- சித்திரம்
மென் இமைகள் மூடாது சுவர் வெறிக்கும் முன்னிரவில்
இலைக்கனத்து மண்சொட்டும் பனித்துளிகளின் சத்தங்களில்
மௌனமாக கரைந்துகொண்டிருக்கிறது கனவுகள்
கூட்டத்தினிடையே கிடக்கும்
இரையள்ள முடியாத கிளையமர்ந்த காகமென
அரற்றி தீர்க்கிறதென் மோகம்.
வெற்றுக்குகை புகுந்து
சருகள்ளி வீசித்திரும்பும்
ஊளையிட்ட பெருங்காற்றாய் தடதடக்கிறது எனதுடல்.
பெருவுணவு படைத்தப்பின்
வெளிச்சாம்பல் பூத்து
உள் தகிக்கும் தடி விறகின் கனத்த நெருப்புக்கங்குகளாய்
கனன்று கொண்டிருக்கிறது
உனது விரல் தீண்டிச்சென்றதென் தேன் பாகங்கள்.
தாமரைக்குளத்தின் நடனமிடும் வேர்களோடு
மூச்சடக்கி நீரமிழ்ந்து மூச்சுத்திணறும்
தருணங்களாக வந்துபோகிறது
நாம் சந்தித்த தேநீர் பொழுதுகள்.
களைத்தோய்ந்த பொழுதொன்றில்
மேலரும்பிய வியர்வை வடித்து ,
நானறியா வண்ணம் விரல்கள்
தன்னிச்சையாய் தரையில் வனைந்து பார்க்கிறது
உனது புணர்தல் முகச் சித்திரம்.
- பாலம்
மார்பமுக்கி பால்குடிக்கும்
முகம் விலக்கி
முந்தித்துணியில் கண்ணாம் பூச்சாடி வழியனுப்பிய பாலகன்
மூணாம்வகுப்புபோயாச்சு.
நீ இருக்கும் போது பால் கறந்த செவளை
மறுபடி ஐந்தாம் ஈத்துக்கு பொசுப்பாச்சி.
வாசலிலே பூத்துதிர்ந்த புன்னை மரம்
சாலைப்போட இடைஞ்சலென
வேறு வழியில்லாம வெட்டியாச்சி
நம்ம கூடத்தோட
இழைஞ்சோடிய சாலைமட்டம் உயர்த்தி மேம்பாலமாச்சி.
பாலமேறும் பஸ்செல்லாம் புகையுதுய்யா
தாழ்ந்துவிட்ட நம்ம வீட்டுக்குள்ள
புழுதியள்ளி கொட்டுதுய்யா.
வேலியோரச் செடியெல்லாம்
செம் புழுதி பூசி நிக்குதய்யா
வெக்கை பொறுக்காம வேர்வையடங்காம
கதவைச் செத்த நேரம் திறந்துவச்சா
சோறுங்கூட சிவக்குதய்யா,
சாதிப்பூ கேக்கமாட்டேன்
சமோசா கேக்கமாட்டேன்.
நகை நட்டு கேக்க மாட்டேன்
நைலக்ஸ் புடவை கேக்கமாட்டேன்
நீ இங்க வந்து நில்லு போதும்
கண்ணில் விழுந்துருந்தும்
தூசிக்கு ஒரு மாத்துவழி செய்யி போதும்..
- பாரம்
எந்த நேரத்தில் சிதறிவிழுமென தெரியாமல்
சுமக்கும் திறன் மீறி சேர்ந்துகொண்டே இருக்கின்றன
கைமீறும் பாரங்கள்.
சுமை தாங்காது பூமிக்கடியில் பதியும்
எனது பாதங்களைப்பற்றி துளிகூட கவலையில்லாது
சுமக்கும் எனது தலைமீதே உங்கள் கரிசனங்கள்.
கடைசி நேரத்திலாவது கருணை கிட்டிவிடாதாவென
அலைபாய்ந்து உறைந்த கண்களோடுதான் கிடக்கிறது
மாலையணிவித்து வெட்டப்பட்ட ஆட்டின் தலை.
இரை தந்த தாய் அலகென்றே
வாய் பிளந்து உணவுக்குக் கத்திக்கொண்டிருக்கிறது
கழுகின் வாயில் சிக்கிக்கொண்ட புறாக்குஞ்சு.
காக்கை கூட்டில் குயில் வளரும்
நியாயமான பித்தலாட்டங்களாய்,
தெரிந்தும், தெரியாமலுமாய்
நிடறிப்போகின்றன சில உண்மைகள்.
பற்றியிருந்த கால்கள் பறந்துபோனது பற்றி
எந்தத் துயருமில்லாமல் காற்றில் இயல்பாய்
அசைந்துகொண்டிருக்கின்றன
கிளைகள்.
நிமிடத்துக்கொன்றாய்
வண்ணம் மாறி பாவிய எண்ணெய் சிதறிய குளத்துநீராய்
நொடிக்கொரு எண்ணம் காட்டுகிறது நிலையில்லாத மனது..
இந்த கவிதைகளை Spotify App -லும் கேட்கலாம்.