cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 11 கவிதைகள்

கவிஜியின் ஐந்து கவிதைகள்

கவிஜி
Written by கவிஜி

  • தலை சிவந்த கையொப்பம்.

கடைசி பக்கத்தை
என்ன செய்வதென தெரியாமல்
ஒரு கோழி வரைந்தான்

ஒரு மணி நேரத்தில்
கிறுக்கல்கள் பக்கம் முழுவதும்

ஒரு முட்டை கூட கிடைத்தது
கால் போன போக்கில்
காகிதம் போயிருக்க

காற்றுக்கு செவி சாய்த்த
காகிதத்தினடியில் இடைச்சருகுகள்
சிலவும்

தடை தாண்டி நடந்த கோழிக்கு
தவம் எல்லாம் ஒன்றுமில்லை
முகம் மட்டும் பூத்திருந்தது

எதையோ சொல்ல வந்த கோழி
ரெக்கை அடித்து
சமாதானம் செய்து கொண்டது

கண்டுணர்கையில்
இறகு முளைத்தவன் கனவு போல
காகித ஓரம்

அதில் மிக சுருக்கமாய்
கழுத்து நீட்டி நடந்து கொண்டிருந்தது
கோழி மறந்தவனின்
தலை சிவந்த கையொப்பம்

  • மதிலின் குரல்

சத்தம் வந்த வரை
ஒன்றும் தோன்றவில்லை
நின்ற பிறகு தான்
மதில் தேடுகிறது கண்கள்
தூரத்து குழந்தையின்
குரல் வளையில்
பூனையின் அழுகுரல்
பிராண்டல்களால் ஆனது
மிகச் சிறிய சாளரம் வழியே
நீண்டு கிடக்கும் மௌனத்தில்
சற்று முந்தைய அழுகுரல்
பாதமற்று போய்க் கொண்டேயிருக்கிறது
நின்று விட்டது தெரியாமல்
நீளும் மதிலை
வேறு வழியின்றி சாளரம்
அடைத்து நிறுத்துகிறேன்
அழுகுரல் எவ்வளவோ மேல்
அணைந்த குரல் அவஸ்தை….!

  • தனித்த பாறை

ஏமாந்து கொள்வதில் ஒரு சுகம் உண்டு
அது சோம்பேறியாகும் கலை
அது ஆன்ம திருப்தி என்றொரு வளையத்தை
ஒவ்வொரு அணுவிலும் மாட்டி இருக்கிறது

வண்ணத்து பூச்சிக்கு
வண்ணம் கூட சுமை தான்
பசித்திருக்கையில் உற்றுப் பாருங்கள்

எனது உலகை என்னால்
கவிதைக்குள் சுற்றி விட முடியும்
எனது கவிதையைத் தான் என்னால்
ஒரு உலகுக்குள் சுழல விட முடியவில்லை

இருட்டுக்குள் இசைக்கும் குறைவாக
அமர்ந்திருக்கிறேன்
மோதி விட்டு மன்னிப்பு கேட்பதை விட
மன்னிப்பு கேட்டு விட்டு
மோதாமல் சென்று விடுங்கள்

மிகச்சிறு மீந்த உடலை
என்ன செய்வதென தோன்றவில்லை
மிச்சமென தினம் ஒரு தேடல் தினம் ஒரு கூடல்
திகட்ட திகட்ட தின்ற பிறகும்
தீரா பசிக்கு தேகம் என்று பொருள்

தொடர்பற்று நிகழ்த்தி பார்க்கும் வல்லமையை
தாராயோ தருவேனோ
தகிப்பின் ஜொலிப்பை சலசலக்கும்
ஓடையின் தூரங்களில் கால் அசைத்து
கவனிக்கிறேன்

அருகே
எல்லாம் மறந்த தனித்த பாறை ஒன்று
உருவத்துக்கு காத்திருக்கிறது

  • ஆதிமகள்

பேரன்பின் வழிகளில்
எனை கூட்டிச் செல்லும்
உன்னிடம் பேராலயம் இருக்கிறது

உன் தூபங்களின் தீபங்களில்
நானே ஒளி நானே இருள்

காதல் கட்டுகளில் தலையால்
நடக்கும் நீ
பின்னொரு காலத்து
காரைக்கால் கால் அம்மை

இசை நேர்த்தியை
நீ காட்டும் பூக்கள் கொண்டிருக்க
இலவம் பஞ்சு இன்முகத்தில்
எதுகை மோனை வாசம்

உவமைக்கு உயிர் ஊட்டும் நீ
என் வகைமைக்கெல்லாம்
வாக்கியம் மீட்டுகிறாய்

நந்தவனம் நீ உடன் இருக்க
நாரைக் கால்களிலும் சிறகு தான்
உன் மடியில் நான் கிடக்க

அதிசயம் என்னவெனில்
ஆதிமகள்
பாதியில் வந்திருக்கிறாள்

அந்திமாலை சூரிய பொன்னொளியில்
உன் மந்திர புன்னகை
சந்தம் ஏது மௌனம் போதும்
நீ காதலின் மாதவி

வேதங்கள் இனி ஆறு
ஐந்து காதல்
ஆறு நீ.

  • இமயமலையில் நெல்லாகு

தேநீரில் உப்பு போட்டு விட்டாய்
திகட்டுகிறது இதயக் கோப்பை
இப்படி இனிக்கிறது ரசம்
எப்படி ருசிக்குமோ மறுசோறு
நேர்கொண்ட பார்வையில்
குறுக்கு வெட்டு வீதி
நாயாகினும் தாலாட்டுதே வால்
நெத்திலிக்கு நெய் வாசம்
புத்தி கெட்ட காதலே நிம்மதி
நிறுத்தி எடுக்கும் ஸ்கூட்டிக்கு
சிறகுண்டு
பஞ்சரான மூளைக்குள் உன் பேர்
சிக்குண்டு
உன் முற்ற துளசிக்கு
என் முற்றும் துறந்த நிலை
உளறுகிறேன்
பட்டாம் பூச்சியாய் போ
உறைகிறேன்
இமயமலையில் நெல்லாகு
ஜென்மங்கள் தாண்டி
ஒரு குடம் நீர் ஊற்று
தவம் களைந்து தாகம் எடுக்கட்டும்
நையப்புடைத்தலில்
நாத்திகம் இல்லை
கற்பூரத்தை என் கண்களுக்குள் போடு
நிறை நேர் துல்லியத்தில்
நித்திரைக்கு முன்னும் பின்னும்
உன் நிழல் என் சாய்ந்த நாற்காலி
தந்திர மந்திர சாக்கு போக்கெல்லாம்
கடவுள் பிசாசு குணம்
சாவடி சகியே நீ ஆறடி ஆற்று நீர்
உன் பீசாவில் இழுபடும் நூலாகிறேன்
நன்றாக மென்று முழுங்கு


 

About the author

கவிஜி

கவிஜி

கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார்.
4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
|
ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website