மருக்கை
ஒரு கம்பளியும்
அதன் சருமத்தில் மரித்திருந்த
ஆடுகளும்
இன்று நீள் உறக்கத்தை தந்து கொண்டிருந்தது
இந்த நள்ளிரவு இருமலில் கூட
மே என்ற சத்தம் என் கழுத்தை நெறித்தபடி
வெளிவந்தது விழுந்தது
இருமி இருமி கம்மிப் போயிருந்த
நாக்குகள் பச்சை தாவரங்களை
தரை நோக்கி கவ்விக் கொண்டது
சாவகாசமாய் ஒரு மெல்லுதல் முடிந்தது
இந்த கைகள் மழிக்கப்பட்ட கம்பளி மயிர்களால் மூடப்பட்டு கிடந்தது
பிளவுபட்டு என் வயிற்றிலிருந்து அலறி அலறி
குதித்து வெளிவந்து விழுந்ததன மறிக்குட்டிகள்
இரண்டு…
மூன்று…
இன்னும் …
இன்னும்…
ஒவ்வொரு மறியாய்?
பிசுத்த குட்டிகளை நாவால் க்ளீன் செய்தேன்
முதன்முதலாய் வாய் திறந்து
என்னை மாந்துகிறது மறிக்குட்டிகள்
கம்பளி விலக்கினேன்
சாய்ந்தபடி முலைகளை இறுகக் கவ்விக்
கொண்டன
அத்தனை பிசுத்திருந்தது இவ்விரவு
ஒவ்வொரு முறையும்
மரணித்த விலங்குகளின் குழந்தை பசிக்கு
முலைகளின் போதாமையை
பிரசுரித்தபடி
கனவேறி வருகின்றன
ஆடை பறிக்கப்பட்ட
ஒரு நூறு மருக்கைகளும் அம்மணமாய்.
பிராந்திய பூ
பிராந்திய பூவின் சூல் முடிபோல
நறுமணம் பரப்பியது என் காடு
ரணம் தொடுதல் வழி நீங்கும்
ரணம் தொடாததின் வழியும் நீங்கும்
ரணம் தொடுவதற்கும் தொடததிற்கும்
வாய்ப்பின்றி நீங்கலாம்
பனிமலைகளை வெறிக்க வெறிக்க
உற்றுப் பார்த்து ஏளனமிட்டு சிரிக்கிறது
என் அடியில் மூட்டப்பட்ட
கங்குலின் தீ
வளைப்புழுவென அதில் மடிய ஆடிக் கலைகிறது காமம் பாராத பாம்பு
உறுமித் திரியும் வேட்டை நாய்களை
காமம் பழக்கி காட்டுக்குள்
அனுப்பி விட்டார்கள்
குருதியை கொண்டாடாத காமம்
உண்டா??
…..
…..
…..
புணர்ந்து ஓடும் வேட்டை பழக்கிய
நாய்கள் கழுத்து நிரம்பி
பற்றி ஓடுகிறது
என் கொடுவாள் கொண்டு.
கல் பறவை
றெக்கை ஏதுமற்ற
வானத்தில் எல்லா புறங்களிலும்
குதிகால் முழுக்க வலி நிரம்பிய சிட்டுகள்
உலாவிக் கொண்டிருந்தன
குவிந்திருந்த நெற்குவியலை
கண்களில் விழுங்கி வானம்
பசியாற்றாமையை சீரணித்து கொண்டது
இந்த வெளி முழுக்க பீடி மனிதர்
குதிகால் பறவைகளை சுட்டு
வீழ்த்த காத்திருந்தான்
பீடி முழுக்க சுருட்டி சுருட்டி
மயக்க இலைக்கு பதிலாக மஞ்சள் தானியத்தை நிறைத்தான்
வெளிவிடும் புகையில் வானம் நாற்றமடித்துக் கொண்டிருந்தது
கூட்டம் கூட்டமாக கல்முட்டைகளை
பிரசவித்துக் கொண்டிருந்த கல்பறவையின்
எல்லா குஞ்சுகளும் அசைவற்றுக் கிடக்க
நீண்டு நெடிதுயர்ந்த
குதிகால் பறவைகள் ஓய்ந்து ஓய்ந்து
கல்பறவையின் கல் முட்டை மீது
இளைப்பாறின
உடைந்திருந்த கல் முட்டையின் உள்ளே
கையை நுழைத்தான்
கல் முட்டைகள் அகப்படாமல் தத்தி தத்தி
குதிகாலால் ஓடின
கல்பறவையும் குதிகால் பறவையும்
கை நிறைய தானியத்தை செரித்து
ஆசனவாய் பிளக்க தானியப்புகையை
வெளித்தள்ளிக் கொண்டிருந்தான்
சகல மனிதன்.
என் சுனை
அவ்வளவு கர்வம்
ஒன்றும் இல்லை எனக்கு
என் வறட்டு கௌரவத்தால்
என்ன ஏந்திவிட போகிறேன்
அதுவும் முழுமையாய் வற்றிவிட்ட பிறகு
உடலிலிருந்து சொல் வரை
என் சுனைக்கு உயிரூட்டுங்கள்
இந்த வாழ்வை பத்திரப்படுத்திக் கொள்ள
வேறு வழி தெரியவில்லை எனக்கு
கொஞ்சம் என்னை ஆசுவாசப்படுத்த ஏதேனும்
செய்யுங்கள்
சில சமயம் ஒன்றும்
செய்யாமலும் இருங்கள் போதும்
எந்தத் துளியிலும்
நிரம்பிடாத சுனையில்
சில சமயம் வற்றியே இருப்பதும் நிரம்பியே இருப்பதும்
பேராபத்தானது தான்.