cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 18 கவிதைகள்

தேவிலிங்கம் கவிதைகள்


  • ஏக்கம்

வெய்யில் காலத்து வெக்கை பொறுக்காமல்
நள்ளிரவில் நாவை நீட்டி
காற்றின் ஈரப்பதம் தேடும் குட்டிஞமலியாய் ,

நெடுங்காலம் இரையெடுக்காமல்
அசையாது இருப்பிடத்தில்
குளிர்காலத் தூக்கமேற்கும் வெண்பனிக்கரடியாய்,

கைப்பிடித்து நீ செய்துச் சென்ற சத்தியத்தின்
ஓடத்திலேறி ஆசைக்கும் ,நிராசைக்குமிடையில்
தள்ளாடித் தள்ளாடி
சுரத்தின்றி பயணிக்கின்றன எனது பொழுதுகள்.

உன் திரவியம் தேடும் கனவில்
சிறிது சிறிதாக உலர்ந்து பின்
முழுவதாக மறையும் நீர்ச்சித்திரமென
என் நினைவுகள் உன்னில் மறையத்தொடங்கியிருக்கலாம்
மீண்டும் நினைவுகளால் நனைத்துக்கொள்

புறாக்கள் பறக்கும் கோபுரங்களுக்கடியில்
கைப்பற்றிய உன்னை மறந்து பறக்கும் பறவையை
ரசிக்கும் என்னை
ரசித்த உன் கண்களுக்கு
ஒருகோடி முத்தங்கள்.

நீ சொல்லிவிட்டுச் சென்ற நமக்கிருவருக்கான பதனீர் சொல்,
இனிப்பை இழந்து காத்திருத்தலின்
சுவையேறிஉனக்கென கள்ளென மணக்கிறது
சடுதியில் வந்துவிடுவாய்தானே!!

  • அரண்மனை

ஏதேனும் ஒருத்தகவலாக
ஆண்மைகுறைவு ,விரை வீக்கம் ..நீலப்படக்காட்சிகள்
என முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட
பழைய பேருந்து நிலைய கட்டங்களில்
படுத்துறங்கிக்கொண்டிருக்கும் கந்தலுடையணிந்த,
மனநிலைபாதிக்கப்பட்டவர்களின்
மினுக்கங்கள் குறைந்த
கைநிறைய வளையல்களும்,
அழுக்குத்துணி மூட்டைகளும்,
தவறாமல் கைக்கொண்டிருக்கும் குச்சிகளும்,
அவர்களின் கணக்கில் என்னவிதமான அணிகலன்கள்?
எந்த ஆட்சியின் செங்கோல் அது?
நடுநிசி இரவின் வெளிச்சங்களுக்கு புரண்டு படுக்கும்
அவர்களின் நினைவுக்குள்
எங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது
ஒரு அரண்மனை….

  • நிதர்சனம்

ஏய் ராமசாமி சும்மாதான இருக்க
கடைத்தெருவுக்கு வர்றீயா?
ஏய் ராமசாமி சும்மாதான இருக்க ,
இந்த பைய கொஞ்சம் எடுத்துட்டு வாயேன்.
சும்மா தான இருக்க
இந்த புள்ளைய கொஞ்சம் பார்த்துங்களேன்.

சும்மா தான இருக்க
இந்த சாதமும் நேத்து வச்ச குழம்பும் போதும்ல்ல..

சும்மா தான இருக்க
அப்படியே பொடிநடையா போயி
இந்த சாமான வாங்கிட்டு வந்துரு

இராமசாமி இந்த ஒரு மாதமாகத்தான்
கேட்பதற்கு ஆளில்லாமல் சும்மா இருக்கிறார்.
போன மாதம் அவர் மனைவி சீதா இறக்கும் வரை
அவர் சும்மா இருந்ததாக
அவருக்கு நினைவிலில்லை
மற்றவருக்கும்தான்

  • திரை

அந்த நகரின் மத்தியில் இருந்தது செம்மண் புழுதிப்பூசிய அத்தெரு.
சாலை ஆக்கிரமிப்பில் முக்கால் வாசி இடித்த நிலையில்
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வெட்டப்பட்டதுப்போக
சீரற்ற வடிவமுள்ள
பிசிறிக்கொண்டிருக்கும் கேக்கை ஒத்திருந்தது
இடித்தது போக மீந்து நிற்கும் வீட்டின் பாகங்கள்…

காலத்தில் கைவிடப்பட்ட நன்கறிந்த
வாழ்ந்துக்கெட்டவர்களின் உடல்பாவனை போல
வெட்கி ஒரு ஓரமாக தெருவை பார்த்தபடி நிற்கும்
சிதைந்த சுவர்களைக் கொண்டு
பாவமாக
நின்றது அது.

சுவரின் மையப்பகுதியில் மை பூசியிருந்த
பாகங்களுக்கு பக்கத்தில் ஒரு சிறு குமரி
மைத்தொட்டு கீழ் இமை இழுத்து மைப்பூசி
இதழ்குவித்து தனக்கே முத்தமிட்டுக்கொள்ளும்
கண்ணாடி அங்கிருந்திருக்கக்கூடும்..

சுவர் முழுவதும் கருமை படர்ந்திருந்த இடத்தில்
அழகி ஒருத்தி வெளித்தெரியும்
அழகான அங்கங்கள் பற்றிக்கவலையில்லாது
அள்ளி முடித்த கூந்தலோடு
அங்கு எவரையேனும்
தனிமையின் சுதந்திரத்தில்
மனதிற்குள் திட்டியபடியே சமைத்திருக்கக்கூடும்..

எல்லா சன்னல்களும் நிர்வாணமாக நின்றிருக்க
இளஞ்சிவப்பில் நீல நிறப்பூக்கள் வரைந்த
கிழிந்து தொங்கும் திரைச்சீலைகளணிந்த
சன்னலுக்கு கீழே தான் படுக்கையறை இருந்திருக்கூடும்.
ஏனெனில் இத்தனை அழகான துணியில்
திரையிட்டு மறைப்பதற்கு
வேறு என்ன அழகான விசயம்
நடந்திருக்கப்போகிறது அவ்வீட்டில்.


கவிதைகள் வாசித்த குரல் :   தேவிலிங்கம்

Listen On Spotify : 

About the author

தேவிலிங்கம்

தேவிலிங்கம்

வேதாரண்யத்தைச் சேர்ந்த தேவிலிங்கத்தின் இயற்பெயர் விஜிதேவி இராமலிங்கம், இளங்கலை உயிர்ம வேதியியலில் பட்டம் பெற்றவர்.

பல்வேறு அச்சு / இணைய இதழ்களில் இவர் எழுதும் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது. ’நெய்தல்நறுவீ’’ எனும் இவரின் கவிதைத் தொகுப்பை கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

‘கிளிச்சிறை’ எனும் சிறுகதைத் தொகுப்பை வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
ஹரணி

அரண்மனை கவிதை அருமையாக உள்ளது.

You cannot copy content of this Website