பின்னந்தலையில்
மின்னலாய் கீற்று வலி
ஆள்நிறைந்த
சபைநடுவே
தனியாகிச் சுண்டித்தள்ளும் துளி
பெற்றவரைத் தொலைத்து விட்டு
கூட்ட நெரிசலில் திசை மறந்த குழந்தையின் மருட்பார்வை
யாருமற்ற போது விசும்பிப் பின்
பெருங்குரலெடுக்கும் ஒப்பாரி
ஆணியடிக்கும் அதிர்வால்
விரிசலுறும் தலைச்சுவர்
பொய் சொல்லி வைத்துக் கொண்ட சூட்டுத்தழும்பு நிரடல்
இறுதியான சந்திப்பில்
குற்றவுணர்வற்றுக் குத்திய
நெருஞ்சிச்சொல்
அற்று விழத்துவங்கும் விட்டத்துப்
பெருங்கயிற்று நிலையாமை
கண்மூடிக்கிடந்த
பலிபீடத்தின் சாபத்திற்கு
இவை தான் மிஞ்சியவை.
எதனையெல்லாம்
நான் இழந்து நிற்கிறேன்
எவ்வாறெல்லாம் அசிங்கப்பட்டிருக்கிறேன்
எப்படியெல்லாம் அழுகிய புண்களை ஆறவிட்டுக் கொண்டிருக்கிறேன்
எதற்கெல்லாம் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு குமுறியழுதிருக்கிறேன்
எத்தனைச் சொற்கள் என்னை ஊக்குநுனியாய்க் குத்தின
எத்தனைச் சொற்கள்
வெள்ளரிமென்மையைக் கீறி மிளகாய்த்தூள் தடவுவது போலாக்கின
எத்தனைச் சொற்கள் முழங்கையிடி
போல் சித்தம் கலக்கி இறங்கின
நான் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டவற்றைக் கண்ணுற்றவர்களே
யாதொன்றும் தெரியாது உங்களுக்கு
ஆனால் நான் எப்படியானவள் என்பதின் துலாக்கோல்
எப்போதும் தயாராக இருக்கிறது உங்களிடம்.
ஒரு நாளைக்கு நான்கு முறை
காதலிக்கிறேன் எனச் சொல்லி
உன் இருப்பை ஊர்ஜிதம் செய்து
பார்வைகளால் குளிரூட்டி
கைவிரல் நுனிதனில் பற்றுணர்த்தி
தோளணைத்து ஆதுரங்கடத்தி இப்படி
எதுவுமே சொல்லாமல்
எதுவுமே செய்யாமல்
நடுத் தலை உச்சியில் நிற்கிறாய் நீ
நன்கு குளிர்ந்த நீராய்
நிறைத்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு இடம் விடாது மேலிருந்து வழியும் நீராக குளிரக்குளிர
உனை இறக்கிக் கொள்வதெல்லாம் என் பாடு.
ஊடலின் வெள்ளத்தில் நீந்தியபடி
மூச்சிரைக்க சுட்டுவிரல்
நீட்டுகிறேன் நிதமும்
நின்றெரியாத சுடரானதன் முன்
அப்படி ஒன்றும்
குறைந்து போய் விடவில்லை நான்
அப்படி ஒன்றும்
நிறைத்து விடவில்லை நீ
புறந்தள்ளி, கவனம் ஈர்த்து, அழவிட்டு,
மனங்கீறி, சாகசஞ்செய்து
உன்னிடம் வரவழைக்கும் பிரயத்தனங்களை எத்தனை முறை நிகழ்த்துவாய்
இரு! ஏற்றுக் கொள்ளுதலுக்கும்
தூக்கிப் போடுதலுக்குமானவை
என்னிடம் வாயு வேகம்
இடைப்பட்ட காலம்தான்
ஆலகாலமாய் தொண்டையில்
தங்கியிருக்கிறது.
கவிதைகள் வாசித்த குரல் : அன்புமணிவேல்.