மேலும் கீழுமாக
விழுந்தும் எழுந்தும்
நகர்ந்தபடியிருந்தது
மின்னூக்கி!
இரண்டு புறமும்
எரியும் எண் கண்கள் மினுக்க மினுக்க
வாயைப் பிளந்து
விழுங்கியவர்களை
தளம் தளமாய்
சொற்களென
உமிழ்ந்தபடியிருந்தது!
திடீரென பழுதானதும்
இரவில் வாய்ப் பிளந்து
வயசாளியைப் போல் உறங்கும் அதன் வாயில்
“do not use, lift under repair”
என்ற மஞ்சள் டேப்பை ஒட்டி செல்கிறான் லிஃப்ட் மருத்துவனீ!
இரத்தம் சொட்ட சொட்ட
மருத்துவமனையின் வாசலின் சாலையில்
துடித்து கொண்டிருக்கிறது
காரில் அடிப்பட்ட நாய்!!
அது கடைசி மூச்சை
விடும் நேரம் சத்தமாக கத்தியதொரு ஆம்புலன்ஸ்!!
சுடு நீர்
குளிர்ந்த நீர்
சாதாரண நீர்
என்று மூன்று பிரிவுகள்
கொண்ட தண்ணீர் அளிப்பானின்
உடலுக்குள்
ரத்தம் போல்
அவ்வப்போது நீரேற்றப் படுகிறது!!
குடத்தில் நீரையெடுத்து
இடுப்பில் வைத்து எடுத்து செல்லும் பெண்ணும்
தோள்பட்டையில் தண்ணீர் கேனை ஏற்றிக் கொண்டு
படிக்கட்டேறி செல்பவனும்
ஒருவர் மட்டுமே ஏறி இறங்க முடிந்த படிக்கட்டில்
எதிரெதிரில் சந்தித்தனர்!!
தண்ணீர் தளும்பும் குடத்தை சுமந்து நின்றவள்
பாவம் பார்த்து
வழி விட்டாள் “வாழ” கேன் தூக்கி நிற்பவனுக்கு…!!