1. பெருந்தவம்
கலைந்து விடாத பெரும் தவமென
மரநிழலில் மதி திறக்கிறேன்
மழை நீர் கவிதையாக மாறும்
சிற்றோடையில்
வழிந்தோடும் வரிகளைத்
தாண்டி
மிகச்சிறிய கதவுகளை அடைத்து
வனத்தை உருவாக்குகிறது மனம்
நீளக் காதுகள் உடைய முயலாய்
அசைகிறது உணர்வு
இரவைத் திரட்டி
மை எழுதிய விரலின் தீண்டலில்
சங்கிலிப் பிணைப்புகள் விடுபட,
விழிகள் மட்டுமே
விண்மீனாய் மிதக்க
மூழ்கிவிட்டேன்
கடந்து போன பூனை
திரும்பி நின்று கவனிக்கிறது
ஆவியாகிப் போன தவத்தை!
2. ஸ்திரிபாட்டு
இரவு முழுக்க ஆடிஆடி
இடுப்பெல்லாம் நீராகி போனவள்
ஆடை கலைகிறாள்
முதலில் எந்தச் சலனமுமின்றி சலங்கை கழட்டி
முன்னும் பின்னும் போன தொங்கட்டானுக்கு விடுப்பு
கழட்டிய பின்னும்
முணுமுணுத்துக் கொண்டே இருக்கின்ற வளையல்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாக
கல் விழுந்த ஆரம் நகர்ந்தது
சதை தின்று செரித்த பாவாடை…
வரிசையில் அடுத்தது
ரவிக்கையின் முதல் ஊக்கு கழட்டியதும்
விடுதலையடைந்தன மார்புகள்
வாசம் இழந்த மலர்களும்
வண்ணம் இறந்த ரிப்பனும்
சடையோடு சவுரியும்
மஞ்சப்பை வீட்டுக்குள் புகுந்தன
தேங்காய் எண்ணை தொட்டு அரிதாரம்
கலைத்ததும்
ராமனாகவோ, பரதனாகவோ
இல்லாத மகனுக்காக
நிஜவாழ்வென்னும் வனவாசம்
புகும் தசரதனானான்.
3. விரல்கள்
விரல்கள் ஒரு நாடோடி
அது சாலை வழி உலவும் போது
மின்விளக்குகள் விழித்துக் கொள்கின்றன
மாட கோபுரங்களை அணுகும்போது
தேகம் முழுக்க இதழ்களாகி விடும்
இதழ்கள் மலையருவியாகும் போது
எல்லா தெருக்களும்
வானவேடிக்கைகளுடன் திருவிழா காண்கின்றன
விரலின் கடைசித்தடம்
முத்தமாய் உறைந்ததும்
விலாசமில்லாத வீடு போல
கண்ணயரலாம்!!