cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 17 கவிதைகள்

குமரகுரு கவிதை


கராத இலைகளை வருட தென்றல் காத்திருக்கும் பொழுதிலொரு
அலை எழுகிறது,
சிப்பிகளைத் துப்பிவிட்டு
மீண்டும் கடலுக்குள் சென்று விடுகின்றது
உப்பு கரிக்கும் கடல் நீர்
நிலவை விழுங்கிவிடும் பகலின் மடியில் உறங்கிய படியிருக்கும் இந்நாளின்
பெருத்த மௌனம்
மரணித்தவனுடனான கடைசி உரையாடலாக
பதிலற்றுக் கிடக்கிறது.
கொக்குகள் நீந்துவதாகத் தோன்றும் அந்தியின் வானத்தில்
சிவந்து கிடக்கும் நட்சத்திரங்கள்
இரவில் மின்னுவதையொத்த
பளீர் வெளிச்சம்
திடீரென்று எங்கிருந்தோ புறப்பட்டு
கண்ணீராய் விழுகிறது.
எல்லோரும் விழுந்திருப்பார்கள்,
யாராவது எழுந்திருப்பார்கள்
கழுகுகள் வட்டமடித்துக் கொண்டிருக்குமிடத்திற்கு
நேராகக் கிடக்கும் ஒரு உயிரற்ற உடலென
எப்போதும் கிடக்கும் நிர்ப்பந்திக்கப்பட்ட அமைதி
சங்குகளுக்குள் ஒளிந்து கொள்கின்றன.
குரல்கள் எங்கே?
ஒலிகள் எங்கே?
இப்போதைக்கு இரண்டு தலைகளும்
சில நாக்குகளும் மட்டும் அவர்களிடம் உண்டு.
எத்தலையில் எந்நா பொருந்தாதோ
அத்தலையில் அந்நாவைப் பொருத்திச்
சுழற்றி சுழற்றியடிப்பார்கள்
துவண்டு போன சொற்கள்
மூச்சு வாங்கி கிடக்கும்.
சொற்கள் துவளத் துவள
நீளும் நாவின் நீளத்தில்
ஆலவிழுதில் தொங்கி விளையாடுவது போல்
விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
எதிர்க்கவியலாதவர்களிடம்
சிக்கிக் கொள்கின்ற
வாக்குவாதங்களைப் பிடித்து உலுக்கி
மாங்காய்களெனப் பொறுக்கியும் சென்றுவிடுகிறார்கள்.
காலந்தோறும் அகாலமாய் மரணித்துப் போகும் உயிர்களைப் பற்றிப் பேசி சிரிப்பவர்களிடம்
கருணையை எதிர்பார்ப்பதும்
சாதாரணமாய் இரவெல்லாம்
ஓலமிடும் ஓநாய்களிடம்
உயிர்ப்பிச்சை கேட்பதும் ஒன்று.
யாரிடமும் இல்லாத
ஒலியொன்று
எங்கேயோ இருக்கிறது.
யாருக்கும் தெரியாமல்
பொருளற்றுக் கிடக்கிறது.
தூக்கு கயிறுகளிறுக்கியத் தொண்டைகளுக்குள்ளிருந்து
தப்பிக்க முடியாமல் தவிக்கிறது.
தோற்றுத்தான் போங்களேன்…
தோற்காமல் வாழ்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது?
தோற்காமல் ஜெயிப்பதில் என்ன மகிழ்ச்சிப் பொங்கிவிடப் போகிறது!
மாரியம்மன் கோவில்
அரசமரத்துக் கிளையில்
தொங்கும் தொட்டில்களுக்கு நடுவிலொரு காகம்
பொரிக்கவேப்பொரிக்காத முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருக்கிறது.
தொட்டில்கள் காற்றில்
ஆட இதோ தென்றல் வந்துவிட்டது.
நாளையும் வரும்,
வாய்ப்புகளும் வரும்,
வெற்றியும் வரும்…
மரணத்தால் வாழ வைக்க முடியாது
போத்தலுக்குள்ளிருந்து நுரை தள்ளி கொண்டாட்டமாய் வெளியேறும்
பீராக,
வெடித்து வெளியேறிக் கொண்டாடுவோம்…
தோல்விகள்
அணிகலன்கள்!
வெற்றி வெறும் போதை!!

About the author

குமரகுரு

குமரகுரு

சென்னையிலுள்ள ஐ.டி துறை நிறுவனமொன்றில் பணிபுரியும் குமரகுருவின் கவிதைத் தொகுப்புகள் இதுவரை தமிழில் இரண்டு ஆங்கிலத்தில் ஒரு தொகுப்பும் வெளியாகியிருக்கின்றன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website