யாருக்காவது தெரியுமா?
நாளை என்ன நடக்கும் என்று?
நாளை எல்லாம் நடக்கும்
நாளை அழகாயிருக்கும்
சாலை முழுவதும்
கிடக்கும் இறுதி ஊர்வலப் பூக்களால்
தோட்டத்துப் பூக்களை
இனிமேல் சந்திக்க முடியாது!
தோட்டத்தில் இருக்கையிலே
பக்கத்துச் செடி பூக்களுடன்
உரையாடி விடுங்கள்!
காதலிக்கத் தயங்குபவர்கள் தான்
காதலிக்கிறார்கள்
காதலைப் பற்றி தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும்
காதல் முள்ளென்று!!
பூக்களும்
சாக்லேட்டுகளும்
கிரீட்டிங் கார்டுகளும்
காதலின் வெள்ளைத் தோல்…
அன்பும்
விட்டுக் கொடுத்தலும்
சகிப்புத்தன்மையும்
காதலின் ஆழ்மன குணங்கள்!
சன்னல்களின் கம்பிகளை அழுந்தப் பிடித்திருக்கும் விரல்கள்.
பற்களால் கம்பியை ‘நறநற’வென கடித்தபடி
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்
சிறுவனை
எங்கேயிருந்தோ வேடிக்கைப் பார்த்தபடியிருக்கிறது
அவனின் முதுமை!
சந்திக்காத நண்பனோடு
நிகழாத உரையாடலாக
எப்போதும் திறந்து கிடக்கிறது
வயதின் சன்னல்!
கவிதை வாசித்த குரல் : நித்யா.ஆ
Listen on Spotify :