cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

மலர்விழி கவிதைகள்


  • அமரரான அமைதி

 

கிளிஞ்சல் சேகரித்துக் கொண்டிருக்கும் சிறு கைகளின் நிழலில் வெடிக்கிறது குண்டு

தன் வம்சத்தை தவறவிட்ட கோழியின் சிறு முட்டை

பெட்ரோல் விலையை விழுங்கி ஜீரணிக்கிறது

குருவி சேகரித்த சிறு புழுவைப் பறித்துக் கொண்டு 

பறக்கிறது பஞ்சப் பருந்து

உயிரின் பதுங்குகுழியாகிறது வயிறு

கண்ணீரின் சுவடு வழியே அலைகிறது

பசியின் கால்கள்

கைவிடப்பட்ட படகின்

உலர்ந்த பாசியாகிறது நாசி,

 

வெறும் கைகளையும் துப்பாக்கிகளையும் வைத்துக்கொண்டு

பூமியின் ரேகைகளை ஒவ்வொன்றாய் அழித்து விட்டு

நீங்கள் நிலைநாட்டப் போகும் அமைதி அமரராகி 

பல பூர்ணிமைகள் 

தொலைந்து விட்டது.


 

  • அன்பினால் செய்த அணிகலன்

 

என் மீது சாரல் தெளித்து

நான்தான் மழை தருபவன் என்றான் மகன்.

 

என் கை சுமந்த சிறு இசைக்கருவிகளை

உடைத்து விட்டேன் என்கிறாள் மகள்.

 

அந்த உடைந்த இசைத்துளி வளையல்களை அடுக்கி  

இங்கே பார் உடனடி வானவில் என்றேன் நான்.

 

மழையும் வானவில்லுமாய் இருவரும் வியக்கிறார்கள்

வண்ணங்களை தொட்டுப்பார்க்க வேண்டுமானால் என்னைத் தொடு என்கிறேன்.

 

என் கன்னம் கிள்ளி கொஞ்சம் சிவப்பு எடுத்துச் செல்கிறாள் 

கட்டியணைத்து என் வாசத்தோடு நடக்கிறான் மகன்.

 

இப்படித்தான் அன்பினால் செய்த  அணிகலன்களை 

ஒவ்வொரு நாளும் அணிகிறேன்


 

  • பச்சைக் குழந்தைக்காரி

 

கைகளில் இருக்கும் 

சிறு வயிறுகளுக்காக.

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின்

பாத்திரங்கள், துணிகள்

வீடு ,கழிவறை 

என எல்லாவற்றின் நேற்றையும் இன்றென துலக்கிவிட்டு

நிமிர முயற்சிக்கையில் 

மின்சாரம்  தாக்கி கீழே விழுகிற

சிறு குருவியைப் போல

ஆடை தொடுகிறது மாதவிடாய்க் குருதித்துளி


                     – 

About the author

மலர்விழி

மலர்விழி

கவிஞர் மலர்விழி பெங்களூரில் வசிக்கும் மென்பொறியாளர், கவிதைகள் எழுதுவதோடு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். ஓவியங்கள் மீதும்  வரைவதிலும் மிகுந்த ஆர்வம் உடைய,
இவருடைய கவிதைத் தொகுப்புகள் :
’விடாமல் துரத்தும் காதல்’ (எமரால்டு பதிப்பகம்),
“ஜூடாஸ் மரம்” (வேரல் புக்ஸ் ),
மற்றும் மலர்விழியின் மொழிபெயர்ப்பில் ‘அகாசியா மலர்கள்’
- பன்னாட்டு மொழிபெயர்ப்புக் கவிதைகள். (வலசை பதிப்பகம்0

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website