கூன் கிழவியின் சிலுவைகள்
பசிக்கழுத மரணம்
அவளுக்கு வாய்க்கலாம்
அல்லது பசித்தழுத ஜனனம்
எனக்கு வாய்க்கலாம்
கூன் விழுந்த பாழ் கிழவியின்
சுருங்கிய முலைகளைக்
கண்டதும் ஓடிச் சென்று
பால் குடிக்கத் தோன்றியது
அப்படித்தான்
சுரந்து சுரந்து அயர்ந்து தொங்கும்
அன்பின் சிலுவைகளை
மார்பின் முடிச்சுகளே அறியும்
பால் நிலம் வற்றுதலும்
பாலை நில முற்றுதலும்
பராமுகமுடைய காலத்தின்
நீள்வட்ட சுழற்சி
யார் கண்டது
கிழவியின் இக் கொடும்
வாழ்வின் வரிகள்
ஈரமற்ற முலைகளால் ஆனது
என்றும் அவை
கால சுருக்கங்களில் மீள்வது
என்றும்…!
வலசைக்கு வந்த காலம்
அப்படித்தான் இருந்தது
ஊன் பிறழ்ந்து உயிர் பிளந்து
உள்ளூறும் சிறகின்
பேராசைக்கு நிறம் சற்று கூடுதல்
நீந்திப் பிழைக்கும்
நித்திய தவத்தை
மிகச் சரியாக களைத்து விடுதல்
பேரின்ப பின்னிரவு
சொல்வதெல்லாம் சொன்னவை
என்பதில் உடன் பட்டு உடை
முரண்பட்ட மீதிக்கு தான்
மீதி கிடைக்கும்
நுகர்தலின் நிமித்தம்
நையப்புடைத்த நட்சத்திரக்
கண்களில் நகை புரளும்
ராத்திரிக்கு பகலாகும் ஆசை
சிறகடிக்கும் சித்திரக் கூட்டில்
கண்கள் சிவக்க காவல் காக்கும்
வலசைக்கு வந்த காலத்தை
யாராவது திருப்புங்கள்
விடியட்டும்….!
பாரதிக்கா
‘நல்லா பாட்டு பாடுவியேக்கா’
உதட்டை சுழித்தாள்
‘ஸ்டேட் பஸ்ட்தானக்கா 12த்ல’
தலையை மட்டும் ஆட்டினாள்
‘பாஸ்கட் பால் செமையா விளாடுவீல்ல’
கண்களை அழுந்த மூடித் திறந்தாள்
‘ஆமா லவ் பண்ணீல்லக்கா என்னாச்சு’
கண்களைத் தவிர்த்தாள்
‘அகழ்வாராய்ச்சி படிக்கதான ஆசைப்பட்ட’
சரிந்து சோபாவில் அமர்ந்தாள்
அடுத்த கேள்விக்கு வாயெடுத்தேன்
சட்டென என் மடியில் தலை சாய்த்தாள்
அதற்கு பின் என்னிடம் கேள்வியுமில்லை
அவள் கேவலுக்கு பதிலுமில்லை…!
துப்பாக்கி இசைத்தவன்
தீரா வேட்கையில் காடலைந்தவன்
துப்பாக்கியில் பேனா செய்தான்
பேனாவில் துப்பாக்கி செய்தான்
பாதியில் விட்டு விட்டான் என
நினைக்க வேண்டாம்
மீதி நாமாகவே பாதியானவன் அவன்
கவிதைகளை சுமந்து கொண்டு
யுத்தம் செய்தவனுக்கு
துப்பாக்கி இசைத்திருக்கும்
கொன்ற பிறகும்
நெருங்க பயந்தார்கள்
அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்
நெருடாவை சுமந்தலைந்தவனுக்கு
நெற்றிக்குள்
எப்போதும் கவிதைகள்
நிஜமாகவே புதைக்கப்பட்ட
இடத்தில் விதையானவன்
வீணையுமானவன்
சிரிக்கும் புகைப்படத்தில்
அர்ஜெண்டினாக்காரன்
சிந்திக்கும் புகைப்படத்தில்
கியூபாக்காரன்
செத்த புகைப்படத்தில்
எல்லா ஊர்க்காரன் எங்கள் சே….!
கனவுகள் என்னுடையது
சாலையில் துப்புபவனை
சிக்னலில் அத்து மீறுபவனை
வீதியில் போட்டு மனைவியை
அடிப்பவனை
வீட்டிலிருந்தே குப்பை வீசி
எறிபவனை
வயல்வெளியை
கட்டிடமாக்குபவனை
குத்திக் கொன்று விட எனக்கொரு
கனவிருக்கிறது
உள் சென்று நிலம் பரப்பி
பணம் குவிக்கும் பெரும்
வயிற்றுக்குள்
இறங்குகையில் கத்தியும்
முனை மடங்கும் கனவுக்கு
மூச்சு முட்டுகிறது
உணர்வற்று உயிரற்று போக
எத்தனிக்கும் யாவற்றுக்கும்
ஒரு சேர நிஜம் தெறிக்கும்
குருதியோடு வாய் பிளந்து
சிரிக்கும் கனவுக்கு மீண்டும்
காத்திருக்கிறேன்
கனவாய் ஆனாலும் காத்திருக்கும்
கொடுமைக்கெதிரான குறியீடுகள்
கனவுக்குள்ளும் குரல் எடுக்கும்
கத்தும் குயிலோசை கத்திக்கும்
உண்டென்று சொல்கிறேன்
கனவென்றாலும் கத்திக்கு
குத்துவது தான் அழகென்றும்
சொல்கிறேன்
சொல்ல சொல்ல குத்தும் கனவுகள்
என்னுடையவை
சொல்லாத போதும்
கனவுகளில் நீளும் கத்தியும்
என்னுடையவை
சாதி பேசுபவனை
ஆணவக் கொலை செய்பவனை
சாக்கடை அரசியல் செய்பவனை
குத்திக் கொன்று விட இன்னொரு
கனவும் எனக்கிருக்கிறது….!