யாராவது வரையுங்கள்….!
அங்கொருத்தி
காத்துக்கொண்டிருக்கிறாள்
அவள் காத்திருப்பின் வசம் கொஞ்சம்
அழுகையும் கொஞ்சம் மௌனமும் இருக்கிறது
அவள் பூந்தோட்டம் வழியே விரும்பி
விசும்புவது காற்றில் கலந்து விடத்தான்
காற்றின் திசைக்கு அவள்
விரல்கள் முளைத்திருப்பது தனித்த அத்தியாயம்
கவிதை கொத்துகளோடு
கரையோரம் காலாற நடந்து நடந்து
சில நாட்களில் காலம் தாண்டியும்
வெகுதூரம் சென்று விடுகிறாள்
யாரிடமும் பேச சொல்ல கேட்க
ஒன்றுமில்லை என்பவள் எப்போதாவது
ரோஜாக்கள் வளர்ப்பதுண்டு
அதில் ரோஜாவாகவும் வளர்வதுண்டு
அவள் அசைத்து பார்க்கும்
கொய்யா மரத்தில் தான்
அவள் சொப்பனங்கள் பூத்திருக்கின்றன
அவளை சொக்க வைக்கும் காகங்களும்
அவசரத்துக்கு விலா எலும்பை உருவி தரும்
தத்தை வித்தை அவள்
புல்லாங்குழல் இசைக்கு புது விதி அது
கூழாங்கற்களின் தனிமையோடு
தவம் கலைந்து கொண்டே இருப்பவள்
வேண்டுவதெல்லாம் மாதம் இரண்டு
பௌர்ணமியும் வாரம் நான்கு நட்சத்திரமும்
யாராவது வரையுங்கள்….!
வாலாட்டும் நிழல்.
உதிர்ந்த இலையில் கையளவு மரம்
கலைந்த கிளையில் காற்றளவு இலை
காற்று நகர்வதை
நொடி தோறும் வாது கொள்கிறது
பொந்தில் நுழைந்த வண்டை
கண்களாக்கி பூட்டிக் கொள்ளலாம்
பூட்டவிழ்ந்து தாகம் தாகமென்ற வேர்களே
தொண்டை நிறைய அள்ளிப் பருகுங்கள்
ஆழம் பறந்து பருக பருகவே
மேலெழும் தன்னிச்சையை வெளி எனக் கொள்க
ஊர்க்கோடி தனிமைக்கு தலை விரிந்த
காலத்துக்கு முன்னூறு வருடங்கள்
தானுமற்று நானுமற்ற ஒற்றை மரத்தின்
தவத்தடியே ஆயிரம் இளைப்பாறல்கள்
ஓராயிரம் பூதங்களும் ஒற்றை புத்தனும்
அடிக்கடி வந்து போவதுண்டு
நகர்ந்து விட்டு திரும்பி பார்க்கிறேன்
நகராத போதனை தலையாட்டி வா என்கிறது
வாலாட்டும் நிழலுக்குள் நன்றியுள்ள நாய்
மிகச்சிறிய கதை.
உலகம் நான்கு சுவர்களால் ஆனது
மின் விசிறியே துணை
மீந்திருக்கும் கட்டிலில்
மிச்சம் தான் நான்
நகர்வலம் அற்ற
மனம் சுருங்கும்
மனவலம் அற்ற கணம்
இன்னும் சுருங்கும்
தவம் என்பது கட்டிலுக்கடியே
திடீர் தாக்குதல் என
ஒரு நடுநிசி துள்ளல்
பிறகு கனவென அறிகையில்
இன்னும் பதட்டம்
மற்றபடி
வந்து போகும் அலைபேசி
அழைப்புகளுக்கு
முகக்கவசம் தேவையில்லை
எல்லாம் மறந்தது போல இருக்கும்
நினைவுக்கு நித்திரை
மாத்திரை மாத்திரையாய்
நின்று மென்று நன்று
நிதானித்து கடக்கையில்
இன்னும் இரண்டு நாட்கள்
மீதமிருந்தன
பொதுவில் கிடக்கும்
இந்த மிகச்சிறிய கதைக்குள்
கதவைத்தான் அடைத்தே
வைத்திருக்க வேண்டியிருக்கிறது
விடுமுறை தீர்ந்து விட்டது.
காற்றின் உள்ளே
இலையின் வெளி
உளியற்ற போதும்
சிலை செய்யும் மரம்
காணும் அருவியில்
விழுந்து புரளும் புன்னகை
கடந்த பிறகும்
நதி மூடா கண்கள்
வெயில் நிலவில் சூரிய குளிர்
வெண்மேகம் பருகின
மலை உச்சி தூரம்
காட்டு பூக்கள் கவிதை தோட்டம்
ஆட்டுக்காரி அலர்மேல் பேரு
சிறுமழை நடனம்
இடையே துளிகளின் கரணம்
ஒவ்வொரு வளைவிலும்
காது பூக்கும் பேருந்து
விடுமுறை தீர்ந்து விட்டது
வீடு திரும்பி கொண்டிருக்கின்றன
புகைப்படங்கள்