- டிரெஸ்பாஸ் நடைமேடையில் சிக்னல் விழவில்லை
கடைசியில் தொடங்கியிருந்தேன்
அதனை உணரும் முன்பாகவே சில மாறியிருந்தன
நாம் நம்ப மறுக்கின்ற பொழுதுகளை
உவப்புடன் விரும்பி பரிசளித்துக்கொண்டோம்
அவற்றின் மௌனங்களைக் காத்துக்கொள்ளும் வழிகளை
இதற்கு முன் அடைத்து வைக்கவில்லை
அவசியமற்றிருந்தன
அதுவரையிலான காரணங்களும்
ஒரு முக்கியத்துவத்தைப் பிரித்துவைத்தபடி
சோதனையிடுகின்ற ரணத்தில்
என் பங்கு என்ன
பட்டியலின் அடுத்த வரிசையில் உள்ளதை
ஞாபகப்படுத்த வேண்டும்
மாறாக
ஒரு கேள்விக்கும் அடுத்த கேள்விக்கும் நடுவே
உறைந்துபோய் நின்றுவிட்டோமா அன்பே
நடுவிலிருந்து சொல்லியிருக்க வேண்டியவை
தொடக்கத்திலிருந்தே
அங்கிருந்திருக்கவில்லை
அவையோ முதலில் அனுமதித்து ஒரு கடைசியை மட்டுமே
- முடிவிலி ஆகிறோம்
பயணத்தின்போது கூடவே ஒட்டிக்கொண்டு வருகிறது
அந்தி வெயில்
பொன்மஞ்சள் நிழலை ஜன்னல் கம்பிகள்
குறுக்கே அறுத்துப் போடுகின்றன
நினைவில் பொழியும் மழைக்காற்றை
கைப்பை திறந்து எடுத்து விரித்து வைத்துக்கொண்டேன்
அதன் ஓரப் பிசிறுகளில்
நீ இடைவிடாமல் துடித்து துடித்து உதறுவதை
ரசிக்கிறேன் இப்போதும்
நானற்ற உன் பயணத்தில்
துணையாக அனுப்பிவைக்க சொற்கள் உண்டு எப்போதும்
ஆனால்
தனித்தலையும் ஓர் இலையென
உன்பாட்டிற்கு நீயுன் வனத்தில் திரிவாய்
சொற்கள் வௌவால்களைப் போல
எங்கோ உயரத்தில் பசியுடன் தொங்கிக்கொண்டிருக்கும்
இன்னும் இன்னும் என நீளும் இரவின் பழுத்த கண்களை
கனவு கண்டபடி
இந்த அந்தி வெயிலை சபித்தபடி
- நீ எங்கிருக்கிறாய்
பூனைகள் எனது இரவைக் கவ்விக்கொண்டு
விளக்கொளி இல்லாத சாலைகளைக் கடக்கின்றன
அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்ளவில்லை
பங்கிட்டு பிரித்துக்கொள்ள சமாதானங்கள் இருக்குமோ
என்னவோ
அவற்றிடையே நகங்கள் மற்றும் கூறிய பற்கள்
அதுவும் போதாமல் சந்தேகக் குரலில்
ஒரேயொரு குற்றச்சாட்டு
கவுச்சி வாடையோடு அந்த இரவு
காலடியேலேயே ரொம்ப நேரம் கிடக்கும் என்று
நினைத்தும் பார்க்கவில்லை
சாவித்துவாரத்தின் வழியே அசைந்த வெளிச்சத்தில்
ஏமாந்திருந்தேன்
காத்திருப்பின் பெருமூச்சில் பசலை நாணலின்
பச்சைய நெடியில் அது நீயென
அசந்துவிட்டேன்
பிறகு
கவர்ந்து போவதற்கு ஏதுவாக வசைகள் பாக்கியிருந்தன
நிராசைகளை செதில் நீக்கி சிறு கற்களை
நிரடியபோது
மண்டைக்கனத்தில் அவை நான் என்றே புடைத்திருந்தன
கதவைத் திறந்து பூனைகளை அனுமதித்த பிறகு
இங்கு நீயும் இல்லை
நானும் இல்லை
கொஞ்சம் மியாவ்கள் நிறைய கவுச்சி
கொஞ்சம் வசை
நிறைய பொல்லாப்பு
- தற்காலிகமானது
எப்போது வேண்டுமானாலும் விடைபெற்றுக்கொள்ளலாம்
என்கிற நம்பிக்கையில்
கால் ஷூவின் லேஸ் துளைகளில்
வாக்குறுதிகளை நுழைத்து
பட்டாம்பூச்சி முடிச்சிட்டு வைத்திருக்கிறேன்
அதன் தலையெழுத்து என்பது
நீளும் எனது அவதூறுகளின் சாலைதோறும்
சேர்ந்து அலைந்தாகவேண்டும்
கைம்மாறாக
ஒவ்வொரு வாசலிலும் விடைப்பெற்றுக்கொள்ளலாம்
அதன் விளைவு
கவிதைகள் வாசித்த குரல் : அன்புமணிவேல்
Listen on Spotify :