- பரோட்டா
அம்மாவின் வயிற்றை பிசைந்தேன்
தொப்புள்க் குழியிலிருந்து சிறிய அப்பங்களைத் தந்தாள்
அப்பங்கள் பரோட்டாவின் மீச்சிறு குழந்தைகளென
முதல் பொய்யை சொன்னாள்
பொய்கள் அவ்வாறுதான் வளரத்தொடங்கின
பரோட்டாவைக் காட்டி சோறூட்டினாள்
நிலவென்று பொய் சொன்னாள்
வாயைத்திறந்த பொழுதெல்லாம்
பரோட்டாவை பிய்த்து திணித்தபடி
“பசியாது பசியாது”என்றாள்
அப்பாவின் லாரி முழுக்க பரோட்டா வாசனை
சால்னாவில் ஊறவைத்து தின்றுவிட்டு
நானூறு கிலோமீட்டர் நிற்காமல் ஓட ஓட
விபத்தான அன்று அப்பாவின் பிரேதம்
சால்னாவில் மூழ்கிய
மிகப்பெரிய பரோட்டாவை ஒத்திருந்தது
அதன் பிறகு ஊரின்
மிகப்பெரிய பரோட்டாவை தயாரிக்கத் தொடங்கினோம்
அதனுள்ளேயா நானும் தங்கையும் தம்பியும்
நாய்க்குட்டியும் பூனைகளும் ஒடுங்கிக்கொள்ள
எரியும் பனைமரங்களில் வாட்டி வாட்டி
மரவட்டையாகச் சுருட்டி
ஷவர்மா என்ற பெயரில்
அம்மா விற்கத் தொடங்கினாள்
அம்மா என்னை அரசாளப் பிறந்தவளென்பாள்
நாளை அரசாளும்போது
பரோட்டாவை தேசிய உணவாக அறிவிப்பேன்
சாலையெங்கும் சால்னா பந்தல் அமைப்பேன்
உறவாட வரும் அயல் நாட்டு தூதுவர்களுக்கு
பரோட்டாவை பரிசளிப்பேன்
ஒருவேளை
கடவுளாகிவிட்டால்
மரங்களில் விளையும் பரோட்டாவையும்
மழை பொழியும் சால்னாவையும்
அற்புதங்களாக நிகழச்செய்வேன்.
- ஐங்கோணம்
செங்காற்று ஓய்ந்து தெளியும் நிலத்தில்
மைக்ரோ புள்ளிகளென நகரும் தலைகள்
ஒரு கங்காணியின் சொடுக்குக்கு நடுங்குவதை காண்
இடம்பெயரும் வறட்டு நத்தைகளின் பிசுபிசுப்பு
சுடும்மணலில் ஒட்டிக்கொள்வதுபோல்
நினைவுகளை பெயர்க்க வழியற்று
கால்நடைகளின் கயிற்றோடு மட்டும் நகர்கின்றன
ஒட்டகத்தின் கால்கள் புதைந்து எழும் பூமியது
சில பிணங்கள் முற்றிலுமாக அழுகமறுத்து
கழுகுகளின் மூக்குகள் தசைகளால் சூழ அவை
பறக்க வலுவின்றி தவழ்ந்து போகின்றன
துண்டிக்கப்பட்ட கையொன்றில்
இறுகப்பற்றியிருக்கும் மரப்பாச்சியின் கண்களை
திறந்து மூடுகிறது செங்காற்று
செங்காற்று வீசி போர்வையைத் தூக்குகிறது
களத்தில் எழுதிவைக்கப்பட்டிருந்த வாசகங்களின் மீது
எரியும் கண்ணாடிக்குடுவைகள் பறந்துவந்து விழுகின்றன
துப்பட்டாவின் முனை எரிகிறது
தூக்கி வீசுகிறாள்
மேற்சட்டை எரிகிறது
தூக்கி வீசுகிறாள்
கால்சட்டை எரிகிறது
கழட்டி வீசுகிறாள்
அவள் உடல் ஆயுதமாகும்போது
நூற்றி நாற்பத்திரெண்டாம் எண் சட்டம் போடப்படுகிறது
பூர்வகுடிகளின் சாம்பலாக்கப்பட்ட நிலத்தின் மீது
தியானவகுப்பு நடக்கிறது
வெள்ளை லினன் ஆடையணிந்த பெண்ணின்
நிறுத்தமுடியாத விக்கல்களால் கேவிக்கேவி சாய்கிறாள்
கடந்து போகிறது ஒரு நெடிய செங்காற்று
வனத்திலிருந்து கடத்திவரப்பட்ட ஆண்யானைக்கு
வித்தைக்கூடத்து பயிற்சிக்காரன் நீர் புகட்டுகிறான்
சவுக்கினால் விளாசியபடி
கால்களை மரச்சட்டத்தில் வைக்கவும்
தும்பிக்கையில் பந்துகளைப் பிடிக்கவும் பழக்குகிறான்
அதன் நினைவெங்கும்
நிறைவயிற்றோடு தேடியலையும் துணையானையின்
ஏக்கப்பெருமூச்சு செங்காற்றென வீசும்.
கவிதை வாசித்த குரல் : பாலைவன லாந்தர்.
Listen on Spotify :