- சலிப்பு
ஒளிந்துகொள்ள இருட்டறையை தேர்ந்தெடுத்து
இருளைக்கண்டு மிரண்டழும் குழந்தமை எனது போதாமைகள்.
வளைவிட்டு வெளிவந்து இரைதேடி கரையோடும்
நண்டுகளையொத்த விரல்களைக் கொண்டு வரையும் எனது ஓவியங்களில்
பிசிறித் துருத்திக்கொண்டிருக்கின்றன
உங்களது அதிகாரங்களை மீறிய வண்ணங்கள்.
புனரமைப்புக்காகச் செப்பனிடும் கோவில்களில்
தங்கியிருந்த புறாக்களுக்கு
வகைப்படுமா
கோபுரங்களை விடுத்து வெறுங்கூடுகளில் வாசம்.
ஓட்டை மண்பாண்டத்தில் இருகைநீட்டி மழைநீர் சேமிக்கிறேன்.
சேகரமாகாது வழியும் நீரில் கரைந்து போகின்றன நம்பிக்கைகள்.
முலையென்று விரல் பிடித்துச் சுவைக்கும்
எனது அறியாமையின் இதழுக்குள்
ஆட்காட்டி விரலைப் புனலாக்கி
கள்ளிப்பாலைச் சொட்டு சொட்டாக இறக்குகிறீர்
வெறித்த விழிகளோடு அதனைச்
செரிக்கப் பழகிக்கொள்கிறேன்.
எடைக்குறைவென சிரித்துக்கொண்டேதான்
பஞ்சுப்பொதிகளைச் சுமக்க வைக்கிறீர்
பாரம் தாங்காது வளையும் எனது முதுகுத்தண்டு
முறிவதைப்பற்றிய கவனம் உங்களுக்கேன்.
இது போனால் இன்னொரு முதுகு அவ்வளவு தான்.
- ஆற்றாமை
குளிர்காற்றில் அலையுறும் அகல் சுடரைக் கையணைத்து
வெம்மை சுகத்தில் கண்மூடி கிறங்குமுன்
பெருங்காற்றடித்து கைச்சுடும் சுடராக மாறிவிடுகிறீர்.
சுகத்தில் மூடிய இமைமீறி புன்னகைத்த இதழில் கரிக்கிறது கண்ணீர்.
கொஞ்சுவதற்காக என் கழுத்தடிசதையை நிடருகிறீர்கள்
என வானம் பார்த்து அண்ணாந்து தலை நிமிரும்
ஆட்டுக்குட்டியென உங்களிடம் மண்டியிடுகிறது
எனது உள்ளொளியும் அறியாமை.
நேசக்கரங்களில் வைக்கோலில் பிணைந்த கயிரடக்கிகழுத்தில்
கட்டிய தடம் புரியாமல்
உறுத்தும் தழும்பெண்ணி இரை எடுக்காமல்
தவிர்க்கிறது எனது சுயம்.
புல்லாங்குழலுக்காக வெட்டப்பட்ட மூங்கிலெனத் தான்
பெருமிதமாய் வளைகிறது மூங்கில் கழி.
சிறுகுழந்தையை கைதொட்டு இரணப்படுத்திய பொழுதொன்றில்
சிதைந்து போகின்றன அதன் கனவுகள்.
அறுவடைக்குக் காத்திருக்கும் நெல்வயலில்
வழிப்போக்கன் அலட்சியமாக அணைக்காமல் வீசிச்செல்லும்
துண்டு பீடி நெருப்பு
உங்களது அடக்குமுறைகள்.
பற்றியெரிந்து பரவி அழிக்கும் கோடைக்காலத்து நெருப்பிற்கு
செய்வதறியாது திகைத்து சாம்பலாகின்றன சுதந்திரப்பயிர்கள்.
- மையல்
வார்த்தைகளின் கொடுக்குகள் தீண்டி மனதுக்குள் நஞ்சேறி ,
உன் முகம் காணாத இரண்டாம் நாளிது.
சிறுகச்சிறுக அரித்தரித்து உருத்தெரியாமல் சிதையும்
எறும்பறித்த பண்டமாக
நாளுக்கு நாள் சேர்ந்திருந்த வஞ்சினங்களின் கூர்முட்களை கையிலள்ளி
என் மீதெறிந்து சென்றிருந்தாய்.
பருவம் தவறி மலர்ந்து மணம் வீசும் ஒற்றை முல்லையாய் ,
மலர்ந்து வருகிறது நிலவு.
பசிக்கலைந்து
நாவை சுழட்டும்
சினைப் பூனையென வயிறு பெருத்து கதவிடுக்கில்
வாலாட்டுகிறது அது.
அதைப் பொருட்படுத்தாத பாவனையில் கண்மூடி ,
எங்கேயோ இசைத்துக்கொண்டிருக்கும்
குழலுக்குத் தலையசைக்கிறேன் நான்.
இருப்பினும்
இருட்டில் மின்னும் அதன் பச்சைநிற பளிக்கிக்கண்கள்
என் புலன் தொட்டு அதனிடம் திருப்புகிறது.
சத்தமில்லாமல் நெருங்கும் அதன் பாதங்கள்
தாவியேறி மடியமர்ந்து என் முகம் நோக்குகிறது.
இளகத்தொடங்கும் எனதுடல் வலி மறந்து வாய்திறந்து,
சுயம் குறைந்து அவனிடம்
இரவுக்கு என்ன உணவு என்கிறது.
நீதான் என்கிறான் அவன்.
மெல்ல வளரும் கூர் நகங்களைப் பதித்துக்கிழித்து
என்னுடல் புகுந்துகொள்கிறது அது.
கவிதைகளும் குரலும் : தேவிலிங்கம்
இந்தக் கவிதைகள் ஒலி வடிவத்தில் Spotify இல் கேட்க :