நகர கணக்கு
நேற்று இரவு
இரண்டு முறை
ஆம்புலன்ஸ் சைரன்
சத்தம் கேட்டது
காலையில் எதிர் வீட்டு
வாசலில் ஓர் அமரர் ஊர்தி
அலுங்காமல் நின்று
கொண்டிருந்தது
யாரோ இறந்து விட்டார்கள்
வீட்டைப் பூட்டி கிளம்பினேன்
இன்று அலுவலகத்தில் ஆடிட்டிங்
நகர கணக்கு சரியாகவே
இருக்கிறது….!
அன்புள்ள அப்பா
பள்ளியே பாராட்டியது
அச்சு அசல் குடிகாரனை
வரைந்ததெப்படி
எல்லா கேள்விகளுக்கும்
புன்னகை தான் பதில்
முதல் பரிசு சிறப்பு பரிசு கூட
அந்த ஓவியத்துக்குத்தான்
அன்புள்ள சாத்தான்
தலைப்பும் கைதட்டல் அள்ளியது
எப்படி எப்படி எப்படி
உணர்ச்சிவசப்பட்ட கேள்விகள் தொடர்ந்தன
கடைசி வரை மாடலாக நின்ற
அப்பாவை மட்டும்
காட்டிக் கொடுக்கவே இல்லை
வெற்றி பெற்ற மகன்.
தூக்கம் சிறு குறிப்பு
முக்கால் மணி நேரம் நடந்தால்
நன்றாக தூக்கம் வரும்
மூச்சுப்பயிற்சி தூக்கத்துக்கு நல்லது
படுப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே
தொலைக்காட்சி கணிப்பொறி அலைபேசி
அனாவசியப் பேச்சு
எல்லாம் நிறுத்தி விடுங்கள்
கண்ணின் மணி கபக்கென்று
நெடுந்தூக்கம் அள்ளிக்கொள்ளும்
இளையராஜா பாடல் இருக்க
தூக்கத்துக்கு கவலையுண்டோ
பால் ஒரு டம்ளர் அதில் மஞ்சள் மிளகு
தூக்கத்துக்கு கியாரண்டி
தியானம் தவம்
தானற்ற சிந்தனை
தூக்கத்துக்கான வழிபாடு
அரை மாத்திரை அசுரத் தூக்கம்
ஆண்டவரை பிரார்த்தி
அடித்து போட்டாற் போல தூக்கம் வரும்
எண்ணெய் இரு சொட்டு தொப்புளில் விடு
கும்மென்று மல்லிகை பூ தூக்கம்
கனவோடு வரும்
பாதி சாப்பிட சாப்பிடவே கண்கள் சொக்கி
கை கழுவ கழுவவே கண்கள் மூடி
கையை துடைக்க துடைக்கவே சரிந்து தூங்குகிறான்
பகல் முழுக்க வேர்த்து பூத்து உழைத்தவன்….!
பள்ளி பயின்றதொரு காலம்
கால் பந்தாகவோ கைப்
பந்தாகவோ நினைவுகளில்
எட்டிக் குதிக்கிறது
பள்ளி மைதானம்
உருளும் சின்னஞ்சிறு ஞாபகத்தில்
நாவல் பழம் விற்கும் ஆயாவுக்கு
இன்றும் அதே வயது
வரிசையாக நிறுத்தியிருக்கும்
சைக்கிள்களை போகிற போக்கில்
தள்ளி விட
இன்றும் சரிந்து
கொண்டிருக்கிறது வரிசை
இப்போதும் பள்ளி விழா மேடையில்
ஒருவன் அண்ணாத்த பாடலுக்கு
ஆடிக் கொண்டிருக்கலாம்
நான் அந்த அரபிக்கடலோரம்
பாடலுக்கு ஆடியதை போல
20 வருடங்களுக்குப் பின்
என் பள்ளியைக் கடக்கிறேன்
காகம் ஒன்று அமைதியாய் கேட்டில்
அமர்ந்திருக்கிறது
நான் தினமும் சோறு வீசியதை
கொத்தித் தின்னவைகளில்
ஒன்று என சிறு பிள்ளையைப் போல நம்ப
அது போதுமானதாக இருக்கிறது…!
இந்த வீட்டில் தேவதை இருக்கு
ஒவ்வொரு பட்டாம் பூச்சியாய்
எடுத்து கொடுக்கிறான்
ஐஸ் வண்டிக்காரன்
பஞ்சு மிட்டாய்க்காரன்
றோஸ் நிறத்தை
அள்ளி அள்ளித் தருகிறான்
சீனி மிட்டாய்க்காரன்
பூ போட்ட மழைக்காலம்
சுழற்றுகிறான்
ஓட்டைப்பல்
ஜவ்வு மிட்டாய்க்காரன்
பெரும் சிரிப்பை ஒட்டி போகிறான்
நுங்குக்காரனுக்கு மூன்று கண்கள்
மூன்றிலும் அணில் பற்கள்
காட்டுகிறான்
பொரி கடலைக்காரன்
பேரன்புக்காரன்
பொரி உருண்டைகளோடு
ஞாயிற்றுக் கிழமையும் தருகிறான்
இந்த வீட்டில் தேவதை இருக்கு
இந்த வீட்டில் தேவதை இருக்கு
சொல்லி போகிறான்
குடுகுடுப்பைக்காரன்.
அன்புள்ள அப்பாவும் இந்த வீட்டில் தேவதை இருக்கு மிக அருமை