cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 10 கவிதைகள்

குமரகுரு கவிதைகள்


முன்னொரு காலத்தில் தன் மரத்தின் இலை கொண்டுதான்
எறும்பொன்று பிழைத்ததென்றறிந்த மரம்,
எறும்புகளுக்காக இலையுதிர்க்கத் துவங்கியது!!

எறும்புகளோ!
இப்போதெல்லாம் ஆபத்தான
நீர்நிலைகளின் பக்கமே செல்வதில்லை.

தினமும் கருக்கலில் கொட்டகைக்குள்ளிருந்து
சாணியை அள்ளி வந்து
நீரில் கரைத்து
வாசலில் தெளிக்கும் பெண்
ஒரு நாள் மகளின் நகரத்து அடுக்கக வீட்டு வாசலின்
ஸ்டிக்கர் கோலத்தைப் பிய்த்தெரிய முற்பட்டாள்!
வெஜிடபுள் கட்டரை வெறுத்து அரிவாள்மனை வாங்கி வந்தாள்!!
எவ்வளவு அலைந்துத் திரிந்தும், நல்ல அம்மியும் குழவியும் கிடைக்கவில்லை!!
மகளுக்குத் தெரியும் அம்மாவின் தவிப்பு!
அமைதியாகப் பார்த்து கொண்டிருந்தாள் மாறும் தாயை!!
மிக்ஸி பயன்படுத்தத் துவங்கிய அம்மாவுக்கு இப்போதெல்லாம் கோலம் போட நேரமில்லை!!
கருக்கலில் வாக்கிங் செல்ல கிளம்பி விடுகிறாள்.
இப்போது, அம்மா வெளியே போகும் போதும்
உள்ளே வரும் போதும்
அவளால் முழுதுமாய் பிய்த்தெரிய முடியாமல் போன
ஸ்டிக்கர் கோலத்தின் பிய்ந்த முனை அவளைப் பார்த்து சிரிக்கிறது!!

சாண்டா கிளாஸை சுமந்து திரியும்
ரெயின்டீர் ஒரு காஃபி ஷாப்பின்‌ வாசலில் நின்று கொண்டிருந்தது.
ஆச்சர்யமான நான் “ரூடோல்ஃப்!! இங்கே என்ன செய்கிறாய்? சாண்டா எங்கே?” என்றேன்.
என்னை அண்ணாந்து பார்த்த ரூடோல்ஃப்,
“ஓய்வெடுக்க காஃபி ஷாப்பில் சூடாக காஃபி அருந்துகிறார்” என்றது.
“ஓ! அப்படியா சரி சரி. கிற்ஸ்துமஸ் காலம்.
மிகவும் பிஸியாக காலமாயிற்றே ஓய்வெடுக்க வேண்டியதுதானே”
என்று நகர நினைத்தேன்.
“ஆமாம்!! ஊருக்கே கிஃப்ட் தரார்.
தனக்கு ஒரு கார் வாங்கிக்க முடியல,
இன்னும் எங்களை கிஃப்ட் பாக்ஸைத் தூக்கி இழுத்துக்கிட்டு‌ போக சொல்லுறார்”
என்றது ரூடோல்ஃப்.
‘சரியான கேள்விதான்.
ஆனால்,
இதைத் தான் சான்டாவிடம் கேட்டால் சபிக்கப்படலாம்’
என்றெண்ணிக் கொண்டு தலையாட்டிய படி நகர்ந்துவிட்டேன்.

மீன்களை செதில் நீக்கித் துண்டு துண்டாய்
நறுக்குபவன்
கத்தி முனையை அவ்வப்போது
அருகிலுள்ள கூழாங்கல்லில் தேய்த்து கொள்கிறான்.
கூழாங்கல் கூர்மையெனும் போதனையைக் கத்திக்கு அளித்து
வெட்டுவதற்கான ஞானத்தைப் பகிர்கிறது!
புத்தநிலையில் மீன்களை நறுக்கும் கத்தியிலும்
பிடித்திருக்கும் கையிலும்
சிறிதளவும் நடுக்கமில்லை!!


 

About the author

குமரகுரு

குமரகுரு

சென்னையிலுள்ள ஐ.டி துறை நிறுவனமொன்றில் பணிபுரியும் குமரகுருவின் கவிதைத் தொகுப்புகள் இதுவரை தமிழில் இரண்டு ஆங்கிலத்தில் ஒரு தொகுப்பும் வெளியாகியிருக்கின்றன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website