1.
இறுதிஊர்வலத்தில் சிதறும்
பூக்களில் தேன்சேகரிக்கும் பட்டாம்பூச்சியின் முனைப்புகளில்
கோபங்கொள்ள ஏதுமில்லை
பௌர்ணமிகளின் விம்ப மீறல்களை
மன்னிக்கும் குளத்துப் படிக்கட்டுகள்
இருள் பூசும் போதெல்லாம்
உறுத்தலில்லாது நகரமுடிவதில்லை
நிலவுக்கு
எங்கிருந்தோ வெடித்துக்கிளம்பும் விசும்பல்களை பலியாட்டின்
மஞ்சள் மினுங்கும் முகத்தை பார்த்தபிறகு வெளிவிட ஏனோ
மனம் வரவில்லை.
2.
மழை விரியும் அடர்காட்டின்
குளிர்மைக்கு எரியூட்டுகிறது
உன் உள்ளங்கை கணப்பு
என்றோ தொலைந்ததாய் உணர்ந்த ஒரு இடத்தில்
மேல்நோக்கி போகிறது என் சூரியன்
தென்னை மரத்தின் மாலை மயங்கங்கள் வலசை போகும்
கடல் கடப்புகள்
மூச்சுக்கு தவிக்கும் நெரித்தல்களில்
தாழ் திறக்கும் கதவுகள்
மூடிக்கிடக்கும் ஜன்னல்கள்
ஒரே ஒரு வழி அனுப்புதலில்
உன் ஒட்டுமொத்த குற்ற உணர்வும்
கரைந்துவிடுமல்லவா
போய் வா !
3.
மாயக்கரங்களை நீட்டி
ஒரு வாக்குறுதி தருகிறாய்
கோயில் கலசத்தில் சிறகடிக்கும்
புறாவின் விழிகளில் பரவும்
ஒரு கடல்
இரவுமழையின் மிச்சமாக நடுங்கும்
சரிந்த கிளையில் உயிர்க்கூடு
மேல்நோக்கி எழுகிறது
இத்தனை நாளாய் நான்
சேமித்த கண்ணீர்
தூரங்களை புல்நுனியில் கடக்கும்
ரகசியங்கள் எனக்கு புரியத்துவங்குகையில்
வெளிப்படுத்தப்படும் பரவசங்கள்
அலாதியானவை
கண்ணீர்த்துளிகளின் மிக மெல்லிய கோட்டில் ஒரு கூடு நெய்கிறேன்
என் மரணத்தின் துயர்கடக்க
உன் நெற்றி முத்தங்கள்
அந்தரங்க பொழுதுகளில்
மஞ்சள் வெயில் ஜன்னல் திறக்க
இரவின் ஆழம் உட்புக
ஒரேயொரு வழிதான்
குளிர்காயும் நட்சத்திரப் பசிக்கு
இலைமேவும் அந்த ஆலமரம்
போதுமல்லவா?
மரங்கொத்தியின் அலகு வேகம்
நினைவின் நீளத் தவிப்பு
கனவு உந்தித்தள்ளும்
இருப்பின் சாட்சி
ஒரு நொடியில் எத்தனை கோடி மழைத்துளிகளை
இந்த கடல் நீலம் குடிக்கிறது
பெருந்துயர்களின் ஓரங்களில்
நினைவோடும் பொழுதெல்லாம்
ஏதோவொரு பயம் சூழ்கிறது
இறுகும் ரத்த நாளங்கள்
எரியும் மௌன நாடகங்கள்
ததும்பும் நட்சத்திர ஒழுக்குகள்
தொலைந்து போன கடலாழம்
நீயறியப்போவதில்லை.