cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 11 கவிதைகள்

தேவிலிங்கம் கவிதைகள்


1.

தொலைந்து போவதற்காகவே திருவிழா செல்பவர்களின் பாதை
ஒருபோதும் மறக்கப்படுவதேயில்லை
நீளும் திசைகள் யாவுமே இறுதியில் வீடடைகின்றன
புத்தி சுவாதீனமற்ற பிச்சைக்காரனின்
பக்கத்தில் மிளிரும் உபயோகமற்ற சில்லறைக்காசுகளாய்
சொல்லமுடியாமல் நீர்த்துப்போகின்றன
நேரத்தில் சொல்லப்படாத உண்மைகள்.
பழுத்துவிட்ட இலைகள் உதிராமல் ஒட்டியிருப்பதும்
பெரும் பாரம்தானே மரத்திற்கு..

2.

சலிப்பான இரவொன்றின் நடுவில்
ஏதேனும் ஒரு புத்தகத்தோடு நீ..
பழைய நினைவுகளின் பச்சை வாசனை பாடலோடு நான்.

எடுத்தெறிய மனமில்லாமல் ஓவியத்தன்மையோடு
ஓடாத கடிகாரமொன்று
நகராத முட்களோடு
நடன ஆரம்ப நாட்டிய மங்கையாய்
நின்ற இடத்திலே காலைத்தட்டி
அசைந்துகொண்டிருக்கிறது.

மௌனத்தைக் கலைக்கவென
மெதுவாகத்தவழ்ந்து வந்து இருவருக்குமிடையே
பிடிவாதக் குழந்தையென படுத்துக்கொண்டு
அணைத்துக்கொள் என அடம்பிடிக்கிறது குளிர்…

3.

பொம்மை வாங்கித்தரச்சொல்லி
அழுது அடம்பிடித்து,
தூங்குவதாய் பாவனை செய்யும் சிறு குழந்தை
எனது எதிர்பார்ப்புகள்..

இருக்கும் சொற்பத்தில்
கடலைமிட்டாய் வாங்கி வந்து எழுப்பும்
காசில்லாத தந்தை உனது சமாதானங்கள்…

4.

வலசைப்போகும் பறவையின் இறகொன்று
பெருங்காற்றில் இழுத்துச்சென்று
பின் மெது மெதுவாக நின்று,
சரிந்து வெண் புகையாய்
மேலும்
தண்ணீர் வற்றி விழும் அருவியைப்போல்
சலித்துக்கொண்டு விழுகிறது காலம்.

இரவொன்றின் வட்டமுக ஆந்தையைப்போல்
அலறித்தீர்கிறது நேரம்.

யாருமில்லா பௌர்ணமி இரவின்
தனித்த அல்லிப்பூத்தக் குளக்கரையாய்
எப்போதேனும் வாய்த்துவிடும்
தனிமை எத்தனை அபூர்வம் ….


 

About the author

தேவிலிங்கம்

தேவிலிங்கம்

வேதாரண்யத்தைச் சேர்ந்த தேவிலிங்கத்தின் இயற்பெயர் விஜிதேவி இராமலிங்கம், இளங்கலை உயிர்ம வேதியியலில் பட்டம் பெற்றவர்.

பல்வேறு அச்சு / இணைய இதழ்களில் இவர் எழுதும் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது. ’நெய்தல்நறுவீ’’ எனும் இவரின் கவிதைத் தொகுப்பை கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

‘கிளிச்சிறை’ எனும் சிறுகதைத் தொகுப்பை வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website