நேரத்தை நிரப்பிக் கொண்டிருந்தப்
பொழுது,
சாளரம் திறந்து
விரித்த விழிகளில் கட்டிட
அடுக்குகளிடையே
கானல் நீருமற்று
நீளும் சிமெண்டு ரோட்டின்
வாகனத் தடயங்களை எண்ணமிட்டிருந்தது.
தகித்த ஆதவனின்
வீச்சுகள்
குளிர்பதனப் பெட்டிகள் வெளியிட்ட
உஷ்ணக் காற்றை
நெகிழச் செய்ய
முயற்சித்துக் கொண்டிருந்தன.
வெப்பத்தின் தாக்கத்தில்
நிழலும் ஒடுங்கிக் கொண்டிருந்தது
அண்ணாந்து பார்க்கையில் நீளும்
தொண்டையின் வறட்சி கடந்து
தெரிந்தது
அகண்ட சாளரத்தின் வழி
நீண்டு அசைந்த சிறுமியின் தளிர் கை!
இடுக்குகளிடையே கொஞ்சமாய்
தெரியும் வானத்தில் மேகமூட்டம்
உலர்ந்தப்
பொழுதுகளை
நதி நீராடியக் கற்களாக
விதி வசமிட
சொற்களை
இட்டுக் கொண்டிருநதப் போழ்து
இரவின் ஒரு சொட்டும் விழுந்திருக்கவில்லை
விழி நீண்ட தொலைவில்
வெறித்தச் சாலை கருமையாய்..
சக்தியேற்றிய கலனுக்குள்
பயன்படுத்தப்படாத பல்லாயிரம் சொற்கள்
உருகி வழியும் நாற்றத்தில்
இப்பொழுதின் நறுமணம்
கரைந்து கொண்டிருந்தது
- நாவில் சரஸ்வதி நற்றுணையாக
குடையும் தொடர் சிந்தனை
வலி நோவுற
சீரற்று சிதையச் செய்கிறது வழமைகளை..
சொல் பிறக்கும்
கோலினைக் கைக்கொள்ளென
வகுத்தக் கோட்டினை நினைந்து
செய்யா வினைக்குச் சுமக்கும்
இடர் தீர்ப்பாய்
நேர்த்திக்கடனின்றி
நினைத்தது நடத்தென
திரு ஆவினன் குடியான்
திருவடி மருகினேன்
கவிதைகள் வாசித்தவர் : ப.இளையராஜா.
Listen on Spotify :