cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 8 கவிதைகள்

கவிஜி கவிதைகள்

கவிஜி
Written by கவிஜி

  • அரசிக்கு பூ தொடுக்கும் அந்தி வேளை இது

எழுதா கவிதையில் இளைப்பாறும்
உன் கண்ணனிடம் கூறு….
எழுதும் கவிதையில் மூர்ச்சையாகும்
இம்மன்னன் பற்றி…

அரசியே…. உன் நாட்டின் மீது
போர் தொடுக்க சொல்கிறார்கள்….
பாவம் அவர்களுக்கு தெரியாது
நான் பூ தொடுத்தது….

நீ கோலமிட தாளமிட்டு காத்திருக்கும்
உன் வீதியும் என் தேதியும்….
விடியலில் வந்தாலும் சரி
விடியலாய் வந்தாலும் சரி…

மின் கம்பிகளில் படபடக்கும்
ஒற்றைக்காக்கைக்கு பதில் சொல்லு…
உன் ஆலாபனை கூற்றெல்லாம்
சுதி மாற்றி தூது வந்தது அது தான்…

காதுக்கருகே பேசுவது போலவே தான்
உன் குரலும்…
நீ இல்லாத போதும் பேசுகிறாய்
நான் இல்லாமலா நீ பேசுவாய்…

பைத்தியம் என்று என்னை அழைக்கலாம்
தாராளமாகத் தப்பொன்றுமில்லை…
ஜதி சொல்லி லயம் மாறும் போக்கில்
ஆலிங்கனம் செய்கின்றது உன் முகநூல் பக்கம்…

  • சித்திரமே பேசடி

அகம் திறக்கும் முயக்கம்
எட்டி உதைக்கும் சித்திரம்

கால்களற்ற கனவுகள்
முடங்கியே விழித்துக் கிடக்கும்

எங்கெல்லாமோ செல்லுதல்
அங்கெல்லாமே நில்லுதல்

சாத்திக் கொண்ட குகைக்குள்
அடைத்துக் கொண்ட கைகள்

வெளியேறும் புகை நடுவே
மாயமாகலாம் அரூபம்

ஆதித் தத்துவம் திசைமாற
அர்த்த ராத்திரி அப்படித்தான்

ஆனாலும் பிறைநடுவே
மொட்டைமாடி பிதற்றல்

உருண்டு விழுந்த கனவோடு
கொஞ்சம் ஒட்டிக் கொண்ட வெண்ணிலா

சிந்தை மலருமா என்ன
சித்திரமே பேசடி

  • கையேந்தும் நம் இடைவெளி

சண்டை நாளிலெல்லாம்
தேநீர் குவளைக்குள்
தவறி விழுகிறேன்

முகப்பறை மங்கிய
வெளிச்சம் நிழலுக்கு
எனை சேர்க்கிறது

குளியலறைக்குள்
சினிமாத்தனத்தில் கொட்டுகிறது
பூவாளி

அடுத்தடுத்து எடுத்த புத்தகங்களில்
அதிர்ச்சி பக்கமென
எடுக்காத புத்தகமும்

எல்லா துணிகளையும் இழுத்துப்
போட்டு அடுக்கி வைத்தலில்
பீரோ உள்ளறைக்குள் நீ கத்திய
கரப்பான் ஞாபகம்

நிலைக்கண்ணாடி முன்
வெறிக்கையில் பல் கீழிறங்கி
பேயாவதை விரும்புகிறேன்

ஜன்னல் ஓரம் ஒற்றைக் கதவு
வாசல் படிகள் படித்துறை
போதவில்லை நினைக்க

காரணமே இல்லாமல்
நீளும் சண்டைக்குள் சிறு பிள்ளையென
கையேந்துகிறது நானுமற்ற நீயுமற்ற
நம் இடைவெளி.

  • பட்டாம் பூச்சியென எழுதுகிறது காற்று

உள் நுழைந்த வெளி
வெளி பிழியும் நிழல்
விழுந்த பிறகு

அறுபடும் கனவு
எழுகையில் புரளும்
இடைவெளியின் மூச்சு

வளைந்து ஓடிய
இன்னும் நீளும் தொலைவு
பிரிந்து இணையும் ரயில் கால்கள்

ஊர் தேடும் குருவிக்கு
சிறகே கூடு
கனவுக்குள் சொற்கள் தேன்சொட்டு

வீறிடும் சுவரெல்லாம்
நகரும் சித்திரம் யாவும் எனவும்
தூதும் புறாவும்

பட்டு பட்டு பறக்கிறது பூச்சி
பட்டாம் பூச்சியென
எழுதுகிறது காற்று

நிமிடப் போரில்
எதிர் வெற்றி
எளிதில் பற்றி எரியட்டும் மெட்டி

சூழ் உலகின் உலக்கை
நாடகம்
குத்த குத்த நிலவு உடைகிறது…

எனது எல்லா வரிகளுமே
ஒரு காட்டுக்குள்
அலைந்து கொண்டிருக்கின்றன…
குறி தவறும் பிறழ்வுத்
துயரங்களென அவைகள்
திசைகள் மறக்கின்றன…
மானுடக் குறிப்புகளின்
நுட்பத் திறவுகளில்
தீரத் தீர தேடும் சிறகுகளாக
பச்சையின் இச்சை பூசிக் கொள்கின்றன…
இரவை அப்பிக் கொண்டு
திரியும் இருண்மைத் தீர்வுகளால்
நீங்கள் அறியா
மேலும் சில மரங்கள் பூக்கின்றன…
உங்கள் எல்லா கதவுகளையும்
எல்லைகளாக்கி அடித்து
நொறுக்குவதுதான் எனது
வரியின் காடடைதல்……
காட்டுக்குள் என்னைத் தொலைப்பது
நீங்கள் படிக்காமல்
புரட்டி விடும் எனது இன்னொரு
வரியாகவும் இருக்கலாம்…
அது அப்படித்தான்
இருக்கிறது…
இருந்திருக்கிறது…
இருக்கும்…


 

About the author

கவிஜி

கவிஜி

கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார்.
4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
|
ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website