விளையாதது.
நிழலாய்த் துரத்தும்
காலி நிலம்!
நினைவில் மட்டுமே பசுமை சூழ காற்றில் குலுங்கிய நிலம்
ஐந்து போகம் வறண்டு,
நாவாய் வெடித்துக் கிடக்கின்றது,
என் நிலம்!
காற்றில் அலையும் தூசிகள்
செத்துக் காய்ந்த உயிர்களின் உடலின் மீதங்கள்
வானமும்
என் நிலமும்
தூரத்திலோர் இடத்தில்
பேசிக் கொண்டிருக்கின்றன!!
எப்போது முடியுமோ இந்த
ஒப்பந்த பேச்சு!
விதை வாங்கவும் காசில்லை
உரம் வாங்கவும் காசில்லை
விசம் வாங்க வேண்டுமானால்
கடன் தர ஆளுண்டு!
நிரம்பி வழிந்த குளங்கள்
வெறும் குழிந்த வயிறாய்
கிடக்கின்றன…
ஏரிகள் இப்போதைக்கு
விளையாட்டு மைதானங்களாய்,
நாளைப் பிளாட்டுகளாய் மாறும்!
விளையாத நிலம்
வீடாய் எழும்பியதும்
தண்ணீரும்
காற்றும்
மழையும்
பசுமையும் வந்துவிடுகின்றன!!
அதுவரை…
விசம் வாங்கும் நாளை மட்டும்
தள்ளி வைக்கிறேன்…
இறைவன்.
இறைவனின் கண்ணீர்
கடலானது…
கடலுக்குள் வீழ்ந்தன
உலகின் துக்கங்கள்…
மகிழ்ச்சியெல்லாம்
விண் நோக்கி செல்ல…
இறைவனுக்குப் புரியாதது ஒன்றுதான்!
மழையாய் பொழியும் நீரெல்லாம், பாட்டிலுக்குள் எப்படி அகப்படுகின்றன?
நூல்.
ஒவ்வொரு மலராய் விரலால் பிடித்து
நூலில் முடிந்து
சரம் சரமாய்
கட்டுபவளுக்கேற்ப
வளைந்து நெளிந்து
உருண்டு கொண்டிருக்கும்
நூல் கண்டிலிருந்துப்
பிரிந்தபடியிருக்கும்
நூல்
பிரிய பிரிய
குறைகிறது கூடையில்
பூவும்…
யாரோவொருத்தியின் தலையில் அமர்ந்தபடி
ஆடும் பூச்சரத்திலிருந்து
பூக்கள்
உதிர உதிர
நூல் மட்டும் மிஞ்சுகிறதந்த நாளின் முடிவில்!!
ஹேர் பின்னிலிருந்துப் பிரிக்கப்படும் நூல்
மீண்டும் சுருண்டு
சிக்காகி காய்ந்த ஓரிரண்டு மலர்களைக் கைவிடாது
கிடக்கிறதிந்த குப்பைத் தொட்டியில்!
குப்பைத் தொட்டிக்கென்ன பாரமா
சிறிது நேரம்
வாசப்பூச் சூட?