cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 14 கவிதைகள்

கவிஜி கவிதைகள்

கவிஜி
Written by கவிஜி

  • ரமேஷ் என்கிற ஆட்டு மூக்கன்

அவன் பேசிக் கொண்டிருந்தான்
யாரிடம் பேசுகிறான்
என்ன பேசுகிறான்
எதுவும் புரியவில்லை

குளிர்கால காலைப் பனிக்குள்
ஒளிந்து கொள்ள
முற்படுவதாகவே
இருந்தது அவனின் இருத்தல்

ஆட்டைப் போல அடிக்கடி கத்தும்
அவனின் செயலும் முக பாவமும்
தவம் செய்யும் மரத்தடி நிழலாய்
தெரியும் எனக்கு

தொடுவானம் இதோ
தொட்டு விடுவான் போலத்தான்
வீரனடையில் பாவமாய் இருப்பான்

அவன் கனவுகளை எட்டி பார்க்க கூட
எவருக்கும் தோன்றவில்லை
அவன் பேசியது எவருக்கும் கேட்காத
பொழுதுகள்

கவனம் அற்றவன் கள்ளம் அற்றவன்
மௌனமாய் அழுதிருக்கும்
நிம்மதி தந்த தூக்கு கயிறு

உருகாத காலைப் பனிக்குள்
ஒளிந்து கொண்ட அவன்
எல்லாருக்குமானவன்

இனி அவன் கடந்த
பாதைகளில் யாருமற்ற ஆடு ஒன்று
அனாதையாய் திரியும்…….!


 

  • அவன் கனவுக்கு இவன் கண்கள்

தலையணையில் தலை
இருக்காது
இடது கால் சுவர் உடைக்க
முயற்சிக்கும்
வலது கால் அப்பாவின்
வயிறைப் பதம் பார்க்கும்
அவ்வப்போது நா சப்புக்
கொட்டும்
பாதிக் கண்கள் மூடும்
மூடிக்கொண்டே திறக்கும்
திடும்மென வரும் சொற்களில்
அன்றைய பள்ளி தவழும்
படாரென வலது கை
அப்பாவின் தலை தட்டும்
இடது கை பின்னாலிருக்கும்
வாஷிங் மெஷினில் டம்மென்று
மோதும்
எப்போதாவது நிகழும்
சிறுநீர் கழிப்பில் அப்பாவும் நனைந்திருப்பார்
காலையில்
கனவிலிருந்து எழுந்திருப்பான் குழந்தை
அவன் கனவைக் கண்ட அப்பா
அப்போது தான்
கண் அசைந்திருப்பார்….


  • நிற்க…..!

முன்னிருந்து
தோன்றுவதையெல்லாம்
நான் பின்னிருந்து யோசிக்கிறேன்

அடுத்த பத்திக்கு செல்லும் முன்
முந்தின பத்தியை
நான் மறைக்க வேண்டும்

மலர்களின் கரங்களை குவித்து
இதழ் செய்யும் எனக்கு
மிச்சமும் புது எண்ணம் தான்

நகல்களின் நனவோடைக்கு
சற்று முந்தியோ சற்று பிந்தியோ
ஓர் ஓடையை செய்து முடித்திருப்பேன்

பின்பு எல்லாமே முன்னிருந்து
தோன்றுவது தான்
பிறகு எல்லாமே பின்னிருந்தும்
யோசிப்பது தான்

அதைத்தான் செம்மாந்த சிறு ஓவியக்
கூட்டிலிருந்து எட்டி எட்டிப் பார்த்துக்
கொண்டிருக்கிறேன்

முன்பொருமுறையும்
இது நிகழ்ந்திருக்கிறது

நிற்க…..

ச்சு ச்சு என விரட்டும்
குருவியோ பறவையோ
உங்கள் விருப்பம் தான் நான்….!


  • நீ நான் நாம்

கீழ்ப்படிதல் எல்லாம் வேண்டாம்
கணக்கு படிந்தால் போதும்
முடிந்தால் சமைப்போம்
இல்லையென்றால்
ஸ்விக்கி இருக்கிறான்
வீடு பெருக்குவது பேசிக் கொண்டே
இருவரும் செய்து விடலாம்
அவரவர் கனவை புத்திசாலித்தனமாக
மறைப்போம்
காப்போம்
இணைப்போம்
இயல்பின் நாளென இருக்கட்டும்
இசையோ இம்சையோ
ராத்திரி அவரவர் ஜன்னலில்
அவரவர் நிலா
கண்ணே கனியே இருக்கட்டும்
அன்பே நட்பேவும் பூக்கட்டும்
என்ன சொல்ல வருகிறோம் என்று
எவரும் கேட்கும் முன்
அதையும் சொல்லி விடலாம்
தாலி கட்டுதல் ஊரைக் கூட்டுதல்
கொடி நாட்டுதல் கற்பு காத்தல்
எந்த வெங்காயமும் இல்லை
மாலை மாற்றி நண்பர்கள் வாழ்த்த
தேனீர் அருந்தி களைந்து போகலாம்
ஆசுவாசத்தோடு தோழமை கொண்டு
ஆத்மார்த்தமாக முத்தமிட
அவரவர் புத்தகம் அலமாரி நிரம்ப
ஆதுர புன்னகை முகம் காண
வாரம் ஒரு முறை காதலிக்க
வாரம் இருமுறை கலவி கொள்ள
தனிகுடித்தனத்திற்கான
சின்ன அறையில்
நம்மோடு நதி போல இருக்கட்டும்
நீயும் நானும்…..!


 

கவிதைகள் வாசித்தவர் : சாய் வைஷ்ணவி

 இந்த கவிதைகளை Spotify App -லும் கேட்கலாம். 

About the author

கவிஜி

கவிஜி

கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார்.
4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
|
ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website