இல்லையென்றால்
சுயமாகப் பரிமாற வேண்டியது தான்
பழக்கதோசத்தில்
இரு கைககளாலும் பிய்த்துப் போட்டு
தேவையான அளவு
குழம்பு ஊற்றிப் பிசைந்ததில்
ஊறத் தொடங்குகிறது
முரட்டு அன்பு.
கொஞ்சம் பொறுத்திரு காலமே
ஏப்பம்விட்டுக் கொள்கிறேன்.
4.
கொஞ்சி விளையாடி
காகமும் அணிலும் தூக்கம் கெடுக்கிறது
கூரைமேல் கூரைமேல்
கூரை போடலாமா என்கிறாய்
அன்பின் வானம் அகலமானது
விளையாட்டை ரசி என்கிறேன்
காகத்தின் நிழலும்
அணிலின் நிழலும்
அறையை நிறைக்கிறது.
5.
உன் பசி மற்றும்
உணர்மொட்டுகளுக்குத் தக்கபடி
இனிப்பு புளிப்பு காரம்
துவர்ப்பு கூட்டி ருசிக்கிறாய்
சரியான சூட்டில்
இறக்கி வைத்திருக்கிறேன்
என் மௌனம்
உன் செரிமானத்திற்கான
சுடுநீரும் தான்
ஊதி ஊதி அருந்து.
6.
இந்தக் கரையில் நிற்கிறீர்கள்
மறுகரைக்கு அழைத்துச் செல்லும்
படகின் கயிறு அவிழ்கிறது
கதையில் திருப்பம் ஏற்படுத்துமென
நீங்கள் நம்பும் இரண்டு துடுப்புகள்
சுழலிலிருந்து விலகவே விரும்பும்
கோழைக் காற்று
கவிழ்வதையே நினைவூட்டும்
பழைய பாடல்
கடைசிக் கையசைப்பு
ஒரு எட்டு பின்வாங்குகிறீர்கள்
அலை, வலை,
தாழ இறங்கும் கூர் அலகுகள் கவலையின்றி
இரு கரையிலும் மருகி மருகி
விளையாடுகிறது நண்டு.
உங்களுக்குத் தெரியுமா
தன் சூப் நெஞ்சுச் சளிக்கு
அவ்வளவு நல்லதென்று
இதுவரை நண்டுக்கு தெரியாது.
7.
எதிர்த்திசையில் பரந்து ஓடுகிறது
சலசலக்காத ஒரு நதி.
எதையும் அடித்துச் செல்லவில்லை
எதையும் உருட்டவில்லை
எங்கும் தேங்கவில்லை.
நினைவுகளைச் சுமந்தபடி நகரும்
இலைப் படகுக்கு காற்று தான் துடுப்பு.
கரைத்தலை
ஒரு கடமையைப் போலச் செய்யும்
நதி கொட்டும் பேரழகில்
தலையைக் கொடுக்கத் தணிகிறது
வெந்தவிந்த காடு.
மனம் ஒரு எழுதுகோலாகி
இத்துணூண்டு நதியைத் தனக்குள் கவிழ்த்து, எழுதித் தீர்ந்த நொடியில்
உதற உதற ஊற்றெடுக்கிறது நதி.
ஒரு முனிவன்
ஒரு கமண்டலம்
ஒரு காகம்
எதன் மீதும் புகாரில்லாத நதிக்கு
கரை நாகரீகம் கருதி
பெயர் சூட்டவோ
வேறு உருவகப்படுத்தவோ வேண்டாம்.
திரும்பிப் பார்த்து
புன்னகைக்க அல்ல முறைக்க
நேரமற்ற நதி, தன் வறட்சி குறித்த
கவலையின்றியும் ஓடட்டுமே.
– மா. காளிதாஸ்