cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 15 கவிதைகள்

கவிஜி கவிதைகள்

கவிஜி
Written by கவிஜி

  • பாறை தேரோட்டி

உரு எது என
புது தினமது சொல்லும்
புது தினம் எது
கணம் கனமென நில்லும்

அது இது தான்
நகமுகமும் சரி நிகர் தான்
இது எது தான்
தவ வரமும் பிறழ் நிலை தான்

நீரூற்றி நெகிழ் பிறை
காண்
பாறை தேரோட்டி எறும்பென
நான்

  • தேநீர் இடைவேளை

சிலருக்கு தேம்பி அழ
நினைத்து பார்த்து சிரிக்கவும்தான்
திட்டமிட
திறனாய்வு செய்ய
தூர தேச கனவு காண
இரவு கடித்த இடம் தொட்டுப் பார்க்க
இளையராஜாவை முணுமுணுக்க
இன்று மாலை நிகழும் சந்திப்பு பற்றி
திகட்ட திகட்ட எதிர் சீட்டுக்காரியின்
முகம் பார்க்க
தேநீர் இடைவேளை
தேநீர்க்கு மட்டுமென்று எவன் சொன்னான்

*
முதலில் வந்தவனுக்கு சுமார் தான்
அடுத்தவனுக்கு அபாரம்
அடுத்து வந்தவனுக்கு
சராசரிக்கு குறைவு
அதன்பிறகு வந்தவன்
ஐரோப்பாக்காரன் போல
அதன் பிறகும் காசு போதவில்லைதான்
இருந்தும் வாய் வலிக்கிறது
போங்கடா
பிறகு சொல்கிறேன்

*
நான்கு இட்லிக்கு காசும்
ஐந்தாவது இட்லிக்கு
கவிதையும் கொடுத்தேன்
வாங்கிக் கொண்டாள்
முன்பொருமுறை
வட்டிக்கு வாங்கி
கவிதை புத்தகம் போட்டவளாம்
கடைக்காரி

*
அவன் எப்பவும் இப்படித்தான்
எகிறி எகிறித்தான் அடிப்பான்
அழுகையினூடாக சொன்னவள்
எதற்கு சிரித்தாள்
என்று தான் குழம்பியது
விவாகரத்து கூட்டம்

  • கானல் நான்

எங்கு எப்போது
என தெரியவில்லை
நகருதல் நின்றது
உலருதல் என்றது
ஊர்ந்து திரிய உருவம் எங்கே
மினுங்குதல் காணோம்
முன்னொரு காலமென்ற
சொல்லும் இல்லைதான் போல
அலைந்து தேடும்
கால்களுக்கடியே
பிளந்து கிடக்கும்
வயிறு காய்ந்த நதியின் விழி
கெட்டித்த ரத்தமென நீளும்
மயானமோ
தலைதூக்கி வெகு நேரம்
காண்கிறேன்
பலகையில் இன்ன நதி என
எழுதியிருக்கும் பெயரில்
கானல் நான் மினுமினுக்கிறேன்…..!

  • மந்திரக்கோலன்

என்னிடம் ஒரு வெற்றி இருக்கிறது
கூடவே ஒரு
தோல்வியும் இருக்கிறது
நான் முன்னும் பின்னும் நகரும்
இரு தலையன்
குதித்து விடுகையிலேயே
பறந்து வருபவனும் எனக்குள் பழக்கம்
நம்புவதை மிக அழகாக
நம்பாமல் இருக்கவும் கற்றிருக்கிறேன்
மறதி மண்டைக்குள் ஆயிரம் நினைவு
பிறப்பை மரணிக்க செய்யும் நான்
மரணத்தை பிறக்க செய்யும் மந்திரக்கோலன்
வெளியே அலைகையில்
உள்ளே நுழையவும் தெரிந்தோன் இவன்
தொடங்குகையில் முடிப்பதைத்தான்
இதோ முடிக்கையில் தொடங்குகிறேன்
என்னிடம் ஒரு தோல்வி இருக்கிறது
கூடவே ஒரு வெற்றியும்….!


கவிதைகளும் குரலும் :  கவிஜி

இந்தக் கவிதைகள் ஒலி வடிவத்தில் Spotify  இல் கேட்க : 

About the author

கவிஜி

கவிஜி

கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார்.
4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
|
ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website